Follow by Email

Wednesday, 5 March 2014

புலிகளின் இன்னொரு முகம் -20

புத்தாண்டு தினமாக இருந்தபோதிலும், அன்றும் அநேகமான கைதிகளுக்கு விசாரணை நடந்தது. எனக்கும் நடந்தது. புத்தாண்டு தினத்திலாவது மன உளச்சலோ உடல் உபாதையோ இன்றி, சற்று நிம்மதியாக இருக்கலாம் எனக் கைதிகள் கருதிய போதிலும், அதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. 

எல்லோருக்கும் அது ஏமாற்றமாக இருந்தாலும், குறிப்பாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு அது பெரும் ஏமாற்றமாகிவிட்டது. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் முதல் அவர்களது இல்லங்கள் கொண்டாட்டக் குதூகலத்தால் களைகட்டிவிடும்.

என்னை காலையிலேயே காந்தி அழைத்திருந்தபடியால், தயங்கியபடியே அவனைக் காணச் சென்றேன். வழமைபோலவே அந்த வேப்பமரத்தடியில் தனது இரு பொமனேரியன் நாய்களுடன் உட்கார்ந்திருந்தான். 

நான் அவனருகில் போனதும், அவனது நாய்கள் இரண்டும் ‘ஒரு வேற்று மனிதன் வந்திருக்கிறான், என்ன செய்வது?’ என்பது போல ஒலி எழுப்பின. அவன் அவைகளை ஆசுவாசுப்படுத்திக்கொண்டே, என்னைக் கவனிக்காதது போல சில காகிதங்களைப் புரட்டிப் புரட்டி ஏதோ மும்முரமாக வாசித்துக் கொண்டிருந்தான். நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். என்னை அழைத்து வந்தவனும் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தின் பின் காந்தி என்னை நிமிர்ந்து பார்த்தான். சிறிது நேரம் வைத்த கண் வைத்தபடியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. 

‘ஏதோ கேட்கப் போகிறான’; என எண்ணினேன். பின்னர் என்னை முறைத்தபடியே, “உள்ளை வாறதுக்கு முதலே அலுவல் பாக்கிறதுக்கு ஆள் ஒழுங்குபடுத்திப் போட்டுத்தான் வருவியள் போலை?” என சற்று உரக்க அதட்டியபடியே கேட்டான். 

எனக்கு அவன் கேட்டதின் அர்த்தம் புரியவில்லை. ஆனாலும் நான் கைதுசெய்யப்பட்ட பின்பு, எனது வீட்டுக்காரர்கள் யாராவது அவர்களது ஆட்களைப் பிடித்து எனது விடுதலைக்கு ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறார்களோ எனவும், அதனைத்தான் இவன் பூடகமாகக் குறிப்பிடுகிறானோ எனவும் எண்ணினேன். 

ஆனால் எனது மனைவியைப் பொறுத்தவரை எவ்வித அரசியல் ஈடுபாடும் இல்லாதவர் என்பதுடன், இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற அனுபவமும் இல்லாதவர். 

‘சரி, யாரோ சிலர் என்மீது அக்கறை கொண்டு முயற்சி எடுத்திருந்தாலும்கூட, அது இவர்களைப் பொறுத்தவரை நன்மைக்குப் பதிலாக தின்மையையே கொண்டு வரும்’ என அஞ்சினேன்.

நான் அமைதியாக நிற்பதைப் பார்க்க அவனுக்கு கோபம் தலைக்கேறியிருக்க வேண்டும். “என்னடா நான் கேக்கிறன். நீ ஒண்டும் கேக்காத செகிடன் போலை நிக்கிறாய்” என அதட்டினான்.

நான், “நீங்கள் என்ன கேக்கிறியள் எண்டு விளங்கல்லை” என ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினேன்.

“இப்ப ஒண்டும் விளங்காதுதான். போகப்போக எல்லாம் விளங்கும்” என்று சொல்லிவிட்டு, என்னை அங்கு அழைத்து வந்தவனை நோக்கி, “கம்மாலைக்கு கூட்டிக்கொண்டு போய் காலிலை உள்ளதை வெட்டிவிடு” என்றான்.

எனக்கு காந்தி சொன்னதன் அர்த்தம் புரிந்தும் புரியாததாக இருந்தது. அவன் முதல் என்னிடம் கேட்ட விடயங்களையும், இப்பொழுது சொன்ன விடயத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ‘அது இதுவாகத்தான் இருக்க வேணும்’ என்ற ஒரு நப்பாசை மனதில் கிளர்ந்து எழுந்தது. நான் என்னை கம்மாலை நோக்கி அழைத்துச் சென்றவன் பின்னே தத்தித்தத்திச் சென்றேன்.

கம்மாலையில் இருந்தவன் என்னை வியப்புடன் பார்த்தான். ஏனெனில் ஐந்து தினங்களுக்கு முன்னர், அவன்தான் எனது கால்களில் அந்தச் சங்கிலிகளை ‘வெல்டிங்’ செய்து ஒட்டிவிட்டவன்.

அவன் என்னை அழைத்து வந்தவனைப் பார்த்து, “என்ன பூட்டுப் போடட்டாமோ?” என வினவினான். சிறைக்குள் சிலரின் கால்களில் சங்கிலி வெல்டிங் செய்து ஒட்டப்படாமல், சிறிய பூட்டுகள் மூலம் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டிருந்தேன்.

“இல்லை வெட்டிவிடட்டாம்” என என்னை அழைத்து வந்தவன் கம்மாலைக்காரனிடம் சொன்னான்.

“ஐயாவுக்கு கொஞ்சம் வெள்ளி திசை இருக்குது போலை” என கம்மாலைக்காரன் கிண்டல் செய்துவிட்டு, எனது கால்களில் இருந்த சங்கிலிகளை ஒரு வெட்டெரும்பு மூலம் வெட்டிவிட்டான். சங்கிலி போடும்போது எப்படி அவஸ்தைப்பட்டேனோ, அதேபோல வெட்டும் போதும் அவஸ்தைப்பட நேர்ந்தது. 

அவன,; நான் ஒரு மனிதன் என்பதை மறந்து, தான் விரும்பியவாறு எனது கால்களை மடக்கியும் திருப்பியும்தான் அந்தச் சங்கிலிகளை வெட்டி முடித்தான். 

இருந்தாலும் எனது கால்பூட்டுகள் கழற்றப்பட்டதில் உள்ளுர பரம சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை நான் வெளிக்காட்டவில்லை. வெளிக்காட்டினால், எனது மகிழ்ச்சியை நிறுத்துவதற்காகவே மீண்டும் சங்கிலி போட்டுவிடுவார்கள்!

அவன் மீண்டும் என்னை காந்தியிடம் அழைத்துச் சென்றான். சங்கிலி வெட்டப்பட்டாலும், சிறிது வித்தியாசமாகவே என்னால் நடக்க முடிந்தது. காந்தி அதைப் பார்த்துவிட்டு, “என்ன நடிச்சுக் காட்டிறியா?” என உறுமினான். பின்னர் என்னைப் பார்த்து, “சங்கிலி இல்லைத்தானே எண்டிட்டு ஓட வெளிக்கிட்டியோ, பிறகு காலுக்கு கையுக்கு இடுப்புக்கு கழுத்துக்கு எண்டு எல்லா இடமும் சங்கிலி போட்டு வடிவு பாக்க வேண்டி வரும்” என எச்சரிக்கை செய்தான். 

‘நானாவது ஓடுறதாவது’ என நினைத்துக்கொண்டு, அவன் சொன்னதை ஏற்றுத் தலையை ஆட்டினேன். பின்னர் அவன் என்னை அழைத்துக்கொண்டு போய் சிறைக்குள் விடும்படி பணித்தான். 

நான் உள்ளே சென்றபோது, முதலில் என்ன ஏது என எனது முகத்தை ஏறிட்டு நோக்கிய சக கைதிகள், பின்னர் நான் கால்களில் சங்கிலி இல்லாமல் சுதந்திரமாக நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, என்னை ஆச்சரியத்துடன் நோக்கினர். அந்தப் பார்வைகளில் பலவித அர்த்தங்கள் இருந்தன. ‘நீ வலு கெதியாய் வெளியே போய்விடுவாய்!’ என்ற அர்த்தம், அந்தப் பார்வைகளின் ஒட்டுமொத்தச் செய்தியாக இருந்ததை அவதானித்தேன்.

எனது காலை உணவான வெண் சீனிப் பொங்கலை உண்ட பின், தயாபரன் வந்து என்னை விசாரணைக்காக அழைத்தான். அவனுடன் புறப்பட்டேன். அவன் அன்றைய தினம் அழைத்ததுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும் என எண்ணினேன். 

அவன் புத்தாண்டு தினத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க விரும்பியிருக்கலாம். புதிய கைதி என்றபடியால், அதுவும் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த கைதி என்றபடியால், பல சுவாரசிய விடயங்களை அறிவதற்கு ஆவல் பட்டிருக்கலாம். அல்லது அவனது தலைமை ஒரு குறிப்பிட்ட காலவரையை எனது விசாரணைக்கு வழங்கியதால், விசாரணையைத் துரிதப்படுத்துவதற்காக உடனேயே ஆரம்பித்திருக்கலாம். 

எது எப்படியிருந்தாலும் என்னைப் பொறுத்த வரையிலும்கூட, எனது விசாரணை விரைவில் முடிந்து, அவர்கள் எனக்கான தண்டனையை – அது மரண தண்டனையாக இருந்தாலும்கூட - விரைவில் வழங்கிவிட வேண்டும் என விரும்பினேன். (புலிகளால் கைதுசெய்யப்படுபவர்கள் திரும்பி வருவதில்லை என்ற ஒரு நியதி இருந்ததால், நானும் அவ்வாறு கருதினேன்)

நடந்து செல்லும்போது, “என்ன, கால் சங்கிலி வெட்டியாச்சுப் போலை?” என எனது கால்களைப் பார்த்துக்கொண்டே வினவினான்.

“ஓம்!” எனப் பதிலளித்தேன். அவன் சிரித்துவிட்டு, தொடர்ந்து நடந்தான். 

வழமைபோலவே விசாரணைக் குடிலில் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டோம். இருப்பதற்கு சென்றமுறை போல நாற்காலியும் தரப்பட்டிருந்தது.

அவன் தனது கையில் கொண்டு வந்த ஃபைல்களையும், எழுது தாள்களையும் எடுத்து ஒழுங்குபடுத்திய பின்னர், பேனாவைத் திறந்து வைத்துக்கொண்டு சிறிது நேரம் யோசித்தான். 

பின்னர் என்னை நோக்கி, “இவ்வளவு நாளும் நடந்தது குடும்ப விபரம் பற்றிய விசாரணை. இனி நடக்கப் போறதுதான் உங்கடை குற்றச்சாட்டு பற்றிய உண்மையான விசாரணை. 

இந்த விசாரணை முதலிலை பேப்பர் பேனையுடன்தான் ஆரம்பமாகும். விசாரணையிலை நீங்கள் தொடர்ச்சியாக பொய் சொல்லி, விசாரணைக்கு ஒத்துழைக்கல்லை எண்டால,; பிறகு கம்பியள் தடியளாலையும் விசாரிக்க வேண்டி வரும். அதைவிட கடுமையான முறையளும் இருக்கு. எல்லாம் உங்களைப் பொறுத்தது” என எச்சரிக்கும் பாணியில் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான்.

நான், “அப்படியெல்லாம் ஒளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் பிழை விட்டிருந்தால்தான் ஒளிக்க வேணும். நான் செய்த குற்றம் என்ன எண்டதே எனக்குத் தெரியல்லை”: எனக் கூறினேன்.

“அப்ப நீங்கள் ஒரு பிழையும் செய்யல்லை எண்டு கூறுறியளோ?” எனக் கேட்டான்.

நான்அவனை ஆரம்பத்திலேயே கோபப்படுத்த விரும்பவில்லை. எனவே, “அப்பிடி நான் வாதாடல்லை. என்ரை குற்றச்சாட்டு என்னண்டு தெரியாததாலைதான் அப்படிக் கூறினேன்” எனச் சொல்லிச் சமாளித்தேன்.

“சரி விசாரணை நடக்கேக்கை எல்லாம் தெரியும்தானே?” எனச் சொல்லிவிட்டு விசாரணையை ஆரம்பிக்கத் தயாரானான். அவனது பேச்சுத் தொனியில் முந்தைய நாட்களைவிட சற்று கடுமை இருப்பது போலத் தோன்றியது.

நானும் அவனது கேள்விகளுக்கப் பதிலளிக்கத் தயாரானேன். 

தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment