Follow by Email

Thursday, 16 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -8


நான் புலிகளின் அந்தச் சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த விறாந்தையில் அமர்ந்திருந்த நேரத்தில், காலையிலிருந்தே சிறையின் உள்ளேயிருந்து பல கைதிகள் வெளியே கூட்டிச் செல்லப்படுவதும், ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் திருப்பி அழைத்து வரப்படுவதுமாக இருந்தனர்.

அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான சிவப்புப் பின்னணியில் புள்ளிகளிட்ட சாரத்தை அணிந்திருந்தனர். சிலரின் கால்களில் எனது கால்களிலிட்டது போன்ற இரும்புச் சங்கிலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வாறு போடப்பட்டிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு தத்தித் தத்தி நடந்து சென்றனர். வேறு சிலர் கால்களில் சங்கிலிகள் எதுவுமில்லாமல் சாதாரணமாக நடந்து சென்றனர்.

இந்தக் கைதிகளை அழைத்துச் சென்ற புலி உறுப்பினர்கள் அனைவரும் வயதில் குறைந்த இளைஞர்களாக இருந்தனர். சிலர் நீண்ட காற்சட்டையும் இன்னும் சிலர் சாரமும் அணிந்திருந்தனர். 

அந்த உறுப்பினர்களுக்குக் காவலாக இரண்டு துப்பாக்கி ஏந்திய புலிகள் காவலுக்கு வந்தனர். அவர்கள் கைதிகளின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாது, ஏதோ ஒரு இலக்கத்தைச் சொல்லியே அழைத்தனர். 

அந்த இலக்கங்களுக்கு முன்னால் ஒரு ஆங்கில எழுத்தும் சேர்ந்திருந்தது. அவர்களது கைகளில் ஒரு பைல் இருந்தது. சிலரின் கைகளில் ஒரு தடியும் இருந்ததைக் கவனிக்கக்கூடியதாக இருந்தது. 

கைதிகளை அவர்கள் அழைத்துச் செல்லும்போதே, விளையாட்டாக கைதிகளின் முதுகில் அல்லது பிட்டத்தில் அந்தத் தடிகளால் அடித்து மாடுகளை விரட்டிச் செல்லும் பாணியில் ‘ஓட்டிச்’ சென்றனர்.

நானும் கூடிய விரைவில் அந்த உறுப்பினர்களால் ‘அழைத்துச்’ செல்லப்படலாம் என்பது புரிந்தது.

நான் அங்கு காவலுக்கு நின்றவனை நோக்கி, ‘சிறுநீர் கழிக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவன் அங்கு நின்ற இன்னுமொருவனைக் கூப்பிட்டு ஏதோ சொன்னான். அவன் அதைக் கேட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டு சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு துப்பாக்கியுடன் வந்தான். பின்னர் தன்னுடன் வரும்படி அழைத்தான். நான் சிரமப்பட்டு அவனுடன் எழுந்து சென்றேன்.

என்னை அந்த முகாமின் வேலியோரமிருந்த ஒரு மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, சிறுநீர் கழித்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டு, அவன்  துப்பாக்கியுடன் காவலுக்கு நின்றான். நாங்கள் அங்கே சென்று திரும்பிவர சுமார் அரை மணி நேரம் வரை பிடித்தது.

நான் அந்த புலி உறுப்பினனுடன் சென்ற பொழுது அங்குமிங்குமாக லேசாக நோட்டமிட்டேன். அந்தச் சிறைச்சாலையைச் சுற்றி பல சிறிய கட்டிடங்கள் இருந்தன. சீமெந்தால் கட்டப்பட்டு, மேலே அஸ்பெற்றாஸ் சீற் போட்ட கட்டிடங்கள். அவற்றுக்குள் இருந்த ஒவ்வொரு மேசையின் பின்னாலும் ஒரு புலி உறுப்பினன் கதிரையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால், கட்டிடத்துக்கு வெளியே, மண் தரையில் யாராவது ஒரு கைதி அமர்ந்திருந்தான்.

கைதிகளிடம் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்துகிறார்கள் என்பது புரிந்தது. நான் இவற்றை அவதானிப்பதை உணர்ந்து கொண்ட என்னை அழைத்துச் சென்ற புலி உறுப்பினன,; அங்கிங்கு திரும்பிப் பார்க்காமல் வரும்படி என்னை எச்சரிக்கை செய்தான்.

விசாரணைக்குச் சென்றுவிட்டு வருபவர்களில் சிலர் நொண்டியபடி வருவதை அவதானித்தேன். சிலர் கைகளை உதறிக்கொண்டு வந்தனர். சிலரின் மண்டைகளிலிருந்து இரத்தம் வடிந்த அடையாளம்கூட இருந்தது. அவர்களது முகங்களைக் கூர்ந்து பார்த்தேன். 

அதில் தாங்கமுடியாத வலி இருப்பதையும், அதை அவர்கள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு வருவதையும் காண முடிந்தது. அவர்கள் நான்கு பக்கமும் புலிகளால் பாய்ந்து குதறப்பட்டது போன்ற கோலத்தில் காட்சியளித்தனர்.

காலையில் என்னை விசாரணை செய்த பின்னர், காந்தியை மீண்டும் நான் அங்கு காணவில்லை. ஆனால் பல புலி உறுப்பினர்கள் அங்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்கள் எவருமே புலிகள் வழமையாக அணியும் வரி போட்ட சீருடைகளை அணிந்திருக்கவில்லை. 

சாதாரண இளைஞர்கள் போல காற்சட்டை அல்லது சாரம் அணிந்திருந்தனர். அவர்கள் வெளியே மக்கள் மத்தியில் நடமாடும்போது, அவர்களை புலி உறுப்பினர்கள் என்று யாரும் கொஞ்சமும் சந்தேகப்படமாட்டார்கள். புலனாய்வுப் பிரிவினர் என்றபடியால்ltte_fighters இந்த ஏற்பாடு போலும்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. நான் சிறிது நேரம் படுத்து உடம்பை ஆசுவாசப்படுத்த விரும்பினேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிப்பார்களோ என்ற பயத்தில் உட்கார்ந்தபடியே இருந்தேன். உடம்பு முழுவதும் வலியாக இருந்தது. அதைவிட மனது கடுமையாக வலித்தது.

நேரம் அந்தி சாயும் வேளையை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு மீண்டும் ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. மனம் பதட்டமடையும் நேரங்களில் தனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவதென, பொலிஸ் விசாரணைகளுக்கு அடிக்கடி சென்று வந்த எனது நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

நான் திரும்பவும் அங்கு காவலுக்கு நின்றவனிடம் எனது தேவையைச் சொன்னேன். அவன் என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு, பின்னர் சிரித்தவாறு, “என்ன ஐயா, உங்களுக்குச் சலரோகமோ” என தான் நகைச்சுவை என்று நினைத்த ஒன்றைச் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

பின்னர் அங்கு வந்த இன்னொரு புலி உறுப்பினனை அழைத்து எனது தேவையை அவனிடம் தெரிவித்தான். அவன் என்னை உடனும் அழைத்துச் செல்லவில்லை. எங்கோ சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து இன்னொருவனுடன் திரும்பி வந்தான். கூட வந்தவனின் கைகளில் துப்பாக்கி ஒன்று இருந்தது.

அவர்கள் இம்முறை என்னை வெளியே அழைத்துச் செல்லவில்லை. நான் அமர்ந்திருந்த விறாந்தைக்குப் பின்புறமாக ஒரு அறை இருந்தது. அந்த அறையினின்றும் பகலில் சிலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதை அவதானித்திருந்தேன். அந்த அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றனர். கால்களில் சங்கிலியுடன் இருந்த என்னை முன்பு போல வெளியே அழைத்துச் சென்று வருவது சிரமம் என்று கருதினர் போலும்.

துப்பாக்கியுடன் வந்தவன் காவலுக்கு நிற்க, மற்றவன் அந்த அறையின் இரும்புக் கம்பிகளிலான கதவைத் திறந்து, என்னை உள்ளே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வரும்படி பணித்தான். நான் உள்ளே சென்றேன். உள்ளே செல்லும்போது அங்கிருந்தவர்களை லேசாக நோட்டம் விட்டேன்.

அந்தச் சிறிய அறையில், கிழங்கு அடுக்கியது போல சுமார் இருபது போர் வரையில் நெருக்கமாகச் சுவர்களில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தனர். எல்லோருடைய கண்களும் ஒரே நேரத்தில் என்னைத் திரும்பிப் பார்த்தன. நானும் அவர்களைப் பார்த்தேன்.

திடீரென எனக்கு அதிர்ச்சி! ஆச்சரியம்!!

கடந்த பல மாதங்களாக அவர் எங்கு இருக்கிறார் அல்லது அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டார்களா என்று நாம் அல்லும் பகலும் கேள்வி எழுப்பி வந்த ஒருவர் அங்கு இருந்தார்.

அவர் வேறு யாருமில்லை. எங்களில் பலரால் “தில்லை” எனறு அன்புடன் அழைக்கப்பட்ட தில்லைநாதன் ஆசிரியர் அங்கு ஒரு சுவரில் சாய்ந்தவாறு இருந்தார். புலிகள் என்னைக் கைது செய்யவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், அவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குப் பின்னால் உள்ள ஒழுங்கையில் வைத்து கைது செய்திருந்தனர்.

தில்லையை அங்கு அந்தக் கோலத்தில் கண்டபோது, ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் மறுபக்கம் வேதனையுமாக இருந்தது. எப்போது பார்த்தாலும் புன்சிரிப்புடன் எல்லோருடனும் மிகவும் இனிமையாகப் பழகும் அவர், வெயிலில் வாடப்போட்ட வெற்றிலைக் கொழுந்து போலத் துவண்டு போயிருந்தார். 

கன்னங்கள் குழி விழுந்து, கண்கள் உள்ளே போய் ஒளியிழந்து, உடல் வற்றி, தலைமயிர் மொட்டையடிக்கப்பட்டு, வெறும் எலும்புக் கூடாகக் காட்சியளித்தார்.

தில்லையும் நானும் ஒரு விநாடிதான் ஒருவரை ஒருவர் பார்த்திருப்போம். ‘கடைசியாக உங்களையும் கொண்டு வந்துவிட்டார்களா?’ என்பது போல தில்லையின் பார்வை இருந்தது. அதில் சொல்ல முடியாத கவலையும் ஏக்கமும் இருப்பதை அவதானித்தேன். பதிலுக்கு, ‘உங்களை இங்கேயா இத்தனை நாளும் வைச்சிருக்கிறாங்கள்? இப்படிச் சந்திப்பேன் என நான் கனவிலும் ஒருபோதும் நினைச்சிருக்கவில்லை’ என்பது போல, எனது பார்வையும் சிந்தனையும் இருந்தன.

தில்லை திடீரெனத் தனது தலையைத் தாழ்த்திக் கொண்டார். நான் அங்கிருந்த அடைப்பு எதுவும் இல்லாத மல சல கூடத்தில் எம்பி ஏறி சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பினேன். திரும்பும் போது மீண்டும் ஒருமுறை எங்கள் இருவருடைய கண்களும் சந்தித்துக் கொண்டன. அந்தப் பார்வைகளில் சோகம், ஆற்றாமை, வைராக்கியம், அர்ப்பண உணர்வு என பல்வகைப்பட்ட உணர்ச்சிகள் ததும்பியதாக எனக்குத் தோன்றியது.

நான் பழையபடி எனது அன்றைய இருப்பிடத்துக்கு அழைத்து வரப்பட்டேன். பாயில் உட்கார்ந்த எனது சிந்தனையில், சுற்றுச்சூழலை மறந்து தில்லை பற்றிய எண்ணமே ஆக்கிரமித்தது. கூடவே தில்லை கைதுசெய்யப்பட்ட தினத்தன்று சற்று முன்னதாகவும் பின்னராகவும் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் மற்றும் “செல்வி” என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா ஆகியோர் பற்றிய சிந்தனைகளும் மனதை நிறைத்தன.

அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய அந்த இனிய நாட்கள் நினைவுக்கு வந்து, கண்ணீர் கண்களை நிறைத்தது. உள்ளம் கனத்தது.

தொடரும்.
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

2 comments:

  1. அடுத்த பகுதியை எப்போது எழுதுவீர்கள்?

    ReplyDelete
  2. என்ன ஆச்சு...

    தொடரை தொடர காணோமே.. ஏன்

    புலிகள் என்கவுண்டர் செய்து விட்டார்களா?

    ReplyDelete