Follow by Email

Thursday, 9 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -6சங்கிலி போடுவது என்றதும், என்ன நடக்கப் போகிறது என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

எமது வீடுகளில் நாய்களை சங்கிலிகளால் கட்டி வைப்பது நினைவுக்கு வந்தது. அந்தச் சங்கிலயை ‘நாய்ச் சங்கிலி’ என அழைப்பர்.

நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த ‘மனோகரா’ படத்தில், ஒரு தூணில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிகரமாகப் பேசிய அடுக்கு வசனங்களும் ஞாபகத்துக்கு வந்தன.

மனித சமுதாயம் அடிமை நிலையில் இருந்த காலத்தில், போர்களில் வென்ற ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை நீண்ட சங்கிலிகளில் பிணைத்து வைத்திருப்பர் என்பதை புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

பிரித்தானிய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் தம் ‘முக்கோண வர்த்தகம்’ எனப்படும் (ஆபிரிக்காவில் கறுப்பு அடிமைகளை வாங்கிச் சென்று, அவர்களை அமெரிக்காவிலுள்ள பருத்தி பயிரிடும் முதலாளிகளுக்கு விற்றுவிட்டு, அதற்குப் பண்டமாற்றாக பருத்தியை வாங்கி இங்கிலாந்து கொண்டு சென்று, அவற்றை ஆடைகளாக்கிப் பின்னர் அந்த ஆடைகளை இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்று இலாபம் சம்பாதிப்பது) வர்த்தக நடவடிக்கைகளின் போது, தமது ஆபிரிக்க அடிமைகளை கப்பல்களில் ஏற்றுவதற்கு முன்னர் அவர்களை வாங்கும் நாடுகளின் கடற்கரைத் துறைமுகங்களில் நீணட சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்ததையும் நான் படங்களில் பார்த்திருக்கிறேன்.

துறைமுகங்களில் தமது முன்னைய சந்ததியினரை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் பிணைத்து வைத்திருந்த அடிமைச் சங்கிலிகள் சிலவற்றை, சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட சில ஆபரிக்க நாடுகள் தமது கடந்த காலத்தின் ஞாபகார்த்தச் சின்னமாக இன்றும் பாதுகாத்து வைத்திருக்கின்றன.

இவற்றில் புலிகள் எனக்கப் போடப்போகும் சங்கிலி எவ்வகையானது? பொலிசார் சில சிலவேளைகளில் மிகவும் பயங்கரமான சந்தேக நபர்களுக்குப் போடுவது போன்ற ‘கைமாசு’ எனப்படும் கைச்சங்கிலி போடப் போகிறார்களா அல்லது கால்களில் சங்கிலி போட்டு இந்தப் ‘பயங்கரவாதியை’ கட்டி வைக்கப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

என்னை அழைத்துச் சென்றவன் கொட்டில் போன்ற ஒன்றின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான். அங்கு ஏதோ இரும்பொன்றில் வெல்டிங் கம்பியினால் தீவிரமான ஒட்டுவேலையில் ஈடுபட்டிருந்த ஒருவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

என்னை அழைத்து வந்தவன் அவனைப் பார்த்து, “இவருக்கு சங்கிலி போடச்சொல்லி காந்தி அண்ணை சொன்னவர்” என்று கூறினான்.

“எத்தனை குண்டிலை போடச் சொன்னவர்” என அவன் உடனடியாக திருப்பி வினவினான்.

“ஒண்டும் சொல்லல்லை. வழமையான குண்டிலை போடன்” என என்னைக் கூட்டி வந்தவன் சர்வசாதரணமாக பதில் சொன்னான்.

இந்த ‘எத்தனை குண்டு’ என்ற சங்கதியை, பின்னர் நான் புலிகளுடன் கழித்த ஒன்றரை ஆண்டுகளில் விபரமாக அறிந்து கொண்டேன். அதாவது, ‘குற்றவாளி’யின் தரத்தைப் பொறுத்து அவருக்குப் போடும் கால் சங்கியில், எத்தனை குண்டுகள் (வளையங்கள்) இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே இது.

அதன் பின்னர், அந்தக் கம்மாலையில் பொறுப்பாக இருந்தவன் என்னை அங்கிருந்த முக்காலி ஒன்றில் அமருமாறு சொன்னான். பின்னர் கால்கள் இரண்டையும் அங்கிருந்த ரயில் தண்டவாள இரும்புத் துண்டொன்றில் வைத்திரும்படி கூறினான். 

அதன் பின்னர் இரண்டு இரும்பு வளையங்களை எடுத்து எனது இரண்டு கால் பாதங்களுக்கும் மேலாக கணுக்காலில் போட்டு வளைத்தான். பின்னர் சுமார் ஒரு முழம் நீளமான இரும்பு சங்கிலியொன்றை எடுத்து அதன் இரண்டு நுனி குண்டுகளையும் (வளையங்களையும்) கணுக்காலில் போடப்பட்டிருந்த அந்த இரும்பு வளையங்களில் நுழைத்துவிட்டு, அவை கழன்றுவிடாதபடி வெல்டிங் றொட் ஒன்றினால் ஒட்ட ஆரம்பித்தான்.

அந்த வெல்டிங் றொட்டின் சூடுபட்டு எனது கால்கள் வேதனையால் துடித்தன. அவன் அதைப்பற்றி எவ்வித கவலையுமின்றி குனிந்த தலை நிமிராமல் ஒட்டு வேலையில் ஈடுபட்டிருந்தான். ஒட்டி முடிந்ததும், ஒட்டிய இடங்களில் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு, என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு புன்சிரிப்புச் சிரித்தான். ‘எப்படி என்ரை வேலை’ என்பது போல அந்தச் சிரிப்பு இருந்தது.

அதன் பின்னர், என்னைக் கூட்டி வந்தவன் தன் பின்னால் வரும்படி கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

இப்பொழுது நான் சாதாரண மனிதன் அல்ல. ‘சிறகொடிந்த பறவை போல’, கால் ஒடிந்த அடிமை. இவ்வளவு காலமும் நடந்தது போல இனி என்னால் நடக்க முடியாது. தத்தித் தத்தித்தான் நடக்க வேண்டும். 

சாக்கில் புகுந்து ஓடும் ஒருவித விளையாட்டை விட, எனது ‘விளையாட்டு’ மோசமாக இருக்கப் போகிறது. ஆண்டவனை நினைத்தும் பிரயோசனமில்லை. 

இந்தக் கொலைகாரப் பாவிகளுக்குப் பயந்து ஆண்டவர் எப்பொழுதோ தமிழ் பிரதேசங்களை விட்டு வெளியேறியிருப்பார் என நினைக்கிறேன்!

எனது முதல் அனுபவத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. எனவே நான் அவனுக்குப் பின்னால் தத்தித் தத்தி மெதுவாக ஊர்ந்து சென்றேன். அவன் என்னை அவசரப்படுத்துவது போல, திரும்பித் திரும்பிப் பார்த்தான். 

உண்மைதான். அவனுக்கு இன்னும் எத்தனை பேரைக் கூட்டிவந்து சங்கிலி – காப்பு போடும் வேலை இருக்கின்றதோ? அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு வேகமாக நடக்க முயன்றேன்.

ஒருவாறு பிரதான சிறைச்சாலை வாசலை அடைந்து விட்டோம். இப்பொழுது பிரச்சினை எவ்வாறு அதன் படிக்கட்டுகளில் ஏறுவது என்பதுதான். நான் என்ன செய்வது எனத் தடுமாறுகையில், அந்தப் புலி உறுப்பினன் எனக்கு வழிகாட்டினான். 

அவன் சொன்னபடி நான் அதன் படிக்கட்டுகளில் பின்புறமாகத் திரும்பி இருந்து கொண்டு, ஒவ்வொரு படியாக கைகளை ஊன்றி பின்பக்கமாக ஏறி எனது இருக்கையை அடைந்து, பாயில் அமர்ந்து கொண்டேன்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாலும், மகாபாரதத்தில் ஒரு அத்தியாயம் முடிந்தது போன்றதொரு ஆசுவாசம் ஏற்பட்டது. வாசலில் காவலுக்கு நின்ற ஆயுததாரி என் புதுக் கோலத்தைப் பார்த்து ரசித்தான். 

அது அவர்களது பிழையல்ல. இந்தப் பதின்ம வயதில் இயல்பாகவே இவையெல்லாம் அவர்களுக்கு இரசனைக்குரியன தானே? அதுவும் புலிகள் தமிழ் சமூகத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய சிக்ஸ்ரி(60), செவின்ரி(70), எயிற்றி(80), நைன்ரி(90) என்ற எமது வயோதிபர்கள் பற்றி நையாண்டியாக உருவாக்கிய கலைச் சொற்கள் அவர்களை ஞாபகப்படுத்தாமல் விடுமா என்ன?

நான் பாயில் அமர்ந்தவாறு எனது புது அணிகலனான கால் சங்கிலயைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் ஆண் - பெண் என்ற வேறுபாடு இல்லாமல் கழுத்தில் சங்கிலி, கையில் சங்கிலி, விரலில் மோதிரம், காதில் தோடு என பல நகைகளை எல்லா வயதினரும் அணிகிறார்கள். 

அதுதவிர பெண்கள் இரண்டு கால்களிலும் அல்லது நாகரீகமாக ஒரு காலில் வெள்ளிச் சங்கிலி அணிகிறார்கள். நான் எனது சிறு வயதில் கைகளில் மோதிரம் அணிந்திருக்கிறேன். அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பின்பு, எமது கட்சித் தோழர்கள் பின்பற்றும் எழுதப்படாத மரபை ஏற்று, கை மணிக்கூட்டைத் தவிர நான் வேறு எவ்;வித அணிகலன்களும் அணிவதில்லை.

அந்த வகையில், நமது புலிகளுக்குநான் நன்றி சொல்ல வேண்டிய பாரிய கடப்பாடு ஒன்று எனக்குண்டு. அவர்கள் எனது கால்களில் பவுண் கணக்கில் என்றில்லாமல், கிலோ கணக்கில் ஒரு நகையை அணிவித்திருக்கிறார்கள். 

அதுவும் லெனின் ஒருமுறை குறிப்பிட்டது போல, கழிப்பறைக்கு உபயோகிப்பதைத் தவிர (அதன் வழுக்கும் தன்மை காரணமாக), வேறு ஒன்றுக்கும் பயன்படாத தங்கத்தை விடுத்து, மனித சமுதாய வளர்ச்சிக்கு உதவிய, கைத்தொழில் புரட்சியின் அடிப்படையாக அமைந்த இரும்பில் செய்த பாரிய நகையொன்றையல்லவா அவர்கள் எனது கால்களில் அணிவித்து, என்னை அழகுபடுத்தியிருக்கிறார்கள்!

எனது சிந்தனையெல்லாம் காந்தி எனக்கு விதித்திருந்த ஒரு நாள் காலக்கெடு பற்றியே சுற்றிச் சுழன்றது. அவன் சொன்ன கால அவகாசத்துக்கடையில் நான் நன்றாகச் சிந்தித்து, டாக்டர் சிறீதரனோடு உள்ள கள்ள உறவுகள் குறித்தும், நான் செய்த குற்றங்கள் குறித்தும் ‘ஒப்புதல் வாக்குமூலத்துக்கு’த் தயாராக வேண்டும். அல்லது என்ன நடக்குமோ தெரியாது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் ஹிட்லரின் கெஸ்டாபோ உளவுப் படையால் கைதுசெய்யப்பட்டு, நாஜிகளின் கொடுஞ்சிறையில் பெரும் சித்திரவதைகளுக்குள்ளான செக்கோஸ்சிலோவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜூலியஸ் பூசிக்கும், அவரது மனைவி மற்றும் தோழர்களும் பட்ட அவலத்தை, அவரது அழியாப் புகழ்பெற்ற, “தூக்கு மேடைக் குறிப்புகள்” என்ற நூல் மூலம் நான் வாசித்திருக்கிறேன். எழுத்தில் இருந்த போதும், நேரில் காண்பது போல எம்மை உணர்ச்சி வசப்படுத்திய நூல் அது.

அந்த உண்மையை உரைத்த வலராற்று ஆவணம் பின்னர், from Gallows’ என்ற திரைப்படமாக வந்தபோதும் பார்த்திருக்கிறேன். தூக்குமர நிழலில் நின்று அவர் எழுதிய அந்த அமர காவியம் போன்ற நூலில் கூறப்பட்டவை எதுவும் கற்பனைகளல்ல. அத்தனையும் இரத்தத்தால் எழுதப்பட்ட உயிரோவியங்கள். 

அதனால்தான், பூசிக்கின் அனுபவங்கள் இன்றளவும் உலகின் கோடானுகோடி மக்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவங்கள் நமது தமிழ் மண் பெற்றெடுத்த ஹிட்லர்களால் எனக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் திரும்பத் திரும்ப எனது மனதை அலைக்கழித்தது.

இடையிடையே எனது மனைவி மற்றும் குழந்தை பற்றிய நினைவுகள் என்னை வாட்டியெடுத்தது. என்னதான் நாம் பெரும் பெரும் இலட்சியங்கள் பேசினாலும், எமது வாழ்வு ஒரு குடும்பத்தைப் பின்னிப் பிணைந்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. 

அது முதலில் தாயை அடிப்படையாகவும், பின்னர் தாரத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்கிறது என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் கூட, மனித சமுதாயத்தின் மிக அடிப்படையான கூறு குடும்பம் என வரையறுத்திருக்கிறது போலும்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் காந்தியின் மரத் தண்டாயுதத்தால் வாங்கிய ‘பூசை’, பின்னர் இரும்புச் சங்கிலியால் ஏற்பட்ட ‘அன்புப் பிணைப்பு’ என எல்லாமே திகிலூட்டுவனவாகவும், படிமுறை ‘பரிணாம வளர்ச்சசி’யைக் காட்டுவனவாகவும் அமைந்திருந்தன.

என்ன இருந்தாலும் சிறை வாழ்க்கையின் ஒரு ஒழுங்குமுறை எனச் சிலர் கூறுவது போல, ‘மணி அடிச்சால் சாப்பாடு, மயிh முளைச்சால் சவரம்’ என்பது போல, காலையில் வழங்கிய சீனிப் பொங்கலின் ஒரு பகுதி, மீண்டும் மதிய உணவாக என் முன் வைக்கப்பட்டது.

தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment