Follow by Email

Sunday, 26 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -9என்னைக் கைதுசெய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புலிகளால் வீதிகளிலும் வீடுகளிலும் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்ட தில்லை, செல்வி, மனோகரன் ஆகியோரைப் பற்றி இந்த இடத்தில் சிறிது விளக்கமாகக் குறிப்பிடுவது அவசியம். ஏனெனில் அந்த மூவரும் இன்று உயிருடன் இல்லை. 

இவர்களது பெயர்கள் அவ்வப்போது ஆங்காங்கே ‘புலிகளால் கொல்லப்பட்டார்கள்’ என்று மாத்திரம் முணுமுணுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். எவருமே இவர்களது பின்னணியை சிறிதளவேனும் அறிந்தவர்களாக இல்லை. 

தமிழ் தேசியவாதம் என்றென்றைக்கும் வெட்கித்தலைகுனிய வேண்டிய பல ஆயிரக்கணக்கான கொலைகளைப்போலவே, பெறுமதிமிக்க அந்த மூவரினதும் உயிர்களைப் புலிகள் மிகவும் ஈனத்தனமானமாகவும், கவலையளிக்கும் விதத்திலும் பறித்தெடுத்து விட்டார்கள்.

இந்த மூவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்களாவர். இவர்கள் கைதுசெய்யப்படும் போது, தில்லை தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள பாவற்குளம் 4ஆம் யூனிற்றிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். 

தில்லையைப்போன்றே யாழ். பல்கலைக்கழக கல்வியை பின்புலமாக கொண்ட செல்வியும் மனோகரனும் புலிகளால் கைது செய்யப்படும்வரை மக்கள்சார்ந்த பொதுவேலைகளில தம்மை ஈடுபடுத்தி இருந்தனர். 

இந்த மூவரினதும் கைது நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் காரணிகளைப்போலவே வேறு சில காரணிகளும் இருந்துள்ளன.

தில்லை யாழ்ப்பாண நகரப் பகுதியில் பிறந்து வளர்ந்தவராவார். அவரது குடும்பம் மிகவும் வறுமையான ஒன்று. தகப்பனார் தச்சு வேலை செய்யும் ஒரு தொழிலாளி. தில்லையே குடும்பத்தில் மூத்தவர். அவருக்குக் கீழே பல தம்பிகளும் தங்கைகளும் என பெரியதொரு குடும்பம். 

தகப்பனார் ஒரு நோயாளியாகையால், தில்லையின் ஆசிரியத் தொழிலால் வரும் வருமானமே குடும்பத்தை ஒருவாறு ஓட்டிச் சென்றது.

தில்லை இடதுசாரி சிந்தனைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் மக்கள்சார்பு இடதுசாரி நிலையை எடுத்ததிற்கு, வேறு பல காரணிகளுடன், அவரது குடும்பப் பின்னணியும் ஒரு காரணமாகும். கறுப்பையா என்ற அவரது தாயின் மாமன் ஒருவர் (யாழ்.சிவன் கோவிலடியில் மரக்காலை ஒன்று நடாத்தியவர்) கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர். 

தோழர் மு.கார்த்திகேசன் போன்ற முக்கியமான கட்சித் தோழர்களுடன் அவர் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தவர். அதனால் அவரது அரசியல் கொள்கையின் பாதிப்பு அவரது சகோதரியான தில்லையின் தாயாரின் குடும்பத்திலும் பிரதிபலித்தது.

இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக இருக்கும் தில்லையின் தாய்வழி மாமனும் ஒருகாலகட்டத்தில் இடதுசாரிச் செல்வாக்குக்கு உட்பட்ட ஒருவராவார். தில்லையுடன் சமகாலத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தில்லையின் மற்றொரு தாய்மாமனும், தீவிரமான இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த இன்னொருவராவர்.

இந்தப் பின்னணியால் தில்லையும் இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்டிருந்ததில் வியப்பேதுமில்லை. தில்லை அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த காலத்தில், ஓரளவு ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச ஆதரவு போன்ற கொள்கைகளைத் தனது ஆரம்ப காலத்தில் கொண்டிருந்த புளொட் இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 

ஆனால் பின்னர் புளொட் இயக்கத்தினுள் கருத்து முரண்பாடுகள் உருவாகி, அதன் ஒரு பிரிவினர் சந்ததியார் தலைமையில் தனி அணியாகவும், பின்னர் ‘தீப்பொறி குழு’ என்ற பெயரில்  செயற்பட்டபோது, தில்லையும் அவ்வணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். (இங்கு வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றதேயொழிய, புளொட் இயக்கத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் பற்றி கருத்துச் சொல்வது எனது நோக்கமல்ல) 

அக்காலகட்டத்தில் தில்லைக்கும் எமக்குமான தொடர்பு நெருக்கமாக ஏற்பட்ட காரணத்தால், தமிழ் மக்களினதும் அனைத்து உழைக்கும் மக்களினதும் பிரச்சினைகளுக்கான தீர்வை, மார்க்சிய வழி செயல்படும் ஒரு அமைப்பால் மட்டுமே அடைய முடியும் என்பதை உணர்ந்தார். 

தொடர்ந்தும் தமிழ் தேசியவாத இயக்கங்கள் எதுவுடனும் இணையாது, கருத்துப்பரிமாற்றங்களுடன் எம்முடன் தன்னை இணைத்துக்கொண்டு செயற்படத் தொடங்கினார்.

இந்த இடத்தில் ‘தீப்பொறி’ இயக்கத்தினருக்கு நேர்ந்த துன்பகரமான நிலையையும் குறிப்பிடுவது அவசியமானது. ‘தீப்பொறி’ இயக்கத்தினர் தோன்றுவதற்கு முன்னர், அந்த பிரிவினரது முன்னோடியாகவும் தலைவராகவும் கருதப்பட்ட சந்ததியார் உட்பட பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அரசியல் போட்டியாளர்களால் கொல்லப்பட்டனர் என்ற அபிப்பிராயம் இன்றும் பரவலாக உள்ளது.

அதேவேளையில் புலிகளும் ‘தீப்பொறி’ பிரிவினரில் பலரைக் கொலை செய்துள்ளனர். ‘தீப்பொறி’ இயக்கத்துக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் தீவிரமாகச் செயற்பட்டவரும், தில்லையின் நெருங்கிய நண்பரும், என்னுடனும் பழகியவரும், யாழ்.பல்கலைக்கழக மாணவருமான கைதடியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற மாணவரையும், ‘தீப்பொறி’ இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்த யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் மருந்துக் கடையான ‘சுந்தரம் பிறதர்ஸ்’ நிறுவன உரிமையாளரின் மகனும் எனது நண்பருமான யோகசுந்தரம் (யோகன்) என்பவரையும் புலிகள் பிடித்துச் சென்று கொலை செய்திருந்தனர். 

இவர்களது கொலைகள் தில்லையைக் கைதுசெய்து செய்வதற்கு முன்னர் நிகழ்ந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, சந்ததியாரின் மரணத்தின் பின்னர், அந்த இயக்கத்துக்கு தலைமைதாங்கி வழி நடாத்திய டொமினிக் அல்லது கேசவன் அல்லது கோவிந்தன் (இந்தப் பெயரில்தான் அவர் புளொட் இயக்கத்திற்குள் எழுந்த முரண்பாடுகளை முன்வைத்து ‘புதியதோர் உலகம்’ என்ற நாவலை எழுதினார்) என்ற இயக்கப் பெயர்களைக் கொண்டிருந்த தோழர் நோபேர்ட் அவர்களையும் புலிகள் கைதுசெய்து, இரு வருடங்கள் சித்திரவதை முகாமில் வைத்திருந்து பின்னர் கொலை செய்தனர். 

(அவருடன் சுமார் ஒன்றரை ஆண்டுகள் புலிகளின் சிறையில் ஒன்றாக இருந்த எனது அனுபவத்தைப் பின்னர் குறிப்பிடுவேன்.)

தில்லையைப் பொறுத்தவரை, அவர் தனது இறுதிக் காலத்தில் எடுத்த உறுதியான இடதுசாரி அரசியல் நிலைப்பாடே, புலிகள் அவரைக் கைதுசெய்வதற்கும் கொலை செய்வதற்கும் பிரதான காரணமாக இருந்துள்ளது. 

மற்றைய காரணிகளைப் பின்னர் பார்ப்போம். (இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். யாழ்.பல்கலைக்கழக மாணவியும், கவிதை – நாடகம் ஆகிய துறைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவரும், தில்லை - செல்வி நட்பு வட்டத்தில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவருமான சிவரமணி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, இன்றுவரை பலரையும் உலுக்கிவரும் ஒரு சம்பவமாகும். 

அவரது தற்கொலைக்கு ‘யானை பார்த்த குருடர்கள் போல’ பலரும் பற்பல காரணங்களைச் சொல்லி வருகின்றனர். ஒரு பக்கத்தில் தமிழ் சமூகத்தின் மீதான இராணுவக் கெடுபிடியும், மறுபக்கத்தில் தமிழ் சமூகத்தின் மீது ஏற்பட்ட வெறுப்புமே, அவரது தற்கொலைக்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. 

ஆனால் அவர் மரணித்த அன்று தில்லை என்னிடம் வந்து, மிகுந்த கவலையுடன் வெதும்பிய வண்ணம் தெரிவித்த காரணம் வேறு. 

யாழ்ப்பாணிய’த்தால் இரண்டாம் தரமாகக் கணிக்கப்படும் இந்திய வம்சாவழியினராகிய தில்லைக்கும் சிவரமணிக்கும் இடையில் இருந்த இலட்சியபூர்வமானதும் ஆத்மார்த்தரீதியானதுமான காதலைச் சகிக்க முடியாத, அந்த ‘யாழ்ப்பாணிய’ம் கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமலே, உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, இந்தத் தவறான முடிவுக்கு சிவரமணி வந்திருக்கலாமென தில்லை கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்.)

செல்வியைப் பொறுத்தவரை, அவர் வன்னியின் சேமமடு விவசாயக் குடியேற்றத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயியின் மகள். 

அவர் தனது கல்வித் திறமையாலும், 1970 ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தி, 1977 பின்னர் ஜே.ஆர் அரசால் சில மாற்றங்களுடன் தொடரப்பட்ட பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்பு வழங்கும் ‘தரப்படுத்தல்’ கல்வி முறையாலும், பல்கலைக்கழகம் புகுந்த பலரில் ஒருவராவார்.

அவர் புளொட் இயக்கத்தின் மகளிர் அணியின் முக்கியமான செயற்பாட்டாளராவார். ஆனால் அந்த இயக்கத்தின் கண்மூடித்தனமான இயக்க விசுவாசி அல்ல. 

தமிழ் தேசியவாத இயக்கங்கள் பல உருவான பின்னர், அவை ஆரம்பிக்கப்பட்ட இலட்சியங்களை மறந்து, தமக்குள் முட்டி மோதவும், மக்கள் மீது அராஜகங்களைப் பிரயோகிக்கவும் ஆரம்பித்த பின்னர், எல்லா இயக்கங்கள் மீதும் ஒரு வெறுப்பும் விரக்தியும் அடைந்த நிலையில் செல்வி இருந்து வந்ததை நான் நன்கு அறிவேன். 

எனவே உண்மையான எல்லா இயக்கங்களின் உறுப்பினர்கள் போலவே, செல்வியும் ஒரு தேடலில் ஈடுபட்டிருந்தார். இப்படியான பலர் யாழ்.பல்கலைக்கழகத்தில் உருவாகி வந்ததுடன், அவர்கள் இடதுசாரிக் கருத்துக்களாலும் ஈர்க்கப்படத் தொடங்கியிருந்தனர்.

செல்வியின் இந்த வகையான போக்கும், புலிகளின் பாசிசப் போக்குக்கு எதிராக அவரும், அவரது நண்பர்களும் மேற்கொண்ட துணிச்சலான விமர்சனங்களும், இனிமேலும் இப்படியானவர்களை விட்டு வைக்கக்கூடாது என்ற முடிவினை புலிகள் எடுக்கத் தூண்டிய பிரதான காரணிகளில் ஒன்று. 

எனவேதான் புலிகள் அவரைக் கைதுசெய்தது மட்டுமின்றி, நாம் பின்னர் கேள்விப்பட்ட அளவில் பெண் புலிகள் அவர் மீது வர்ணிக்க முடியாத கொடுஞ்சித்திரவதைகளை மேற்கொண்டு, அவரைக் குற்றுயிராக்கிக் கொலை செய்தனர்.

மனோகரனைப் பொறுத்தவரையில், அவரை நான் அறிந்திருந்தேன். ஆனால் நெருக்கமான தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை. அவர் அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் மேற்கொண்ட அராஜகங்களுக்கு எதிராக, குறிப்பாக புலிகளின் பாசிச செயற்பாடுகளுக்கு எதிராகச் சில மனித உரிமை அமைப்புகளுடன் நெருங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். 

இதுதவிர அவர் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளரல்ல. அவரைப் புலிகள் கைது செய்து சித்திரவதை செய்து கொலை செய்ததிற்கு, அவரது மனித உரிமைச் செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.

தொடரும்..

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment