Follow by Email

Wednesday, 5 March 2014

புலிகளின் இன்னொரு முகம் -22

நான் சிறைச்சாலைக்குள் சென்றபோது கடந்த சில நாட்களில் கண்டிராத  ஒருவித ஆரவாரத்தைக் கண்டேன். நாம் தங்கியிருந்த ஹோலை சிலர் கழுவிக் கொண்டிருந்தனர். மற்றும் பலர் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர்.

இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் கைதுசெய்யப்பட்டதிலிருந்து கடந்த ஏழு நாட்களாக இந்தமாதிரித்  தண்ணீரைக் காணவில்லை. தினசரி ஒரு குளிப்பும் பத்து தடவை உடம்பு கழுவுவதுமாக இருந்த எனக்கு, அந்த ஏழு நாட்களில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட என் மேனியில் படவில்லை.

சிறைச்சாலைக்குப் பக்கவாட்டில் இருந்த கிணற்றிலிருந்து நீரிறைக்கும் இயந்திரம் தண்ணீரை இறைக்க, அது குழாய் மூலம் சிறைக்குள் வந்துகொண்டிருந்தது. வாரம் ஒருமுறை, சிலவேளைகளில் இரு வாரத்துக்கு ஒருமுறை இவ்வாறு குளிப்பதற்குத் தண்ணீர் தரப்படும் என அறிந்து கொண்டேன்.

அந்த வேளைகளில் அங்கிருக்கும் அனைவருக்கும் பொதுவாக ஒரேயொரு லைஃபோய் சவர்க்காரம் தரப்படுவதும் வழமையாம். ஆனால் சிறைச்சாலையைக் கழுவுவது அநேகமாக மாதத்திற்கு ஒருமுறை மட்டும்தான். இன்று புத்தாண்டாகையால் கழுவுதலும் குளித்தலும் ஏககாலத்தில் நடைபெறுகின்றது என அறிந்தேன்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், நான் உள்ளே போன சமயம் குளித்துக் கொண்டிருந்த அனைவரும் உடம்பில் எவ்வித துணிகளுமின்றி  பரிபூரண நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருந்ததுதான்.

எனக்கு அவர்களைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. ஆனால் அவர்களோ அதைப்பற்றி எவ்வித கவலையும் படாமல் ஆரவாரமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அவ்வாறான நிலையில் குளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளானமைக்குக் காரணம், அவர்கள் அணிந்து வந்த உள்ளாடைகளையோ கொண்டு வந்த துவாய்களையோ புலிகள் பறித்தெடுத்துவிட்டு, சிறைக்கைதிகளுக்கான தமது சாரத்தை மட்டும் உடுக்கக் கொடுத்திருந்தார்கள்.

அந்த சாரங்கள் கூட ஒருவர் மாறி ஒருவர் கட்டி சகிக்க முடியாத நாற்றத்துடனேயே இருந்தன. புதிதாக வரும் ஒருவர் அதை உடுத்தால், உடனடியாக கடி சொறி நோய் வரும். எனக்கு அவ்வாறு வந்து, எனது உடம்பின் முழுத்தோலும் பூரணமாக உரிந்தது என்றால், நிலைமையை விளங்கிக் கொள்ளலாம்.

சில வேளைகளில் அந்த சாரங்களை சிலர் தண்ணீரில் அலசுவதுண்டு. அவ்வாறு அலசினால் அந்த ஈரத்துணியை உடம்பில் சுற்றி உடம்பு வெப்பத்தில்தான் அதைக் காயவைக்க வேண்டும்.

என்னைக் கண்டதும் எனக்கு அருகில் இருந்த பெரியவர், “நல்ல வேளை தண்ணி நிக்கக்கிடையிலை வந்திட்டியள். ஓடிப்போய் குளியுங்கோ” என்றார். அவர் இதைச் சொல்லும்போது நிர்வாணமாக நின்று கொண்டு, பிழிந்த தனது  சாரத்தால் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தார்.

எனக்கோ வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. நான் நிர்வாணமாகக் குளிக்கத் தயங்கினேன். வயதுவந்த பின்னர், ஒருபோதும் அவ்வாறு குளித்த அனுபவம் எனக்கு இல்லை. நான்கு சுவர்களுக்குள் மூடிய கதவின் பின்னால்கூட, ஏதாவது துணி அணிந்து கொண்டுதான் குளித்துப் பழக்கம்.

அதேநேரத்தில் ஒரு கிழமையாகக் குளிக்காததால் குளிக்கவும் ஆசையாக இருந்தது. இன்று தயங்கினாலும் என்றோ ஒருநாள் குளிக்கும்போது நிர்வாணமாகத்தான் குளிக்க வேண்டும். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து உள்பக்கமாக இருந்த அறைக்குள் சென்று சாரத்தைக் களைந்துவிட்டுக் குளித்தேன்.

அந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் (கைதிகள்) நிலையை எண்ணியபோது, தமிழ்த் தலைமைகள் குறித்து அடிக்கடி நான் கேட்ட ஒரு விடயம்தான் நினைவுக்கு வந்தது.

அதாவது “எமது தமிழ்த் தலைவர்கள் ‘தமிழ்மொழி – தமிழினம்’ என்று வாய் ஓயாது பேசிப்பேசி, கடைசியில் தமிழனை ஒட்டாண்டியாக்கியதுதான் மிச்சம்” என எமது கட்சியின் முக்கிய தோழர் ஒருவர் அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இப்பொழுது புலிகளோ எங்களைக் கோவணாண்டிகளாகக்கூட விடாமல், நிர்வாணாண்டிகளாக்கி விட்டார்களே என்றுதான் எண்ணத் தோன்றியது.

இந்த ஆரவாரமெல்லாம் முடிய மதிய போசனம் வந்து சேர்ந்தது. வழமையை விட வித்தியாசமாக அது இருந்தது. வழமையான சீனி போட்ட வெண்பொங்கல் இன்று இல்லை. அதற்குப் பதிலாக சீனி போடாத வெள்ளைச் சோறு. அதனுடன் சேர்;த்துச் சாப்பிட மரவள்ளிக் கிழங்கில் கறியுமல்லாத சொதியுமல்லாத ஒரு திரவம். அதைப் பங்கிட்டபோது அதிர்ஸ்டமிருந்த சிலருக்கு அந்தக் கிழங்கின் சில வேர்கள் கிடைத்தன.

மற்றவர்கள் தண்ணீர்ப் பதார்த்த்துடன் திருப்திப்பட்டுக் கொண்டனர். எனக்கு அருகிலிருந்த பெரியவருக்கு சில வேர்கள் கிடைத்ததால், அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைப் பல தடவைகள் திரும்பத் திருமப் சூப்பிச் சூப்பிச் சாப்பிட்டதைப் பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.

சாப்பிட்டு முடிந்ததும் என்னைப் பார்த்ர்து அவர் சிரித்தார். “கன நாளைக்குப் பிறகு நல்ல சாப்பாடு” எனத் திருப்தியுடன் கூறினார். தொடர்ந்து “எங்கடை பக்கத்து கிழங்கு எண்டால் கற்கண்டுதான்” என்றார்.

இதுதான் சமயம் என நினைத்து நான் அவரிடம், “நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்டேன்.

“நான் தம்பி உடுவில் எங்கடை ஊரிலையும் பக்கத்தை மருதனாமடம், இணுவில் பகுதிகளிலையும் பெருவாரியாக மரவள்ளி போடுறவை” எனக் கூறினார்.

“நீங்களும் செய்யிறனிங்களோ?” என நான் கேட்டேன்.

“இல்லையில்லை நான் சென்.பற்றிக்கிஸ்சிலை படிப்பிக்கிறன்” என்று சொல்லிவிட்டு, நான் மேற்கொண்டு ஏதாவது கேட்டுவிடுவேனோ என்று நினைத்தோ என்னவோ எழுந்து உள் அறையை நோக்கிச் சென்றுவிட்டார். 

எனது விசாரணை முடியும்வரை, என்னுடன் விடயங்களைப் பங்கிடுவதை அவர் விரும்பவில்லை என்பதை ஏற்கெனவே அவர் உணர்த்தியிருந்ததை நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் சில தினங்களுக்குள்ளாகவே அவரது பெயரையும், அவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் உடற்கூற்றியல் ஆசிரியராகக் கற்பித்துக் கொண்டிருந்தவர் என்பதையும் அறிந்து கொண்டேன்.

அவரது புனிதமான ஆசிரியத் தொழிலையும் சமூக அந்தஸ்தையும் எண்ணிப் பார்க்கையில், அவரை அந்த மரவள்ளி கிழங்கு வேரை ஆசையுடன் சூப்ப வைத்த இந்த கேடுகெட்ட புலிகளை மிருக சாதியிலும்கூட சேர்க்க முடியுமா என்றுதான் எண்ணத் தோன்றி

இந்த இடத்தில் எம்மைத் தங்க வைத்திருந்த வதைமுகாம் சம்பந்தமாகவும் சில விடயங்களைக் கூறுவது பிரயோசனமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தச் சிறைச்சாலை யாரோ ஒருவருடைய பெரியதொரு வீட்டை அபகரித்து, புலிகள் அதை தமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்த ஒன்றாகும். இதில் நான்கு பகுதிகள் உண்டு.

நடுவில் உள்ள பெரிய ஹோல்தான் அதிகம் பேர் தங்க வைக்கட்டிருந்த பகுதியாகும். நானும் அதில்தான் இருந்தேன். அதன் வடக்கு நோக்கிய முன்பகுதியில் எமது சிறையின் இரும்புக் கதவும், குறுக்காக ஒரு சிறு விறாந்தையும் உண்டு. அந்த விறாந்தையின் கிழக்குப்புற முடிவில் ஒரு சிறிய அறை உண்டு. அதில்தான் தில்லை நான் அங்கு சென்ற நேரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அந்த அறைக்குள் நாம் போய் வருவதற்கு வழிகள் எதுவுமில்லை. எமது ஹோலின் பின்பக்கமாக  மேற்குப்புறத்தில் இன்னொரு சிறிய அறை உண்டு. அதற்குள் எம்மால் போய்வர முடியும். இதைவிட எமக்குப் பின்புறமாக வெளியே இன்னொரு சிறிய அறை உண்டு. 

இவற்றைவிட பின்பக்கமாக தனியே புலிகளால் புதிதாக விசேடமான முறையில் மிக ஒடுக்கமாகக் கட்டப்பட்ட சில கைதிக்கூண்டுகள் இருந்தன. அவற்றில் கடுமையான குற்றவாளிகள் எனக்கருதப்பட்ட சிலர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு மூன்று மாதம் முதல் ஒரு வருடம்வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பது வழமை என அறிந்தேன். 

அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த மாதகலைச் சேர்ந்த சிவம் என்பவரைப் பின்னர் எமது பகுதிக்கு மாற்றியிருந்தனர். அவர் சுமார் ஆறு மாதங்கள்வரை தனிமையில் இருந்த பின்னர் எமது பகுதிக்கு வந்திருந்தார்.

அவர் ஒரு புலிப்போராளி. அவர் செய்த குற்றம், மட்டுவில் பகுதியில் இயக்க முகாமில் இருந்தபோது, அயலிலுள்ள பெண் ஒருவரை விரும்பி அவருடன் இரகசியமாகத் தொடர்பு வைத்திருந்ததுதான். 

அவர் எமது பகுதிக்கு வந்தபின்னர் சிலர் அவருடன் பேச்சுக்கொடுக்க முயன்றனர். அவர் சில நாட்களாக யாருடனும் பேசவில்லை. எது கேட்டாலும் வாய்திறக்கமாட்டார். யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவும்மாட்டாh. சுவரை அல்லது மிக உயரத்தில் உள்ள யன்னல் கம்பிகளை வெறித்துப் பார்த்தபடி இருப்பார்.

சமூகத்தின் ஒர் அங்கமான ஒரு மனிதனை இயற்கைக்கு மாறாக தனிமைச் சிறையில் பூட்டி வைத்தால், எப்படி அவனுக்கு மனச்சிதைவு ஏற்பட்டு சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப் போவான் என்பதை, அந்த இளைஞனில் அப்பட்டமாகப் பார்க்க முடிந்தது.

அவனை எனக்கு அருகில் இருக்கவிட்டதால், நான் அவனுடன் சதா முயன்று, அவனது மன இறுக்கத்தைப் படிப்படியாகத் தளர்த்தி, இறுதியில் அவனது வாயைத் திறக்க வைத்தேன். பின்னர் நான் அங்கு இருந்த ஆறு மாதங்களிலும், அதைத்தொடர்ந்து கோவிலாக்கண்டியில் இருந்த ஒரு வருடத்திலும், என்னையே சுற்றிவரும் ஒரு நல்ல நண்பனாக அவன் மாறிவிட்டிருந்தான். 

இந்தச் சிறைச்சாலைகள் எல்லாவற்றிலுமாக சுமார் 150 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கைதிகளில் பல வகையினர் இருந்தனர். மாற்று இயக்கங்களைச் சேர்ந்தோரே அதிகம். பொதுமக்களும் பலர் இருந்தனர்.

புலிகளில் குற்றமிழைத்தவர்களும் பலர் இருந்தனர். எம்மைப்போன்ற சிலரும் இருந்தோம். சில சிங்கள – முஸ்லீம் கைதிகளும் கூட இருந்தனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய நபர்களாக இருந்தனர். இதைவிட பல்வேறு இடங்களில் மேலும் பல சித்திரவதை முகாம்களும் சிறைகளும் இருந்தன.

இந்த முகாம்கள் எல்லாவற்றிலும் துணுக்காயிலிருந்த மிகப்பெரிய வதை முகாமை விட்டுப்பார்த்தால், ஆனைக்கோட்டையிலிருந்த இந்த Tank – 2 என்ற முகாமே முக்கியமானது. அதற்கொரு காரணம் இந்த முகாம் காந்தியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தமையாகும்.

புலிகளின் மிகப்பெரிய புலனாய்வு வலையமைப்பில் காந்தி மூன்றாவது இடத்தில் இருந்தான். பிரபாகரன் முழு இயக்கத்திற்கும் தலைவர் என்றபடியால், அவர் கேள்விக்கு அப்பாற்பட்ட ‘தானைத் தலைவர்’. அதற்கு அடுத்த நிலையில் இருந்தவன் பொட்டம்மான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

புலிகளின் புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரையில் பொட்டம்மான் தான் முதன்மை நபர். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த அவன்தான் புலனாய்வுப் பிரிவின் சர்வ உலகத்துக்குமான பொறுப்பாளர்.

இரண்டாவது நிலையில் இருந்தவன் கபிலம்மான். திரிகோணமலையைச் சேர்ந்த இவன், புலனாய்வுப் பிரிவின் இலங்கை முழுவதுக்குமான பொறுப்பாளர். மூன்றாவது நிலையில் இருந்தவன் காந்தி.

இவனும் திரிகோணமலையைச் சேர்ந்தவன்தான். இவன் புலிகள் இயக்கம் பிடித்து வைத்திருக்கும் சகல கைதிகளுக்கும் அவர்களது அனைத்து சித்திரவதை முகாம்கள், சிறைக்கூடங்கள் அனைத்துக்கும் பொறுப்பானவனாக இருந்தான். இந்த வகையில்தான் அவர்களின் ஒழுங்குமுறை இருந்தது. என்னுடன் சிறையில் ஒன்றாகத் தங்கியிருந்த சில முக்கியமான புலி உறுப்பினர்கள் மூலமே நான் இவற்றை அறிந்து கொண்டேன்.

புலிகள் இயக்கத்தில் ஒரு முக்கிய இயக்க உறுப்பினருக்கு இல்லாத மவுசு சாதாரண ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினருக்கு உண்டு. அவர்களுக்குள் உள்நுழைந்து பார்த்தால் புலனாய்வுப் பிரிவுதான் புலிகள் இயக்கத்தையே நடாத்துவது விளங்கும்.

நான் கோவிலாக்கண்டியில் அவர்களது சிறைச்சாலை காரியாலயத்தில் வேலை செய்த காலத்தில், வேறு முகாம்களிலிருந்து யாராவது ஏதாவது அலுவல் நிமித்தம் அங்கு வந்து போனால், பின்னர் நான் அதுபற்றி அங்குள்ள பொறுப்பாளருக்குச் சொன்னால், அவர் திருப்பிக் கேட்பது என்னவென்றால், “வந்தது இயக்கமா அல்லது எங்கடை ஆட்களா?” என்றுதான். ‘

எங்கடை ஆட்கள்’ என்று அவர் கருதுவது புலனாய்வுப்பிரிவினரையே. இவ்வாறுதான் புலிகள் இயக்க உறுப்பினரையும் புலனாய்வுப்பிரிவினரையும் அவர்கள் பிரித்துப் பார்த்து நடந்து கொண்டார்கள்.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அம்புறோஸ் என்ற புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தன் என்னுடன் ஒரு சமயம் உரையாடும்போது, தமது புலி இயக்க போராளிகள் இந்திய இராணுவத்துடனும் அதனுடன் துணை நின்ற இயக்கங்களுடனும் சண்டையில் ஈடுபட்டபோது கைப்பற்றிய ஆயுதங்களைவிட, இந்திய இராணுவம் திரும்பிச் சென்ற பின்னர் தமது புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் மூலம் மீட்டெடுத்த ஆயுதங்கள் இருமடங்கு அதிகம் என்று பெருமையுடன் சொன்னான்.

அன்று பிற்பகல் யாருக்கும் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. எப்படியோ இன்றைய புத்தாண்டு தினம் இரத்தக் காயங்கள் கூக்குரல்கள் எதுவுமின்றி கழிந்தது. விசாரணை செய்யும் புலிப் புலனாய்வாளர்கள் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை, விறாந்தையிலிருந்த யன்னலின் உடைந்த ஒரு கண்ணாடி இடைவெளியூடாகப் பார்க்க முடிந்தது. சிறைக்குள்ளும் வெளியே செல்லும்போது இரகசியமாகப் பொறுக்கி வந்த சிறு கற்களை வைத்து தாயம், நாயும் புலியும் விளையாட்டைச் சிலர் விளையாடுவதை அவதானித்தேன். சிந்தனைகள் வீட்டைச் சுற்றிச் சிறகடித்தன.

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

1 comment:

  1. தொடர்வதற்கு நன்றி, தொடருங்கள்..

    ReplyDelete