Follow by Email

Monday, 24 February 2014

புலிகளின் இன்னொரு முகம் -18

வதை முகாமின் உள்ளேயிருந்து மரண ஓலத்துடன் ஒருவர் வெளியே தூக்கிச் செல்லப்படுவதைப் பார்க்க எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வதை முகாமில் உள்ளவர்கள், அந்த அகால வேளையில் ஏற்பட்ட மரண கூச்சலால் தூங்காமல் விழித்துக்கொண்டு இருந்தனர். 

நான் அங்கிருந்தவர்களின் முகபாவங்களை அவதானித்தேன். அவர்களது முகங்களில் ஒரு அனுதாப அலை வீசியதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர்கள் என்னைப் போல் அதிர்ச்சி அடைந்தவர்களாகத் தெரியவில்லை. அதை என்னால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிந்தது.

நான் இந்த ‘வீட்டுக்கு’ புதிதாக ;குடி’ வந்தவன். அங்கிருக்கும் மற்ற எல்லோரும் பழைய ‘குடியிருப்பாளர்கள்!’. இந்த மாதிரியான காட்சிகளை அவர்கள் பல தடவை கண்டு, அவர்களது மனங்கள் மரத்துப் போயிருக்கலாம். யார் கண்டது? நாளை எனது மனமும்கூட அவ்வாறு மரத்துப் போகக்கூடும்.

நான் எனது இருப்பிடத்தில் அமர்ந்து எனது மனதை ஆசுவாசப்படுத்த முயன்றேன். ஆனால் மனது ஒரு நிலையில் அமைதி கொள்ளாது தவித்துக்கொண்டு இருந்தது. ஒரு மனித உயிர், அதே மனித உருவில் உள்ள சில மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டிருப்பதை, என் வாழ்நாளில் இப்பொழுதுதான் மிக அருகில் இருந்து கண்கூடாகப் பார்க்கிறேன்.

எனக்கு அருகில் இருந்த பெரியவர் எனது முகபாவங்களை அவதானித்துவிட்டு, ‘இது இங்கை சர்வசாதாரணம். போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்’ என்பது போல என்னைப் பார்க்கின்றார்.

“என்ன நடந்தது?” என அவரிடம் மெல்ல வினவினேன்.

அவர் பயத்துடன் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, “இதுகளை இஞ்சை கதைக்கிறது ஆபத்து” எனச் சொன்னார். பின்னர் ஏதோ யோசித்தவராக என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “புளொட் இயக்கப் பொடியன் எண்டு கேள்வி. 

விசாரணையிலை நல்லா அடிச்சுப்போட்டாங்கள் போலை கிடக்கு. ஆள் தப்பிறது கஸ்டம்.” இரகசியமாகச் சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிட்டார். பின்னர் அவர் விடியும்வரை என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. தூங்கினாரா அல்லது என்னைப்போல விடியும்வரை அந்தச் சம்பவத்தை எண்ணி மனம் கலங்கி விழித்துக் கொண்டிருந்தாரா எனத் தெரியவில்லை.

ஆனால் வதை முகாமில் படுத்திருந்தவர்களில் பெரும்பாலோர் அன்றிரவு தூங்கவில்லை என்பதை, அவர்கள் இரண்டு மூன்று பேராக படுத்த வண்ணமே குசுகுசுத்ததை வைத்து அவதானிக்க முடிந்தது. அது வாயிற்காப்போனுக்கும் ‘மணந்து’, அவன் வாசல்வரை வந்து ஒருமுறை அதட்டி எச்சரித்துவிட்டுச் சென்றான்.

காலையில் வழமைபோல சில ‘கப்’ தண்ணீரில் காலைக்கடன்களை முடித்த பின்னர், காலை ஆகாரத்துக்காக எல்லோரும் வாசலைப் பார்த்த வண்ணம் இருந்தனர். காலை ஒன்பது மணியாகியும், சாப்பாடு கொண்டு வருபவர்களின் தலைக்கறுப்பைக் காண முடியவில்லை. எல்லோருடைய வயிறுகளும் புகைச்சல் எடுக்கத் தொடங்கிவிட்டது.

கைதிகளுக்குச் சாப்பாடு வருதோ இல்லையோ, தமது விசாரணைகளைத் தொடர்ந்து நடாத்தி, தமிழர்களின் சுதந்திர தேசத்தை மனித மண்டையோட்டுக் குவியலின் மீது கட்டியெழுப்புவதற்காகத் துடிக்கும் தமது தலைவனுக்காக, அல்லும் பகலும் கைகளில் பல விதமான சித்திரவதைக் கருவிகளுடன் காத்திருக்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணையாளர்கள் ஓய்ந்திருக்கத் தயாராகவில்லை என்பதை, சிறை வாசலில் அவர்களது பிரசன்னங்கள் கட்டியம் கூறிக்கொண்டிருந்தது.

அவர்களில் ஒருவன் எனது பெயரையும் எனது கைதி இலக்கத்தையும் சொல்லி வாசலில் வந்து நின்று அழைத்தான். நான் வாசலுக்குச் சென்று அவனுடன் புறப்பட்டேன். 

கையில் பைல் ஒன்றுடன் காணப்பட்ட அவன், நேற்றைய தினம் என்னை விசாரித்த வசீகரன் என்பவன் அல்ல. அத்துடன் இவனது கைகளில் தடிகளோ தென்னம்பாளைகளோ எதுவும் காணப்படவும் இல்லை. சில வேளைகளில் விசாரிக்கும் இடத்தில் வைத்திருப்பானோ என்னவோ?

அவன் என்னை அங்குள்ள விசாரணைக் குடில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்று மேசையின் பின்னால் உள்ள கதிரையில் அமர்ந்துகொண்டு, அவனுக்கு முன்னால் உள்ள மண் தரையில் என்னை அமரும்படி கூறினான். 

நான் அமர்ந்ததும,; தனது பெயர் தயாபரன் என்று கூறினான். நான் அவனை அவதானித்துப் பார்த்தேன். அங்கு நான் கண்ட மற்றைய புலிகளைவிட இவனது முகபாவம் சற்று மாறுபாடாக இருப்பதாகப்பட்டது. ஆனால் என்னதான் சில வேறுபாடுகள் இருந்தாலும், எல்லாமே வரிப்புலிகள்தான். இந்தப் புலிகள் பசித்தாலும் புல்லைத் தின்னப் போவதில்லை.

மனிதர்களின் குணங்கள் பிறப்பால் உருவாவதில்லை. அவை வளர்ப்பால் வருபவை எனச் சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் எம்மைப்போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் கருத்து அதுதான். ஆனால் பிறப்பால் ஒருவரின் கருத்து உருவாகின்றது என்றும், அந்த ‘பிறவிக்குணம்’ தான் ஒருவருடைய போக்கைத் தீர்மானிக்கிறது என்றும், நமது சமுதாயத்தில் அநேகமான மக்கள் கருதுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தப் புலிகள் எந்த அடிப்படையிலான குணாம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது.

இந்தப் புலிகள் வௌ;வேறு காரணங்கள் காரணமாகவே இயக்கத்தில் சேருகிறார்கள். (நான் புலிகளின் குகையில் ஒன்றாக அவர்களுடன் வாழ்ந்ததில் ஏற்பட்டஅனுபவத்தின்படி பார்த்தால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே – அண்ணளவாக 10 வீதத்தினர் மட்டுமே, அவர்களது தமிழீழ இலட்சியத்துக்காக இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். அது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்) 

அவர்களில் சிலர் மக்கள் நம்பும் பிறவிக் குணத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களது வளர்ப்பு முறையே பிரதானமாக அவர்களது சிந்தனை, செயல்பாடு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அந்த வகையில் பார்த்தால், இந்தப் புலிகளின் வளர்ப்பு முறையே பின்னர் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கின்றது. அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாக நடந்து கொள்வதற்கு அவர்களுக்குத் தரப்படும் உளப் பயிற்சியே பிரதான காரணமாகும். 

பொதுவாகவே எந்தவொரு இராணுவத்துக்கும், சாதாரண மக்களிலிருந்து வேறுபட்ட உளப் பயிற்சி வழங்கப்படுவது வழமை. அதில் முக்கியமானது, அவர்களுக்கு வழங்கப்படும்  உத்தரவுகளுக்குக்; கீழ்ப்படிய வேண்டும் என்ற பயிற்சியாகும். அது இல்லாவிட்டால், ஒரு இராணுவ (அரசு) தலைமையால் எதையும் நிறைவேற்ற முடியாது.

அகிம்மை பேசிய காந்தி கூட, இதில் மரபுரீதியாகத்தான் செயல்பட்டுள்ளார். இந்தியாவில், பிரிட்டிசாருக்கு எதிரான கிளர்ச்சியில் (சிப்பாய் கலகம்) ஈடுபட்ட இந்திய இராணுவத்தினருக்கு, பிரிட்டிஸ் அரசு தண்டனை வழங்கியபோது காந்தி அதை ஆதரித்தார். 

அது பற்றி ‘லீ மொண்டே’ என்ற பிரெஞ்சுப் பத்திரிகை அவரிடம் வினவிய போது, “இன்று நான் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கண்டிக்காமல் இருந்தால், நாளை நான் ஆட்சிக்கு வந்த பின்னரும் இது போன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்டால் அதை நான் கண்டிக்க முடியாதல்லவா?” என அவர் பதில் வினா எழுப்பினார்.

எனவே புலிகளைப் பொறுத்தவரை, உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது தலையாய பிரச்சினையாகும். அதுவும் ஒரு தனி மனிதனைச் சுற்றி, தனிமனித வழிபாட்டு ரீதியாக வளர்க்கப்பட்ட ஒர் இயக்கத்தில், குருட்டு விசுவாசத்தின் அளவைக் கணக்கிட முடியாது. 

ஆனால் புலிகளின் தலைமை தனது உறுப்பினர்களுக்கு அதுமட்டுமின்றி, வேறு பல முக்கியமான பயிற்சிகளையும் திட்டமிட்டு வழங்குவது, கிரமமான நடைமுறையாகும். அதாவது மனிதர்களை எவ்வாறு வெறுக்கப் பழகுவது என்பதுதான் அது.

ஒரு புலி உறுப்பினன் புதிதாகச் சேர்க்கப்பட்டதும் அவனுக்கு முதலில் ஊட்டப்படுவது அரச எதிர்ப்பும் சிங்கள இன எதிர்ப்பும்தான். ( சில சந்தர்ப்பங்களில் முஸ்லீம் - மலையக மக்கள் எதிர்ப்பும்) பின்னர் குடும்பப் பாசத்திலிருந்து விடுதலையும் எதிர்ப்பும். அவன் படிப்படியாக தாய், தந்தை, சகோதரர், உற்றம் சுற்றம் என்ற பாசத்தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதுடன், அவர்களை அந்நியர்களாகப் பார்க்கும் நிலைக்கும் தள்ளப்படுவான். தேவையானால் அவன் அவர்களுக்கு எதிராகவும் செயற்படுவதற்குத் தயார்படுத்தப்படுவான்.

இதற்கு அடுத்த கட்டமாக, தனது சொந்த இனமான தமிழ் மக்களையே வெறுக்கும் ஒருவனாக மாற்றப்பட்டு, பின்னர் பொதுவாக மனித இனத்தையே வெறுப்பவனாக, அவர்களை சந்தேகிப்பவனாக உருமாற்றப்படுவான். இயக்கத்திலிருக்கும் சக தோழனை சந்தேகிப்பதும், அவனை வேவு பார்ப்பதும்கூட அவனுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளில் உள்ளடங்கியவை. 

பொதுமக்களுக்கு மேல் அதிகாரம் செலுத்துவதற்காகவே அவன் படைக்கப்பட்டதாக ஒரு பிம்பம் அவனது மனதை நிறைக்கும் வகையில், அவன் புதிய வார்ப்பில் இடப்படுவான். அவன் மதிக்கும் வணங்கும் நேசிக்கும் ஒரேயொரு நபர் அவனது தலைவன் (பிரபாகரன்) மட்டுமே. இவ்வாறுதான் ஒரு சாதாரண தமிழ் சிறுவன், புலிப் பாசிஸ்ட்டாக உருவாக்கப்படுகிறான்.

இந்த வகையில் வளர்க்கப்பட்ட புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கைகளிலேயே நான் இப்பொழுது அகப்பட்டிருக்கிறேன். இவர்களிடம் மனித நேயம், இரக்கம், வயதுக்குரிய மரியாதை, பண்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது எனக்குத் தெரியும். இவர்களின் கைகளில் சிக்கிச் சிதைவடைந்து போகாமல் தவிர்ப்பதே, எனது இப்போதைய ஒரே கவலை. 

அவர்களைத் திசைதிருப்பவும், நம்ப வைக்கவும் வேணுமானால், சில நேரங்களில் உண்மை பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் என்மீதான நம்பகத் தன்மையைப் பயன்படுத்தி, சில விடயங்களில் பொய் சொல்ல வேண்டும். சில வேளைகளில் அப்பாவியாகவும், சமயங்களில் அதி பிரசங்கித்தனமாகவும் கூட வேசம் கட்ட வேண்டும்.

இப்போதைக்கு இந்த தயாபரன் என்ற பையன் (எனது விசாரணையாளன்) ஓரளவு பண்பானவன் போலத் தோன்றுகிறது. ஆனால் புலிகளின் வரலாற்றில் எதையும் நம்ப முடியாது. கூடப் படுத்திருந்தவனையே நள்ளிரவில் சுட்டுக் கொன்றவனை தலைவனாகக் கொண்ட ஓர் இயக்கமல்லவா இது? ஆனாலும் ஏதோவொரு காரணத்துக்காக ‘தென்னம்பாளை’ வசீகரனை மாற்றிவிட்டு, காந்தி இந்த தயாபரனைப் போட்டது சற்று நிம்மதியைக் கொடுத்தது.

தயாபரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “உங்களை ஏன் பிடிச்சது எண்டு தெரியுமா?” என்பதே. உண்மையில் எனக்கு அதற்கான பதில் என்னவென்று தெரியாது. வேண்டுமானால் ‘நான் அவர்களின் அரசியல் எதிரி’ எனப் பொதுவான ஒரு காரணத்தைப் பதிலாகக் கூறலாம். 

ஏனெனில் அவர்களது பார்வையில், குறிப்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமின்றி, தம்முடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தவர்களையும் அவர்கள் கைதுசெய்த காலமது. என்னைச் கைதுசெய்ததற்கான காரணம் எனக்குத் தெரியாவிட்டாலும், இந்தத் தயாபரனுக்கும் அவனது தலைவர்களுக்கும் நிட்சயம் தெரிந்திருக்கும். 

இன்னும் சொல்லப்போனால், எமது தமிழ் மகாஜனங்களுக்கும் கூட அது தெரிந்திருக்கும். ஏனெனில் அவர்கள்தான், புலிகள் யாரையாவது கைது செய்தால் அல்லது கொலை செய்தால், “பொடியள் காரணமில்லாமல் ஒரு நாளும் அப்பிடிச் செய்யமாட்டாங்கள். இவர் என்னவோ அவங்களுக்கெதிராக வில்லங்கமான வேலை செய்திருக்கோணும்” என அன்றிலிருந்து இன்று வரை நற்சாட்சிப் பத்திரம் வழங்கி வருபவர்கள்.

“எனக்குத் தெரியேல்லை” எனப் பதிலளித்தேன். அவனது முகத்தில் நக்கல் நளினம் எதையும் காணவில்லை. உண்மையில் ஏதோ பாரதூரமாக யோசிப்பது போலத் தோன்றினான். பின்னர் “நீங்கள் உங்களைப் பிடிக்க வந்த ஆட்களிட்டைக் கேட்கல்லையா?” என வினவினான். 

அதற்கு நான் “கேட்டனான், ஆனால் ஒரு சின்ன விசாரணை எண்டுதான் சொல்லிச்சினம். நான் திரும்பவும் கேட்டபோது, ‘உங்களை விசாரிக்கிற ஆட்கள் சொல்லுவினம்’ எண்டு சொல்லிச்சினம்” என தயாபரனுக்கு பதிலளித்தேன். உண்மையில் என்னைக் கைதுசெய்த போது காரணம் எதுவும் சொல்லாததையிட்டு அவன் ஆச்சரியப்படுகிறானா அல்லது அவர்களது நடைமுறை (காரணம் சொல்லாத) தெரிந்திருந்தும் நடிக்கிறானா எனத் தெரியவில்லை.

“என்ன மச்சான் என்ரை ஆளை நீ பிடிச்சிட்டாய் போலை கிடக்கு” என்ற குரல் திடீரென எனக்குப் பின்னால் கேட்கத் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் வசீகரன் ஒரு விசமச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். வழமைபோலவே அவனது கையில் காய்ந்த தென்னம்பாளையொன்று இருந்தது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment