Follow by Email

Saturday, 11 January 2014

புலிகளின்இன்னொரு முகம் -7எனக்குப் படுப்பதற்கு ஒரு பாய் தரப்பட்டதாயினும், நான் படுத்துத் தூங்கவில்லை. நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட நேரத்திலிருந்து ஏற்பட்ட அலைச்சல், மன உளைச்சல், குடும்பத்தைப் பற்றிய கவலை, அடுத்து என்ன நடைபெறப்போகின்றது என்ற திகில் என்பன காரணமாக, அமைதியின்றி  விளித்தபடியே படுத்திருந்தேன்.

நேரம் விடிகாலை ஆகிவிட்டபடியால், புள்ளினங்களின் சுதந்திரமான ஆரவாரங்கள் மட்டுமின்றி, சுதந்திரத்தை இழந்த மனிதர்களின் மெல்லிய அரவங்களும் கேட்கத் தொடங்கின. 

கதிரவனின் ஒளிக்கதிர்களின் முன்னே சிறைவாசலில் எரிந்து கொண்டிருந்த கைவிளக்கு, தனது ஒளியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தது. 

கண்மூடாது ஏ.கே.47 துப்பாக்கியுடன் எனக்கு (தமக்கு?) காவல் இருந்த வாயில் காப்போன், எனக்கு அருகில் வந்து, வெளிச்சத்தில் என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்து நின்று கொண்டான்.

உதயத்தின் வெளுப்பில், சிறைக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த மனிதர்களை இப்பொழுது என்னால் பார்க்க முடிந்தது. பலர் இங்குமங்குமாக நடமாடுவது தெரிந்தது. 

அவர்களில் சிலர் தெத்தித் தெத்தி நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூக்களிட்ட சாரங்களை அணிந்திருந்தனர். இது புலிகள் தமது சிறைக் கைதிகளுக்கு வழங்கும் சீருடை போலும்.

நான் சேர்த்து வைத்திருந்த எனது புத்தகத் தொகுதியில், ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் வதை முகாம்கள் பற்றிய சில நூல்களும் வைத்திருந்தேன். அதில் ஹிட்லர் தனது சிறைக்கைதிகளுக்கு வௌ;வேறு நிறங்களில் உடைகளை வழங்கியிருந்தது தெரிய வந்தது. 

கம்யூனிஸ்ட்டுகள், யூதர்கள், ஜனநாயகவாதிகள், பொதுமக்கள் என, ஹிட்லரின் ‘கெஸ்டாபோ’ உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவர்களது வதை முகாம்களில் வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு, அவர்களை அடையாளம் காண்பதற்காக வௌ;வேறு நிறங்களிலான உடைகள் வழங்கப்பட்டிருந்தன. 

ஆனால் எமது சர்வாதிகாரி பிரபாகரனின் கைதிகளுக்கு ஒரே மாதிரியான உடைகள் வழங்கப்பட்டு ‘சமத்துவம்’ நிலைநாட்டப்பட்டிருந்தது.

சிறைக் கம்பிகளுக்கு உள்ளே இருந்த சிலர், வாயிற் காப்போனுக்குத் தெரியாமல் முன்னால் வந்து நின்று, என்னை நோட்டம் விட்டுவிட்டுச் சென்றதை அவதானித்தேன். உள்ளே இருட்டாக இருந்ததால் என்னால் அவர்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு புலி உறுப்பினன் என்னருகில் வந்து, “ஐயா வாங்கோ, முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கோ” என்றான். நான் எழுந்து அவன் பின்னால் சென்றேன்.

பெரும் சாவிக்கொத்தொன்றுடன் வந்த அவன், உயரமான சிறைக் கதவுகளில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் ஆறு வரையிலான பூட்டுகளை ஒவ்வொன்றாகத் திறக்க ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக வாயிற் காப்போன் துப்பாக்கியுடன் நின்றான்.

கதவு திறந்ததும் என்னை வேகமாக பிடித்து உள்ளே தள்ளிய அவன், வேகம் வேகமாகக் கதவைப் பூட்டிக் கொண்டான். பின்னர் உள்ளே இருந்தவர்களை நோக்கி, “வாறவருக்கு முகம் கழுவ தண்ணி குடுங்கோடா” என்று சொல்லி விட்டு, “ஐயா கெதியா முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோ” எனச் சத்தமிட்டுக் கூறினான்.

நான் உள்ளே சென்றதும், பலரும் என்னருகில் வந்து என்னை உற்றுப் பார்த்தனர். சிலர் தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டனர். எனக்கு அவர்களில் ஒருவரையும் தெரிந்திருக்கவில்லை. 

திரும்பிப் பார்த்த போது, பாதுகாவலர்கள் இருவரும் சிறைக்குள்ளே என்ன நடக்கிறது எனக் கவனமாக நோட்டமிட்டவாறு, எனக்காக காத்து நிற்பது தெரிந்தது. இதை அறிந்தோ என்னவோ, அங்கிருந்தவர்கள் யாரும் என்னுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

நான் உள்ளே சென்ற நேரம், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 பேர் வரையிலான கைதிகள், காலைக் கடன்களைக் கழிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு நின்றனா. சுமார் ஒரு முழம் அளவு உயரம் மட்டுமே சுவர் மறைப்பு செய்யப்பட்டிருந்த மல சல கூடத்தில், ஒருவர் பலர் முன்னிலையில் மலம் கழித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் தமக்கு கிடைக்கும் ஒன்று அல்லது இரண்டு தேநீர் குவளைகள் அளவிலான தண்ணீரில், பல் விளக்காமல் (பல் விளக்குவதற்குத் தேவையான எதுவும் அங்கு இல்லை) முகத்தை மட்டும்; ‘கழுவிக்’ கொண்டிருந்தனர்.

நான் அன்று அங்கு ‘விசேட அதிதியாக’ அனுப்பப்பட்டிருந்த படியினால், எனக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் மூன்று ‘கப்’ தண்ணீர் ‘தாராள மனதுடன்’ வழங்கப்பட்டது.

அருகில் ஒருவர் மலம் கழித்துக் கொண்டிருக்க, பலர் நிரையில் காத்திருக்க, அவசரம் அவசரமாக நான் அந்தத் தண்ணீரால் முகத்தை பெயருக்கு கழுவிக் கொண்டேன். துடைப்பதற்கு துவாய் எதுவுமில்லை. 

அங்கிருந்தவர்கள் எப்படித் துடைத்துக் கொள்கிறாhகள் என்று பார்த்த போது, அவர்களும் துவாய் எதுவுமில்லாமல் தாம் கட்டியிருந்த சாரங்களினால் முகத்தைத் துடைத்துக் கொண்டதை அவதானித்தேன். ஓ எனக்கு இது ஒரு புது அனுபவம், ஆனால் அங்கிருந்தவர்களுக்கு இது எல்லாம் பழகிவிட்டது போலும்!

‘தமிழன் இல்லாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்றோர் நாடில்லை’ என்றும், ‘ஆண்ட தமிழினம் மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?’ என்றும், தர்க்க ரீதியாகவும், வீராவேசமாகவும், உணர்ச்சி வெளிப்பாட்டுடனும், ‘வீரபாண்டிய கட்டப் பொம்மன்’ படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவது போலப் பேசி, ‘தமிழீழ தனியரசு’ அமைக்கப் புறப்பட்ட எமது ‘மறத்தமிழர்களின்’ சிறைக்கூடம், இப்படி சகிக்க முடியாமல் நாற்றமெடுப்பதை, எந்த செங்கோல் மன்னனிடம், எந்த ஆராய்ச்சி மணியை அடித்து முறையிடுவது என எனது மண்டையைப் பிய்த்துக் கொண்டேன்.

நான் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக எனது ‘காலைக் கடன்களை’ முடித்துக் கொண்டு வெளியே வந்ததும், காவலுக்கு நின்ற துப்பாக்கிப் பிசாசுகளின் முகத்தில் ஒரு திருப்தி நிலவியதை அவதானித்தேன். அதாவது ‘நீ நல்ல, கீழ்ப்படிவுள்ள பிள்ளை’ என்பது போன்ற ஒரு அங்கீகாரம்.

பழையபடி எனக்குத் தந்த பாயில் போய் அமர்ந்து கொண்டேன். காலையில் சூடான ஒரு வெறும் தேநீராவது குடித்து, தமது அன்றாட வாழ்க்கையை ஆரம்பிப்பது, இலங்கையர்கள் எல்லோரதும் வழமை. அதனால் தான், ‘In Sri Lanka, any time is Tea time’(இலங்கையில் எந்த நேரமும் தேநீர் நேரம்தான்) என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. 

ஏன் இது உலக மக்களின் வழமை என்றுகூடச் சொல்லலாம். (மேற்கு நாடுகளில் தேநீருக்குப் பதிலாக கோப்பி)  நான் அந்த வேளைக்காக ஆவலுடன் காத்திருந்தேன். இந்த நேரத்தில் ஒரு சூடான தேநீர் நெஞ்சுக்குழிக்குள் இறங்குமானால், அது எவ்வளவு மகத்தான விடயமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.

ஆனால் காத்துக் காத்து இருந்தும், அந்தக் ‘கறுப்புத் தங்க’த்தின் சாறு எனக்குக் கடைசி வரை கிடைக்கவே இல்லை. வயிறு புகைச்சல் எடுத்தது. நேற்று மதியத்துக்குப் பின்னர், சில மிடறு தண்ணீர் மட்டுமே என் வயிற்றுக்குள் சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. நேரமோ காலை ஒன்பது மணி ஆகிவிட்டிருந்தது.

சிறிது நேரத்தில், ஒரு பெரிய அலுமினியக் கிடாரத்தை ஒரு தடியில் காவிக்கொண்டு, இரண்டு பேர் சிறை வாசலுக்கு வந்து சேர்ந்தனர். சிறைக்கதவு துப்பாக்கி மனிதர்களின் பாதுகாவலுடன் திறக்கப்பட்டதும், உள்ளேயிருந்து இரண்டு பேர் இரண்டு பிளாஸ்டிக் வாளிகளுடன் வாசலுக்கு வந்து, ஒரு சாப்பாட்டுக் கோப்பையினால் அதற்குள் இருந்த ஏதொவொரு உணவை எடுத்தது, தாம் கொண்டு வந்திருந்த வாளிகளுக்குள் போட்டு நிறைத்தனர். மீண்டும் சிறைக் கதவுகள் மூடிக் கொண்டன.

அதன் பின் ஒரு பிளாஸ்டிக் சாப்பாட்டுக் கோப்பையில் சிறிதளவு வெறும் வெள்ளைச் சோறு போடப்பட்டு, சிறைச்சாலையின் கம்பிக் கதவுகளுக்கூடாக எனக்கு நீட்டப்பட்டது. அதனுடன் ஒரு பிளாஸ்டிக் கப்பில் தண்ணீரும் வைக்கப்பட்டது. 

நான் தயங்கி நிற்கையில் “உங்களுக்குத்தான் சாப்பாடு” என, வாயிற் காப்போன் என்னைப் பார்த்துக் கூறினான். நான் எனது முதலாவது சிறைச்சாலை உணவை வாங்கிக் கொண்டேன்.

காவலாளி என்னையே பார்த்துக்கொண்டு நின்றதால், அந்த உணவில் ஒரு கவளத்தை எடுத்து வாயில் வைத்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது, அது சீனி போட்டு, சீனத்து வெள்ளைப் பச்சையரிசியில் பொங்கப்பட்ட வெண் பொங்கல் என்பது. 

எனக்கு சர்க்கரை வியாதி எதுவும் இல்லாதிருந்த போதிலும், பொதுவாக சிறு வயதிலிருந்தே, இனிப்பு என்றால் எனக்கு அலர்ஜி. ஆனாலும் வேறு வழியில்லை.

எனக்கு அருகில் காவலுக்கு நின்றவன் என்னை நோக்கி, “கெதியாய் சாப்பிட்டிட்டு றெடியா இருங்கோ, காந்தி அண்ணை உங்களுக்காகக் காவலிருக்கிறார்” என்று கூறினான். நான் ஒருவாறு அந்த ‘உணவை’ விழுங்கி முடித்தேன்.

‘காந்தி என்னைச் சந்திக்கக் காத்திருக்கிறாராம்! இந்திய சுதந்திரத்தின் தந்தை என வர்ணிக்கப்படும், மகாத்மா காந்தி அல்லது மோகன்தாஸ் காந்தியைப் பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் எழுதப்பட்ட ஏராளமான நூல்களை, இதற்கு முன் நான் வாசித்திருக்கிறேன்.

 ‘ஈழத்துக் காந்தி’ என தமிழரசுக் கட்சியினரால் வர்ணிக்கப்படும், ‘காற்சட்டை காந்தி’யான (இந்தியக் காந்தி இடுப்பில் ஒரு துண்டுத் துணியுடன் மட்டுமே வலம் வந்ததால், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்று கேலி செய்யப்பட்டவர்) எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இவர்களில் இப்பொழுது நான் சந்திக்கப்போகும் காந்தி எந்த வகையைச் சேர்ந்தவர்?

நான் சந்திக்கப் போகும் காந்தி, இந்தியக் காந்தி போல பொக்குவாய் சிரிப்புடன் இருப்பாரா அல்லது ஈழத்துக் காந்தி செல்வநாயகம் போல கோட் சூட்டுடன் இருப்பாரா? இவர் எந்த ரகம்? எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை. காந்தி என்ற சொல்லே, அகிம்சையின் இன்னொரு வார்த்தையாக இருப்பதால், மனதில் சிறிது தென்பு பிறந்தது. 

சில வேளைகளில் நான் செய்த ‘குற்றங்களுக்காக’ இவர் என்னை அடிக்க நேர்ந்தாலும், தடிகளோ ஆயுதங்களோ கொண்டு அடிக்காமல், மகாத்மா காந்தி எழுதிய, அவரது சுயசரிதை நூலான, ‘சத்திய சோதனை’ புத்தகத்தால் மெதுவாக இரண்டு தட்டு தட்டுவார் என்று எண்ணிக் கொண்டு, அவரது அழைப்புக்காகக் காத்திருந்தேன்.

காந்தி தரிசனத்துக்காக’ நான் காத்திருந்த வேளையில், புலி உறுப்பினன் ஒருவன் வந்து என்னை வரும்படி அழைத்தான். என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், காந்தியின் பெயரை விரும்பிச் சூடியிருக்கும் ஒருவன், குறைந்த பட்சம் கொஞ்சமாவது இரக்க சுபாவம் உள்ளவனாகத்தான் இருப்பான் என்று எண்ணினேன்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில், காந்தியம் பற்றி எதிரும் புதிருமான இரண்டு வியாக்கியானங்களை நான் பார்த்திருந்தேன்.

ஒன்று, புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் இடையில் யுத்தம் மூண்ட பின்னர், இந்தியப் படையினரின் செயலை விமர்சிக்கும் முகமாக, யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியும், ஸ்ரான்லி வீதியும் சந்திக்கும் முட்டாசுக்கடைச் சந்தியில் அமைந்திருந்த விவேகானந்தா அச்சகச் சுவரில், பெரிய சிவப்பு எழுத்துகளில் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகத்தில் பின்வருமாறு குறிப்பிப்பட்டிருந்தது.

‘கோட்சே காந்தியைக் கொன்றான். ஆனால் ராஜீவோ காந்தியத்தையே கொலை செய்துள்ளான்”.

அதாவது கோட்சேயை விட, ராஜீவ் மோசமானவர் என்பதுதான் அதன் சாராம்சம். அதற்காகத்தான் பின்னர் புலிகள், ராஜீவை பெண் தற்கொலைக் குண்டுதாரி மூலமாகக் கொலை செய்தார்களோ என்னவோ?

இன்னொன்று, இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்காக, இந்திய இராணுவ உயர் அதிகாரிகள், ஒவ்வொரு பகுதிகளிலும், அந்தந்த ஊர்களில் உள்ள பல்துறைப் பிரமுகர்களைக் கொண்டு, பிரஜைகள் குழுக்களை அமைத்திருந்தனர். அவ்வாறான ஒரு குழுவின் கூட்டமொன்றில் பங்குபற்றும் ஒரு சந்தர்ப்பம், ஒருமுறை எனக்கும் கிடைத்தது.

நான் பல மாதங்களுக்கு ஒருமுறை, எனது சொந்த ஊரான இயக்கச்சிக்கு எனது சகோதரர்கள், உறவினர்கள், ஊரவர்களைப் பார்க்கப் போவது வழமை. அவ்வாறு போன ஒரு சந்தர்ப்பத்தில், சாவகச்சேரியில் நடைபெற்ற,   தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச பிரஜைகள் குழுக்களின் இணைப்புக் கூட்டத்தில், பச்சிலைப்பள்ளி பிரஜைகள் குழுத் தலைவர் திரு.சி.சுந்தரலிங்கம், பளை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டாக்டர் சு.இரத்தினசிங்கம் ஆகியோருடன், நானும் கலந்து கொள்ள வேண்டிய ஒரு சூழல் வந்துவிட்டது.

நான் கலந்து கொள்ள வேண்டிய சூழல் உருவானதற்கான காரணம், எனது ஊரில் எனது மூத்த சகோதரன் உட்பட சிலரை, புலிகளுக்கு உதவினாhகள் என்ற குற்றச்சாட்டில,; இந்திய அமைதிப்படை கைதுசெய்து ஆனையிறவு இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்தது. அவர்களை விடுவிப்பதற்கு இந்தக் கூட்டச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையிலேயே நான் அதில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். (எனது நோக்கம் பின்னர் வெற்றி பெற்றது)

அந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக, அப்போது இலங்கையிலிருந்த இந்திய அமைதிப்படையின் பிரதம தளபதி சந்தோஸ் பாந்தே, தென்மராட்சித் தளபதி கல்யாண்சிங் உட்பட, பல இந்தியப்படை உயரதிகாரிகளும், தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி பிரஜைகள் குழ உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில், சிக்கி பொதுமக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் பிரஜைகள் குழு உறுப்பினர்களால் எடுத்துரைக்கப்பட்டது. 

பிரச்சினைகளை எடுத்துச் சொன்ன பிரமுகர்கள், (வழமைபோல) புலிகளின் செயற்பாடுகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்திய அமைதிப்படை மீதே எல்லாக் குற்றங்களையும் அடுக்கிக்கொண்டு போயினர். அவர்களுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம், சந்தோஸ் பாந்தேயும், ஏனைய அதிகாரிகளும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களது பொறுமையை பலவீனமாகவோ என்னவோ கருதிய, பிரஜைகள் முன்னணி சார்பாக அதிகம் கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்த சாவகச்சேரி புகையிரத நிலைய முன்னாள் அதிபர் திரு, எஸ்.அருணாசலமும், திரு. வீ.இராஜசங்கரியும் (த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் சகோதரர்), இந்திய அமைதிப்படை அதிகாரிகளைப் பார்த்து, “காந்தியின் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நாட்டைச் சேர்ந்த நீங்கள், இங்கு வந்து காந்தி போதித்த சாத்வீகக் கொள்கைகளுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடலாமா?” என ஆவேசமாகக் குரல் எழுப்பினர்.

உரையாடல் சூடு பிடிக்கத் தொடங்கியதும் அமைதி இழந்த சந்தோஸ் பாந்தே, “காந்தி இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், தனது கொள்கைகளுக்கு எதிரானவர்களைச் சுட்டுப் படுகொலை செய்தாரா? 

வங்கிகளைக் கொள்ளையடித்தாரா? பாலங்களைத் தகர்த்தாரா? மக்கள் பயணம் செய்யும் பஸ்களையும், ரயில்களையும் தீயிட்டுக் கொளுத்தினாரா?” எனக் கோபத்துடன் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

ஆவேசமாகப் பேசிய பிரஜைகள் குழுப் பிரமுகர்கள் வாயடைத்துப் போனார்கள். அத்தோடு இந்திய அமைதிப்படை அட்டூழியங்கள் பற்றி மட்டும் கதைத்வர்கள், வாயடைத்து மௌன விரதம் பூண்டுவிட்டனர். 

கூட்டமும் அமைதியாக முடிந்துவிட்டது. கூட்டம் முடிந்து, நானும் டாக்டர் இரத்தினசிங்கம் அவர்களும், யாழ்நகர் திரும்பும் போது, சாவகச்சேரி நகரில் உள்ள கடையொன்றில், திரு. இராஜசங்கரி வாங்கித் தந்த குளிர்பானத்தை அருந்தி, அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டுச் சென்றோம்.

மறுநாள் காலையில், உள்ள+ர் தினசரியொன்றைப் பார்த்தபோது, இராஜசங்கரி அவர்கள் சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டீல் வைத்து, ‘இனந்தெரியாதோரால்’ சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்த அதிர்ச்சிச் செய்தி முன்பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. இந்தக் கொலையை, சந்தர்ப்பத்தைப் பாவித்துச் செய்தவர்கள், அகிம்சை தேசத்தவர்களா அல்லது அகிம்சை பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டு அராஜகம் புரிந்து கொண்டிருந்தவர்களா என்பது தெரியவில்லை.

இதை நான் இங்கு குறிப்பிடுவதன் காரணம், தத்தம் வர்க்கத்துக்கான அரசியல் நலன்கள், அதைக் காப்பதற்கான யுத்தம் என்று வரும்போது, அதுவரை சம்பந்தப்பட்டவர்களால் பெரிதாகப் பேசப்பட்டு வந்த, ஜனநாயகம், மனித உரிமைகள், அகிம்சை என்பனவெல்லாம் திரும்பத் திரும்ப கேலிக்கூத்தாக்கப்பட்டிருப்பதை, வரலாற்றில் நாம் பல தடவைகள் கண்டுள்ளோம் என்பதை எடுத்துரைக்கவே. 

யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளும் சரி, இந்திய இராணுவமம் சரி, அகிம்சையைப் பேசிக்கொண்டு, அராஜகத்தையே அரங்கேற்றினர் என்பதை, பின்னர் நடந்த சம்பவங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன.

இந்தப் பின்னணியில், எமது அகிம்சாமூர்த்தி, மிதித்த இடத்துப் புல் சாகாத சாது, ‘காந்தி அம்மானை’ சந்திப்பதற்காக, அழைப்பாணை கொண்டு வந்தவனுடன் புறப்பட்டேன். 

எமது காந்தி சாது, முன்னைய காலங்களில் முனிவர்கள் அமைத்தது போன்ற வட்ட வடிவமான ஓலைக்குடில் அமைத்து, மேலே வேப்ப மர நிழல் குடை பிடித்திருக்க ஒரு சிம்மாசனம் போன்ற கதிரையில் வீற்றிருந்தார்.

இந்தக் காந்தியின் தோற்றத்தைப் பார்த்ததும், நான் அவன் பற்றி உருவாக்கி வைத்திருந்த பிம்பங்கள் எல்லாம், நொடிப்பொழுதில் தகர்ந்து விழுந்தன. அவனது நெடிதுயர்ந்த உயரம். நீண்ட கரங்கள். பெரிய மீசை. கருமையான புருவங்கள். கட்டுக்கடங்காத சுருள் தலைமயிர். விசமமும் கேலியும் கலந்த பார்வை என்பன, இவன் அந்தக் காந்தியின் கால்தூசுக்கும் பெறுமதியில்லாதவன் என்பதை எடுத்துரைத்தன. 

அவனது இருக்கை மீது, அவனது தண்டாயுதமாக, நன்கு சீவி உருட்டி எடுத்த மரப் பொல்லு ஒன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு பக்கமும் நாக்கைத் தொங்கவிட்டவாறு, அரைநிலையில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு பொமனேரியன் நாய்க்குட்டிகளை, அவனது கைகள் இரண்டும் வருடிக் கொண்டிருந்தது. இவ்வாறுதான், அந்தச் சாதுவின் ‘பற்றற்ற’ கோலம் அமைந்திருந்தது.

நான் காந்திக்கு முன்னே போனதும், என்னை அழைத்து வந்தவன் பின்தங்கிவிட்டான். காந்தி என்னைப் பார்த்து ஒரு விசமச் சிரிப்பை உதிர்த்துவிட்டு,
“மணியத்தார், மணியண்ணை, மணியம் வருக வருக” எனக் கேலியும், கிண்டலுமாக வரவேற்றான்.

“நீங்கள் இங்கு வருவீர்கள் எனக் கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், என்ன?” என அடுத்தொரு கேள்வியை வீசினான்.

பின்னர், “உதிலை இருங்கோ” என, தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த வயர் பின்னலுள்ள நாற்காலிகள் இரண்டில் ஒன்றைச் சுட்டிக்காட்டினான்.

நான் அமர்ந்து கொண்ட பின்னர், எனது சேர்ட் பொக்கற்றுக்குள் திடீரென கையை நுழைத்து, நான் வைத்திருந்த எனது ஆஸ்த்மாவுக்கான மருந்துக் குளிகைகளை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். 

பின்னர் என்னை நோக்கி, “கடுமையான வருத்தக்காரன் என்று காட்டி, எங்களைச் சுத்துறதுக்கு (இந்தச் சொல், புலிகளின் நாளாந்த வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு ‘கலைச்சொல’; என்பதை, பின்னைய நாட்களில் தெரிந்து கொண்டேன்) மருந்துக் குளிசையோடை திரியிறியள்” என, ஏதோ ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதைப் போலச் சொல்லிச் சிரித்தான்.

சில விநாடிகள் அமைதி நிலவியது. காந்தி (நான் இந்தப் பிரகிருதியை, இந்த தொடர் முழுவதும் இந்திய சுதந்திர பிதா மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டி இருப்பதற்காக, அவர் என்னை மன்னிப்பாராக) என்னை தலையிலிருந்து கால்வரை கண்களை உருட்டி உருட்டி உன்னிப்பாகப் பார்த்தான். பின்னர் திடீரென என்னை நோக்கி,

“டொக்டர் சிறீதரனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவனுடன் திண்டது, குடித்தது, படுத்தது, ஓ....தது எல்லாவற்றையும் சொல்லிப்போடு. இல்லையெண்டால் நடக்கிறது வேறை” என உறுமினான்.

திடீரென அக்கேள்வியைக் கேட்டதால், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்காக அந்தக் கேள்வி இந்த இடத்தில் வந்ததென்றும் விளங்கவில்லை. இருந்தாலும் நான் சமாளித்துக் கொண்டு, “அவர் எனது நீண்ட நாளைய நண்பர். அதைத் தவிர விசேசமாக ஒண்டும் இல்லை” எனச் சொன்னேன்.

அவ்வளவுதான். என் மீது ஒரு உதை விட்டான். நான் கதிரையுடன் சேர்ந்து தரையில் சரிந்து விழுந்துவிட்டேன். பின்னர் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து இருக்க முயற்சிக்கையில், திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த கொட்டனால், என்மீது சரமாரியாகத் தாக்கத் தொடங்கினான். 

அவன் கோபமடையும் போது, நாக்கை பற்களுக்கிடையில் வைத்துக் கடித்துக் கொண்டு, முழிகளை உருட்டிக் கொண்டு உறுமுவது வழக்கம் என்பதை, பின்னர் பல தடவைகளில் கண்டேன்.

என் தலையைத் தவிர உடம்பு முழுவதும் சுமார் மூன்று நிமிடங்கள் வரை தாக்குதல் நடந்தது. (தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்) பின்னர் என்னை நோக்கி, “என்னடா எங்களுக்குச் சுத்தலாம் எண்டு பாக்கிறியா? உன்னைப் போல ஆயிரம் பேரைக் கண்டனாங்கள்” என கர்ச்சித்தான்.

இவன்களிடம் உண்மையைக் கூறியோ, நியாயம் பேசியோ பிரயோசனம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அமைதியாக எழுந்து நின்றேன். அவனது தாக்குதலால் உடம்பு முழுவதும் வலி எடுத்தது. மனதுக்குள் அழுதேன்.

ஏனெனில் என் நினைவுக்கு எட்டியவரை, எனது சிறு வயதிலோ அல்லது பின்னரோ எனது தாய் தந்தையரோ அல்லது சகோதரர்களோ, எனக்கு ஒருபோதும் அடித்ததாக ஞாபகம் இல்லை. சில வேளைகளில், சிறு வயதில் நான் செய்த குழப்படிகளுக்காக, ஒரு தடியை எடுத்து வெருட்டியிருக்க்கூடும். 

நான் கல்விகற்ற காலத்திலும் கூட, எந்த ஒரு ஆசிரியரிடமும் நான் ஒருபோதும் அடி வாங்கியதில்லை. ஆனால் படிப்பு வாசனையற்ற, (இவர்களில் அநேகரின் நிலை அதுதான்) பண்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும், இந்த மிருகங்களின் கையால் அடி வாங்கியது, ஒருபக்கம் மன வேதனையாகவும், இன்னொரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.

இதற்கு முன்னர், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களின் போதும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களின் போதும், நான் சில சந்தர்ப்பங்களில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறேன். 

ஆனால் அந்த நேரங்களில் எல்லாம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிசார் என்னிடம் அத்துமீறி நடக்கவில்லை. (பொலிசார் எல்லோருடனும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாகரீகமாகத்தான் நடந்து கொண்டார்கள் எனபது, இதன் அர்த்தமல்ல)

நான் அமைதியாக எழுந்து நின்றேன். அவன் எனக்கு இருக்க ஆசனம் தந்த பொழுது, என்னைச் சிறிதளவாவது கௌரவத்துடன் நடாத்துவான் என எண்ணினேன். ஆனால் முதல் சந்திப்பே கோணலாகிவிட்டது. எனவே இனி முற்றிலும் கோணல் என்பது விளங்கியது.

அவன் எழுந்து நின்று, மீண்டும் அந்தக் கொண்டனால் என்மீது தாக்குதல் நடாத்திவிட்டு, “இண்டைக்கு ஒருநாள் தாறன். அதுக்குளை யோசித்து நீ செய்த குற்றங்கள் எல்லாத்தையும் நீயாகச் சொல்லிப்போடு. இல்லையெண்டால் உன்ரை பொஞ்சாதி பிள்ளை உனக்கு அந்திரிட்டி செய்ய வேண்டி வரும்” என எச்சரித்தான்.

பின்னர் அங்கு நின்ற ஒருதனைக் கூப்பிட்டு, “அவர் என்ன பெரிய துரையா?  கொண்டு போய் சங்கிலி போடடா” என உத்தரவிட்டான்.

அவன் என்னை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். எனக்குப் பின்னே காந்தியினதும், வேறு யாரோ இரண்டொருவரினதும் சிரிப்பொலிகள் கேட்டன.

‘சங்கிலி போடச் சொல்லி இருக்கிறான். அது என்ன சங்கிலி?’ என யோசித்தவாறு அவனுக்குப் பின்னால் நான் போய்க் கொண்டிருந்தேன்.


தொடரும்
நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment