Follow by Email

Wednesday, 5 March 2014

புலிகளின் இன்னொரு முகம் -21

தயாபரன் நடாத்த ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையை வைத்து, என்ன  குற்றச்சாட்டில் என்னைக் கைதுசெய்துள்ளார்கள் என அறியலாம் என நான் கருதினேன். 

ஆனால் அதற்கு மாறான முறையில் அவனது விசாரணை ஆரம்பமானது. அவன் முதலில் எனது அரசியல் வாழ்வின் ஆரம்பம் பற்றிச் சொல்லும்படி என்னிடம் கேட்டான். அதாவது எந்த ஆண்டில் நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன் எனக் கேட்டு, அதிலிருந்து விசாரணையைத் தொடர விரும்புவது போலத் தோன்றியது.

நான் 1963ம் ஆண்டு, எனது 15வது வயதில், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்றபோதே அரசியல் ஈடுபாடு ஏற்பட்டதாகக் கூறினேன். அரசியல் மட்டுமின்றி, நவீன இலக்கியத்துடனும் இக்காலகட்டத்திலேயே பரிச்சயம் ஏற்பட்டதையும் கூறினேன். 

அவன் உடனும் என்னை இடைமறித்து, “அப்பவும் இனப்பிரச்சினை கடுமையாக இருந்ததா?” என வினவினான்.

நான் அதற்கு சற்று விளக்கமாகப் பதிலளித்தேன். 1956ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதையும், அதை எதிர்த்து தமிழரசுக் கட்சி நடாத்திய போராட்டத்தையும் எடுத்துக் கூறினேன். பின்னர் 1957ல் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக உருவான பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையையும் பற்றிக் கூறினேன். 

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவிடாமல், அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பௌத்த பிக்குகளையும் அழைத்துக் கொண்டு கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை சென்றதையும் குறிப்பிட்டேன். 

பின்னர் ஐ.தே.கவின் ஏற்பாட்டில், பௌத்த பிக்குகள் கொழும்பில் ரோஸ்மீட் பிளேசிலிருந்த பண்டாரநாயக்கவின் வீட்டை முற்றுகையிட்டதையும், அதன் காரணமாக பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தைக்; கிழித்தெறிந்ததையும் எடுத்துக் கூறினேன்.

பண்டாரநாயக்கவின் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை விளக்கி, அதன்காரணமாக 1957ல் உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் ஏற்பாட்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதையும் கூறினேன். 

அதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் ஐ.தே.க கிளப்பி வந்த சிங்கள இனவெறி காரணமாகவும், வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சி கக்கி வந்த தமிழ் இனவாதம் காரணமாகவும், 1958ல் இலங்கையில் முதலாவது இனக்கலவரம் அரங்கேறியதையும் சொன்னேன்.

பண்டாரநாயக்க கொலைசெய்யப்பட்ட பின்னர், அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானதையும், அவரது ஆட்சிக் காலத்தில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கிலிருந்த கச்சேரிகளின் முன்னால் சத்தியாக்கிரகம், மறியல் போராட்டம் என்பனவற்றை நடாத்தி, அரச நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்ததையும், அதன் ஒர் அங்கமாக அரசாங்கத்திற்குப் புறம்பாக ‘தமிழரசு தபால் தலை’ என்ற பெயரில் முத்திரை வெளியிட்டு, சில நாட்கள் சட்டத்திற்குப் புறம்பாக தபால் சேவை நடாத்தியதையும் விளக்கினேன்.  

அதன் காரணமாக, சிறீமாவோ அரசாங்கம் தமிழரசுக் கட்சித் தலைவர்களை சில மாதங்கள் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் வைத்ததையும் சொன்னேன். 

இந்த சத்தியாக்கிரகத்தில் வடபகுதி பாடசாலைகளிலிருந்து தினமும் மாணவர்கள் லொறிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணக் கச்சேரி வாசலில் குந்த வைக்கப்பட்டதையும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இடைக்காடு இந்துக் கல்லூரியில் (இப்பொழுது மகாவித்தியாலயம்) எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நானும் லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டதையும் குறிப்பிட்டேன். 

அங்கு எமக்கு வயிறு நிறையக் குடிப்பதற்கு இளநீரும், மதிய போசனமாக யாழ்ப்பாணம் மலாயன் கபே (மலாயன் கபே அந்த நாட்களில் கொடிகட்டிப் பறந்தது) வழங்கிய சோற்றுப் பார்சல் தந்ததையும் விபரித்தேன்.

எனது சுருக்கமான விளக்கத்தை செவிமடுத்த தயாபரன், “அதற்காகவா அரசியலில் இறங்கினீர்கள்?” என என்னை வினவினான்.

அவன் இந்தக் கேள்வியைக் கேட்ட பின்னர்தான், அவன் என்னிடம் எப்பொழுது, என்ன காரணத்துக்காக நான் அரசியலில் ஈடுபட்டேன் என வினவியதற்கான காரணம் புரிந்தது. 

அதாவது தயாபரன் போன்ற இன்றைய கால தமிழ் இளைஞர்கள், ஐ.தே.க அரசு ஜே.ஆர்.தலைமையில் 1977ல் ஆட்சிக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினை தீவிரமடைந்து, இன ஒடுக்குமுறையாக மாறிய சூழ்நிலையில், ஆயிரக்கணக்கில் இயக்கங்களில் இணைந்தது போல, நானும் அன்றைய காலகட்டத்தில் ஏதோவொரு இனப்பிரச்சினையின் தாக்கத்தால்தான் அரசியலில் பிரவேசித்திருக்கக்கூடும் என அவன் எண்ணுவது இப்பொழுது எனக்குப் புரிந்தது. 

தமிழர்கள் அரசியலில் ஈடுபடுவது தமிழர்களின் இனப்பிரச்சினை என்ற ஒற்றைக் காரணிக்காக மட்டுமே என்ற குறுகிய பார்வை, இன்றைய தமிழ் சமூகத்தின் பெருவாரியான மக்களிடம் குடிகொண்டிருப்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள விபரீதமான போக்குகளையும் பார்க்கையில், தயாபரன் போன்ற கடிவாளம் இடப்பட்ட ‘புலிப் பொடியன்’ அவ்வாறு கருதுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

எனவே நான், “நான் அரசியலில் ஈடுபட்ட காலத்தில், தீவிரமான இனப்பிரச்சினையோ வேறு பிரச்சினைகளோ இருக்கவில்லை” எனப் பதிலளித்தேன்.

எனது பதில் அவனுக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும். எனவே அவன், “அப்பிடியெண்டால் ஏன் அரசியலிலை இறங்கினனிங்கள்?” என வினவினான்.

“நான் சேர்ந்தது தமிழரசுக் கட்சியில் இல்லை. அதற்கு எதிரான கொம்யூனிஸ்ட் கட்சியில்” எனக் கூறினேன்.

‘நீங்கள் ஒரு தமிழனாக இருந்தும,; ஏன் தமிழ் கட்சியில் சேராமல் சிங்களக் கட்சியில் சேந்தனிங்கள்?” என அவன் வினவினான்.

அவன் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி வைத்திருந்த புரிதலையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. அவ்வளவு தூரம் இன்றைய இளம் தமிழ் சந்ததி தமிழ் இனவெறியூட்டப்பட்டிருப்பது எனக்குத் தெரியும். அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் மத்தியில் எனது காலத்தில்கூட, கம்யூனிசம் என்றால் மிகவும் தவறான கற்பிதங்களே இருந்ததை நானே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

எனது சிறு வயதில், எனக்கு அரசியல் பிரக்ஞையோ சமூக நல நோக்கோ உருவாகாத காலத்தில், தமிழன் என்றால் தமிழரசுக் கட்சியில்தான் சேர வேண்டும் என்றே கருதியிருந்தேன். எமது ஊரில் தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவர்கள் கூட, அவர்களில் சிலர் ஆசிரியர்களாக இருந்தும், சற்று வித்தியாசமாகவே நோக்கப்பட்டார்கள்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி விளக்கவே தேவையில்லை. சிறு வயதில் எனக்கு, கம்யூனிசம் பற்றி என்னைவிட வயது மூத்தோரால் விளக்கப்பட்டதை இன்று நினைத்தால், சிரிப்பு வருவதுண்டு. 

அதாவது கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் செய்யப்போகும் ‘தீய நடவடிக்கைகளில்’ பிரதான மூன்று விடயங்களாவன: 55 வயதுக்கு மேற்பட்டவர்களால் நாட்டுக்குப் பிரயோசனமில்லையென்று, அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்! 

கடவுளை வணங்குவதற்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்!! சாதிகள் இருக்க அனுமதிக்கப்படமாட்டாது!!! இவற்றை அன்று நான் கேள்விப்பட்டதும், யாழ்ப்பாணத்தின் ஒரு சராசரித் தமிழ் சிறுவனான எனக்கு, கம்யூனிசத்தின் மீது அளவு கடந்த வெறுப்புத்தான் ஏற்பட்டது.

எனது பால்ய பருவத்து இந்த நிலையை நான் தயாபரனுக்கு விளக்கிச் சொன்னேன்.

“இனப்பிரச்சினையோ வேறு பிரச்சினைகளோ காரணமில்லையெண்டால், பிறகு நீங்கள் ஏன் கொம்யூனீஸ்ட் கட்சியிலை சேந்தனிங்கள்?” என அவன் மீண்டும் வினவினான்.

நான் அவனது கேள்விக்கு விடையளிக்கத் தொடங்குகையில், பல்வேறு விசாரணைக் குடில்களில் இருந்த விசாரணையாளர்கள், மதிய உணவிற்குப் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த அவன், “பின்னேரம் கதைப்பம்” என்று சொல்லிவிட்டு, என்னை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான். இன்று புதுவருடமாகையால், அவர்களுக்கு ஏதாவது விசேட வைபவங்களும் உணவு வகைகளும் தயாராக இருக்கும் என எண்ணிக்கொண்டே அவனுடன் புறப்பட்டேன்.

நான் சிறைச்சாலைக்குள் சென்ற சிறிது நேரத்தில், எமக்கும் நான் அதுவரை அங்கு பார்த்திராத விசேட உணவு வந்து சேர்ந்தது.

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment