Follow by Email

Wednesday, 8 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -5

புலிகளின் இன்னொரு முகம்-1                        புலிகளின் இன்னொரு முகம்-2
புலிகளின் இன்னொரு முகம்-3                        புலிகளின் இன்னொரு முகம்-4புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளன் சின்னவனை மீண்டும் அங்கே கண்டதும், இன்னமும் ஏதோ விபரீதங்கள் தொடரப் போகின்றன எனத் தோன்றியது.

சின்னவன் என்னைக் கண்டதும், “எப்படி ஐயா இருக்கிறியள்?” என ‘மிகுந்த அக்கறையுடன்’ வினவினான்.

நான், “இருக்கிறேன்” என சுருக்கமாகப் பதிலளித்தேன்.

உண்மையில் அவனது கேள்வியின் அர்த்தம்,; ‘ எப்படி எங்கள் சிறை உபசரிப்பு?’ என்ற கிண்டலும், எனது பதிலின் அர்த்தம், ‘உங்கள் கையில் அகப்பட்டு விட்டேன்.

இனியென்னன்ன, நீங்கள் நினைத்ததைச் செய்ய வேண்டிது தானே?’ என்பதும்தான். ஆனால் அதை நாம் இருவரும் போலியான நாகரீக முலாம் பூசிக் கதைத்துக் கொண்டோம்.

பின்னர் அவன் அங்கிருந்தவனிடம் ஏதோ இரகசியமாகக் கேட்டான். அங்கிருந்தவன் அறையொன்றின் உள்ளே சென்றுவிட்டு, கையில் ஒரு கறுப்புத் துணியுடன் வந்தான். அதன் பின்னர் சின்னவனும், அவனுடன் வந்த இன்னொருவனும், அவர்கள் வந்த சைக்கிளின் அருகே என்னைக் கூட்டிச் சென்றனர்.

சின்னவனுடன் வந்தவன் சைக்கிளில் ஏறி அமர்ந்தவுடன், சின்னவன் என்னருகில் வந்து, எனது கண்களை அந்தக் கறுப்புத் துணியால் மூடிக் கட்டினான். பின்னர் மற்றவனுடைய சைக்கிள் பாரில் என்னை ஏறி இருக்கும்படி கூறினான்.

எனக்கு இந்த ‘கண்கட்டு’ நிகழ்வு, மனதில் பெரும் கிலேசத்தையும், துக்கத்தையும் உண்டுபண்ணியது. எனது வாழ்வில் முதல் தடவையாக, நான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பார்க்க முடியாதவாறு, செயற்கையாக மனிதர்களால் என் கண்கள் மறைக்கப்பட்ட போது, ‘ஓ’ என்று கதறி அழ வேண்டும் போல இருந்தது.

நான் சிறுவனாக இருந்தபொழுது, எனது தாய் தந்தையரின் பிறப்பிடமான அச்சுவேலி - இடைக்காட்டில், எனது இரு அண்ணன்மாருடன் சேர்ந்து, எனது பெரிய தாயாரின் அரவணைப்பில் இருந்து அங்கு கல்வி கற்றேன். அப்பொழுது அங்கு பல விதமான விளையாட்டுகளில் ஈடுபடுவோம்.

கிட்டி அடித்தல், கிளித்தட்டு, வார் ஓட்டம், தாயம் போடுதல், குண்டுக்காய், சீட்டு விளையாட்டு, மாங்கொட்டை கெந்தி அடித்தல், இலுப்பைக் கொட்டை அடித்தல், பட்டம் விடுதல், ஒளித்து விளையாடல்; என பல விளையாட்டுகளின் வரிசையில், கண்களை ஒருவருக்கு கட்டிவிட்டு, அவர் மற்றவர்களை தேடி அடையாளம் பிடிக்கும் ஒரு விளையாட்டும் இருந்தது.

ஆனால் நான் அந்தச் சிறு வயதிலேயே அந்த கண்கட்டு விளையாட்டில் சேருவதில்லை. முதல் ஒரு தடவை அதில் சேர்ந்து எனது கண்களைக் கட்டிய பொழுது, உலகமே இருண்டு நான் அனாதரவாகி விட்டதான ஒரு பய உணர்வு என்னுள் ஏற்பட்டதால், பின்னர் நான் மற்றவர்கள் அவ்விளையாட்டை விளையாடும் போது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பேன்.

அப்படி நான் விளையாட்டாகத் தன்னும் விளையாடாத அந்த செய்கையை, இப்பொழுது இந்த புலி காட்டுமிராண்டிகள் எனக்குச் செய்த பொழுது, ஒரு பக்கம் அழுகையும், இன்னொரு பக்கம் அவர்கள் மீது சொல்லொணா ஆத்திரமும் பீறிட்டுக்கொண்டு வந்தது.

என்னைச் சைக்கிளில் ஏற்றிச் சென்றவனுடன் சின்னவனும் கூட வருகிறான் என்பதை, அவர்கள் இருவரினதும் உரையாடலிலிருந்து புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை எங்கே கொண்டு செல்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆனால், இதுவரை அவர்கள் என்னை வைத்திருந்த முகாம் தற்காலிகமானது என்பது மட்டும் புரிந்தது.

சிறிது நேரம் ஓடிய பின்னர், ஒரு இடத்தில் நிறுத்தினர். பின்னர் என்னைச் சைக்கிளிலிருந்து இறக்கி, கைகளைப் பிடித்து சில படிக்கட்டுகளில் ஏற்றிச் சென்று ஒரு வாங்கில் இருத்தினர். அதன் பின்னர் அவர்கள் யாருடனோ உரையாடுவது புரிந்தது. பின்னர் அவர்கள் என்னருகில் வந்து, எனது கண்களை மறைத்துக் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டனர்.

என்னைக் கொண்டு வந்தவர்களுடன், அந்த முகாமின் பொறுப்பாளன் என்று கருதக்கூடிய ஒருவன் என்னருகில் மிக நெருக்கமாக வந்து நின்று, என்னை மிகவும் கவனமாக உற்றுப் பார்த்தான்.

பின்னர் அவர்கள் சில அடி தூரம் தள்ளிச்சென்று ஏதோ கதைத்தார்கள். அந்த முகாமிலிருந்தவன் அப்பால் செல்லும் போது மற்றவர்களைப் பார்த்து, “ஆளைப் பாத்தால் சாதுவானவர் போலை கிடக்குது” எனச் சொன்னது எனது காதுகளில் கேட்டது.

அந்த முகாமிலும், நான் முன்னர் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்தது போல, முன்னால் ஒரு வட்டக் கொட்டில் போடப்பட்டு, ஒரு டுஆபு ரக துப்பாக்கியுடன் ஒருவன் காவலுக்கு இருந்தான். யாருக்கு பயப்பட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

என்னை அழைத்து வந்தவர்கள், அங்கிருந்தவனிடம் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை ஏதோ தீவிரமாக உரையாடினார்கள். அவர்களது உரையாடலிலிருந்து, இவர்களது ஏதோவொரு கருத்தையோ அல்லது வேண்டுகோளையோ அவன் ஏற்கவில்லை என்பது தெரிந்தது. பின்னர், அவர்கள் என்னை திரும்பவும் சைக்கிளடிக்கு கூட்டிச் சென்று, எனது கண்களை திரும்பவும் கட்டிவிட்டு, சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.

சிறிது நேர ஓட்டத்துக்குப் பின்னர், இன்னொரு முகாமுக்கு கொண்டு சென்று என்னை இறக்கினார்கள். அங்கும் முன்னது போலவே எல்லா சம்பிரதாயங்களும் நடந்தன. அங்கும் அந்த வட்டக் கொட்டில் காட்சி இருந்தது. ஒரு பூனையோ நாயோ அசைந்தாலும் கூட, அவற்றை உடனடியாகவே சுட்டுவிடக்கூடிய உசார் நிலையில், அந்தக் காவலாளிகள் வைக்கப்பட்டிருந்ததை அவதானித்தேன்.

ஏன் இவ்வளவு முன்னெச்சரிக்கை என்பதுதான் புரியவில்லை. இப்பொழுது யாழ் குடாநாட்டில் புலிகளுக்கு சவால் விடக்கூடிய எந்தச் சக்தியும் இல்லை. 1990ல் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் சேர்ந்துகொண்டு இந்திய அமைதிப்படையை புலிகள் வெளியேற்றிய பின்னர், மாற்று இயக்கங்கள் எதுவும் அங்கு செயற்படுவதில்லை. அவர்களில் சிலர் இந்திய இராணுவத்துடன் இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். இன்னும் சிலர் தென்னிலங்கையில் தலைமறைவாகிவிட்டனர். வசதியானவர்கள் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். 

செய்வறியாது அகப்பட்ட, சுமார் நாலாயிரம் பேர் வரையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட் மற்றும் சில சிறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், துணுக்காயிலிருந்த புலிகளின் மிகப்பெரிய வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டு, மிக மோசமான சித்திரவதைகளின் பின்னர், படிப்படியாகக் கொல்லப்பட்டுப் கொண்டிருந்தனர்.

பெரும்பாலும் தமக்கு எதிரான இயக்கங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் கைதுசெய்து முடித்த பின்னரே, என் போன்ற சட்டபூர்வமான அரசியல் கட்சிகளில் செயல்பட்டவர்கள் மீது கைவைக்க ஆரம்பித்திருந்தனர்.

அவர்கள் கடித்தால் திருப்பிக் கடிக்கக்கூடியவர்கள் அல்ல நாங்கள். அப்படியிருக்க, ஏன் இந்த அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது எனக்கு விளங்கவில்லை.

ஒருவேளை பலர் கூறுவது போல, புலிகளின் தலைவர் பிரபாகரன் யாரையும் நம்பாதவர், எல்லோரையும் சந்தேகிப்பவர் என்ற காரணத்தால், தம்மவர்களிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக இந்த ஏற்பாடோ என்னவோ?!

நாம் சென்ற அந்த இடத்திலும், என்னைக் கூட்டிச் சென்றவர்கள் எதிர்பார்த்த விடயம் நடக்கவில்லைப் போலும். அங்கிருந்தும் எனது கண்களை மீண்டும் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். அதன் பின்னரும் சில முகாம்களுக்கு என்னைக் கொண்டு சென்றார்கள்.

பெரும்பாலும் அந்த முகாம்கள் எல்லாம,; யாழ் நகரை அண்டிய பகுதிகளிலேயே இருந்ததை என்னால் அனுமானிக்க முடிந்தது. போன எல்லா இடங்களிலும் ஒரேவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் நிகழ்ந்தன. சென்ற எல்லா இடங்களிலும், ஒன்று தவறாமல் அதே வட்டக் கொட்டில் காட்சிகள் இருந்தன.

ஒரு இடத்தில் மட்டும், அவர்களது உரையாடல் எனக்குத் தெளிவாகக் கேட்டது. அங்கு பொறுப்பாக இருந்தவன் என்னைக் கொண்டு சென்ற சின்னவனைப் பார்த்து, “அம்மானின்ரை ஓடர் இல்லாமல் ஒருதரையும் பொறுப்பெடுக்கேலாது” எனச் சொன்னான்.

அதற்கு சின்னவன், “காந்தி அண்ணையின்ரை ஓடர் வந்துதான் ஆளைப் பிடிச்சனாங்கள்” என்று பதில் சொன்னான்.

பின்னர் அங்கிருந்தும் புறப்பட்டோம். அவர்களது உரையாடலிலிருந்து ஒரு விடயம் புரிந்தது. காந்தி என்ற முக்கியமான புலி உறுப்பினன் ஒருவனின் உத்தரவுப்படியே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.

கைதுசெய்யப்பட்டிருந்தாலும், என்னை எழுந்தமானத்துக்கு பொறுப்பெடுப்பதற்கு எந்தவொரு முகாம் பொறுப்பாளருக்கும் அனுமதி இல்லை என்று தெரிந்தது. அதற்கு யாரோ ஒரு ‘அம்மானின்’ அனுமதி வேண்டும்.

யார் அந்த அம்மான்? ஒருவேளை புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானாக இருக்குமோ?

இறுதியாக அவர்கள் என்னை சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகாமையிலிருந்த ஒரு பெரிய இரண்டு மாடி பங்களாவுக்கு கூட்டிச் சென்றார்கள். 

நேரம் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை இரண்டு மணிக்கு மேலாகியிருந்தது. எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனக்கு குடிக்கச் சிறிது தண்ணீர் தரும்படி அவர்களிடம் வேண்டினேன். ஒரு பெரிய கண்ணாடி கிளாசில் தண்ணீர் கொண்டு வந்து தந்தனர்.

அதன் பின்னர் எனக்கு ஒரு பாயும் தலையணையும் தந்து படுக்கும்படி கூறி, என்னை ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

செல்வதற்கு முன்னர், “நாங்கள் விறாந்தையில் தான் இருப்பம். ஏதாவது தேவையெண்டால் கதவைத் தட்டுங்கோ” என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

அவர்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில,; அவர்களது காலடி ஓசைகள் அடங்கிய பின்னர், அந்த அறையின் தெருவோர ஜன்னலின் சிறு நீக்கலுக்கூடாக வெளியே பார்த்தேன். என்னைக் கொண்டுவந்து விட்ட இருவரும், சைக்கிளில் எங்கோ புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. தாம் அங்கிருப்பதாக எனக்குப் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அத்துடன், அந்த இடம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது என்பதும் புரிந்தது. அனேகமாக வட மாகாணத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் எனது காலடி பட்டிருந்த எனக்கு, அதிலும் யாழ் நகரின் ஒவ்வொரு அங்குல மண்ணையும் மிதித்தும், மதித்தும் இருந்த எனக்கு, அந்த இடம் சுண்டிக்குளி என்பதைக் கண்டு பிடிக்க அதிக நேரமாகவில்லை.

அன்றைய அலைச்சலின் களைப்புக் காரணமாக, எனது நீணடகால ஆஸ்த்துமா நோய் தனது இழுப்பு அறிகுறியைக் காட்ட ஆரம்பித்தது. சிறிது நேரம் ஆறுவதற்காக படுக்கையில் சாய்ந்தேன். நித்திரை வர மறுத்தது.

யாழ்ப்பாண நகரின் கட்டாக்காலி நாய்களின் காதைக் கிழிக்கும் ஓலங்கள,; அங்குமிங்கும் கேட்டவண்ணம் இருந்தன. விடிகாலையின் உதயத்தை உணர்ந்த சில சேவல்களின் கூவல்களும் இடையிடையே கேட்டன.

உறக்கமில்லாமல் நான் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் காலடியோசைகள் கேட்டன. எங்கோ சென்றுவிட்டு வந்த சின்னவனும் மற்றவனும், நான் தங்க வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்து, “ஐயா எழும்புங்கோ போவம்” எனக் கூறினர்.

அவர்களிடம் ‘எங்கே? ஏதுக்கு?’ என்று கேட்க முடியாதாகையால், மௌனமாகப் புறப்பட்டேன்.

என்னை வெளியே கூட்டிவந்த அவர்கள், தமது சைக்கிள் ஒன்றில் என்னை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். இப்பொழுது அவர்கள் எனது கண்களை கறுப்புத் துணிகளால் கட்டவில்லை.

அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், யாழ் நகருக்குச் செல்லாமல், மடத்தடி வீதியால் சென்று, ஸ்ரான்லி வீதியால் திரும்பி, ஆரியகுளம் சந்தியை அடைந்து, பருத்தித்துறை வீதியில் பயணிக்க ஆரம்பித்தனர்.

பின்னர் நல்லூர் கந்தசாமி கோவில் பின் வீதியால் பயணித்து, முடமாவடிச் சந்தியைத் தாண்டி, இராச வீதியில் செல்ல ஆரம்பித்தனர். நேரம் அதிகாலை 3 மணியைத் தாண்டியிருந்ததால், வீதிகள் யாருடைய நடமாட்டமுமின்றி வெறிக்சோடிக் கிடந்தன.

வீதியில் படுத்திருந்த சில நாய்கள் மட்டும், எம் மூவரையும் பார்த்து எழுந்து நின்று குலைத்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டன. இந்த மார்கழி மாத குளிருக்கு அவைக்கு ஒரு சாம்பல் மேடு கிடைத்திருந்தால், வெதுவெதுப்பாகவும், சொர்க்கமாகவும் இருந்திருக்கும். நகரில் ஏது சாம்பல் மேடு? இப்போதைக்கு தார் வீதிதான் அவைக்குச் சொர்க்கம் போலும்!

அந்த வீதியில் செல்லும் போது, கல்வியன்காட்டுக்குச் செல்லும் வீதி குறுக்கிடும் இடத்தில் இராமசாமி பரியாரியாரின் வீடு உள்ளது. இந்தச் சந்தியைக் கடக்கும் போதெல்லாம், எனக்கு ஒரு விடயம் எப்பொழுதும் ஞாபகத்துக்கு வருவதுண்டு. 

புலிகள் ரெலோ இயக்கத்தின் மீது தடை விதித்து, அவர்களை கலைத்துக் கலைத்துச் சுட்டபொழுது, இந்தச் சந்தியில் அவர்கள் இருபகுதியினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையை எம்மில் சிலர் நேரடியாகவே பார்த்த அனுபவம் உண்டு.

அன்று புலிகளின் கொலைத் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சில ரேலோ உறுப்பினர்களை, மனிதாபிமான அடிப்படையில் நாம் அன்று எமது சைக்கிள்களில் ஏற்றிக் கொண்டு கல்வியன்காடு புதுச் செம்மணி வீதி வழியால் கொண்டு சென்று, திடல் என்ற இடத்திலிருந்த அவர்களது பாதுகாப்பான இடத்தில் விட்டோம். அவர்கள் ‘புலி வேட்டை’யிலிருந்து தப்பினர்ர்களா இல்லையா என்பதை இன்றுவரை யானறியேன்.

இராமசாமி பரியாரியார் வீட்டுச் சந்தியை அடைவதற்கு சற்று முன்னதாக, இடது புறம் ஒரு தோட்டவெளி உண்டு. அந்த நேரத்தில் திடீரென எனக்கு விபரீதமான ஒரு எண்ணம் தோன்றியது. என்னை ஏற்றிச் சென்றவர்கள், என்னைப் பற்றிய முன்னெச்சரிக்கைப் பயம் ஏதுமின்றி, களைப்பு, நித்திரையின்மை என்பன காரணமாக மிகவும் சோர்ந்த நிலையில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தூங்கி வழிந்துகொண்டு வந்து கொண்டிருந்தனர். சின்னவன் நடுவில் வர என்னை ஏற்றியிருந்தவன், வீதியின் அருகால் தோட்டக்கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தான்.

இந்த அகால வேளையில் இவர்களைத் தள்ளி விழுத்திவிட்டு, தோட்டத்துக்குள்ளால் பாய்ந்து ஓடி விடுவோமா என்ற யோசனை எனது மூளையில் பொறி தட்டியது. ஓடுவதானால் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் அதைத் தீர்மானித்துவிட வேண்டும். அவர்களுக்கு எனக்குத் தெரிந்த அளவுக்கு அந்த இடம் பரிச்சயமானதல்ல. ஆனால் ஓடுவது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது.

முதலாவது விடயம், சின்னவன் போன்ற பொறுப்பான பதவி வகிப்பவன், நிச்யமாக கைத்துப்பாக்கி இன்றிப் புறப்பட்டிருக்கமாட்டான். எனவே உடனடியாகவே என்னை அவன் சுடுவதற்கு வாய்ப்புள்ளது.

இரண்டாவது, அதிலிருந்து நான் தப்பி ஓடினாலும், தோட்டவெளி தாண்டி ஊர் மனைக்குள் நான் ஓடும்போது, நாய்கள் குரைத்து ஊர் மக்களை எழுப்பிவிடும். அவர்களே என்னைப் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்துவிடவும் கூடும்.

சில வேளைகளில் நாய்களே என்னைப் பிய்த்துப் பிடுங்கி பதம் பார்த்துவிடவும் கூடும். அப்படித்தான் இவற்றிலிருந்து நான் தப்பிவிட்டாலும், அவர்களது சூடை வலை போன்ற நெருக்கமான பாதுகாப்பு வலைப் பின்னலிலிருந்து எத்தனை நாளைக்கு மறைந்து வாழ முடியும்? நான் சரணடையும் வரை எனது மனைவியையும் பிள்ளையையும் நிச்சயமாக பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொள்வார்கள். எனவே எனது எண்ணத்தைக் கைவிட்டேன்.

அவர்கள் இராமசாமி பரியாரியார் வீட்டுச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பி, திருநெல்வேலி சந்தியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். சந்தியை அடைந்ததும் சைக்கிளை நிறுத்தி என்னை இறங்கும்படி பணித்தனர்.

நான் நீண்டகாலமாக புத்தகக்கடை வைத்திருந்த, யாழ் பல்கலைககழக அயலிலிருந்த, நான் இரவும் பகலும் தினசரி உலவிய அந்த திருநெல்வேலி மண்ணில் மிதித்து, அந்த இடத்தைப் பார்த்ததும், எனது மனதில் உணர்ச்சிகள் பிரவாகித்து, மனம் கலங்கியது.

எங்கள் மூவரையும் அந்த அகால வேளையில் கண்ட, அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொணடிருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் எமக்கருகில் வந்து விபரமறிய முயற்சித்தார்.

அவரை அங்கிருந்து விரட்டும் நோக்குடன், சின்னவன் தனது இடுப்பில் சொருகியிருந்த பிஸ்டலை வெளியே எடுத்து, அதை சரி பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு, அந்த பாதுகாப்பு ஊழியரை அப்பொழுதுதான் கண்டது போல, “அண்ணைக்கு என்ன வேணும்?” எனக் கேட்டான்.

அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பாதுகாப்பு ஊழியர், “இல்லை சும்மா பார்த்தனான்” என்று சொல்லிக் கொண்டே வெகு வேகமாக அங்கிருந்து நழுவிவிட்டார்.

அதன் பின்னர் அந்த ‘சித்திர புத்திரர்கள்’ மீண்டும் எனது கண்களை கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, என்னை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். இப்பொழுது நான் அவர்கள் எத்திசையில் செல்கிறார்கள் என்பதை, வெகு கவனமாக அவதானிக்கத் தொடங்கினேன்.

முதலில் சைக்கிள் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பியது. எனவே காங்கேசன்துறை வீதியிலிருந்த கொக்குவில் நோக்கிச் செல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து சென்ற சைக்கிள் நான் எதிர்பார்த்தபடியே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைத் தாண்டி, புகையிரதப் பாதையைக் கடந்தது.

மருத்துவ பீடத்தில் உடற் கூற்றியல் பேராசிரியையாக பணிபுரிந்த ரரஜினி திராணகமவை, இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில்,  புலிகள் பட்டப்பகலில் வீதியில் வைத்துத் துடிக்கப் பதைக்க சுட்டுப் படுகொலை செய்த அந்த இடத்தைக் கடந்த போது, எனது மனது மிகவும் சோகமாக மாறியது. 

அந்த மருத்துவ பீடத்துக்கு அருகாமையிலேயே வசித்து வந்த ராஜினியின் வீட்டுக்கு, நான் பல தடவைகள் சென்று உரையாடியிருக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தின் கணிதபீட விரிவுரையாளரும், எனது நீண்ட நாளைய நண்பருமான கலாநிதி கே.சிறீதரன,; ராஜினியை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். 

பல போலித் தமிழ்ப் புத்திஜீவிகள் போலல்லாது, தமிழ் சமூகத்துக்கு உண்மை விசுவாசத்துடன் ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக, தனது உயிரையே துச்சமாக மதித்து வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் ராஜினி. லண்டனில் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதில் வேறு எவரும் ஆற்றாத பங்களிப்பை வழங்கிய ராஜினி, புலிகள் தவறான பாதையில் செல்கிறார்கள் எனக் கண்டதும் தனது விமர்சனங்களைத் துணிச்சலுடன் முன்வைத்தார். அதற்கு அவருக்கு புலிகள் வழங்கிய பரிசுதான் இந்த மரண தண்டனை!

ராஜினி, கலாநிதி சிறீதரன், டாக்டர் தயா சோமசுந்தரம், கலாநிதி ராஜ்மோகன் ஆகிய நால்வரும் இணைந்து எழுதிய ‘முறிந்த பனை’ என்ற நூல், இலங்கை - இந்திய இராணுவங்களும், புலிகளும் செய்த பல மனித உரிமை விரோதச் செயல்களை அம்பலப்படுத்தியதால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டால், அந்தப் பழி இந்திய அமைதிப்படை மீதும், அவர்களுடன் அந்த நேரத்தில் சேர்ந்து இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் மீதும் விழும் என்று திட்டம் போட்டே, புலிகள் கனகச்சிதமாக அந்தக் கொலையைச் செய்திருந்தனர்.

சிறிது காலம் அவர்களது தந்திரம் வேலை செய்ததாயினும், மிக விரைவிலேயே அவரது கொலையின் சூத்திரதாரிகள் புலிகள்தான் என்பது அம்பலத்துக்கு வந்துவிட்டது.

ராஜினியின் சிந்தனையிலிருந்து நான் மீள்வதற்கு முன்னரே, கொக்குவில் சந்தியை நாம் அடைந்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன். இப்பொழுது சைக்கிள் சந்தியில் வலது பக்கம் திரும்பி வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதாவது கே.கே.எஸ். வீதியில் சுன்னாகம் பக்கமாகச் செல்லத் தொடங்கினோம். ஒரு ஐந்து நிமிடம் வரையில் ஓடிய பின்னர், சைக்கிள்கள் மேற்கு நோக்கித் திரும்பின.

எனக்கு ஒன்று புரிந்தது. அதாவது சைக்கிள்கள் குளப்பிட்டி சந்தியை அடைந்து, அங்கிருந்து ஆனைக்கோட்டை நோக்கிப் பயணிக்கின்றன. சுமார் 20 நிமிடங்கள் ஓடிய பின்னர், வலது பக்கமாக ஒரு கிரவலும், மணலும் சேர்ந்த ஒழுங்கையில் திரும்பி, சிறிது தூரம் சென்று ஒரு கேற்றைத் திறந்து ஒரு வீட்டின் முன்னால் நின்றன.

இப்பொழுது எனது கண்களின் மேல் கட்டியிருந்த கறுப்புத் துணி அவிழ்க்கப்பட்டுவிட்டது. இயல்பு நிலைக்குப் பார்வையைக் கொண்டுவர சிறிது நேரம் பிடித்தது.

நிர்மலமான வானத்தில் நிலவு பால் பொழிந்து கொண்டிருந்தது. மார்கழி மாதத்து சீதளக்காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது.

அந்த வீடு சுமாரான ஒரு பெரிய வீடு போலத் தோன்றியது. முன்னர் என்னை அழைத்துச் சென்ற முகாம்களைவிட இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தது போலத் தோன்றியது. அருகில் சில பெரிய மரங்கள் நின்றன.

அங்குமிங்குமாக சில சிறிய குடிசைகள் போன்றவை நிலவொளியில் தென்பட்டன. என்னை விறாந்தையில் இருந்த வாங்கு ஒன்றில் இருக்கச் சொன்ன பின்னர், ஒருவன் ஒரு பெரிய கொப்பியுடன் வந்து, எனது பெயர் முகவரி என்பனவற்றைக் குறித்துக் கொண்டான். 

பின்னர் அவன் என்னை நோக்கி, “ என்ன குற்றச்சாட்டிலை உங்களைப் பிடிச்சது?” என வினவினான். எனக்கு அவனது கேள்வி அதிசயமாக இருந்தது. ஏனெனில் இதுவரை நேரமும் என்னை அவர்கள் என்ன காரணத்துக்காக கைதுசெய்தார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

நான் “தெரியாது” எனப் பதிலளித்தேன்.

“ஐயாவுக்கு இப்ப தெரியாது. நாங்கள் கேட்கிற மாதிரிக் கேட்கேட்கை எல்லாம் தன்ரைபாட்டிலை வரும்” என்று அங்கிருந்த ஒருவன் கிண்டலாகவும், கோபமாகவும் கூறினான்.

பின்னர் ஒரு பாயைக் கொண்டுவந்து உள் விறாந்தையில் போட்டு, அதில் என்னைப் படுக்கும்படி ஒருவன் கூறினான். நான் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கேட்டேன்.

அதன்பின்னர் ஒருவன் என்னை வீட்டின் பின்புறம் உள்ள வேலிக்கு அருகாமையில் அழைத்துச் சென்றான். அவனுடன் இன்னொருவனும் கூட வந்தான். இருவர் கையிலும் ஏ.கே.47 துப்பாக்கிகள் இருந்தன. அவர்கள் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, “இஞ்சை எல்லா இடமும் எங்கடை ஆக்கள் நிக்கினம். ஓட நினைச்சால் வெடிதான். பிறகு கவலைப்படக்கூடாது” எனக் கூறினர். 

நான் எனது உபாதையைத் தீர்த்துவிட்டு திரும்பவும் அவர்களுடன் வந்தேன். பாயில் படுத்தும் நித்திரை வரவில்லை. மனதில் பல பல சிந்தனைகள் அலைபாய்ந்த வண்ணம் இருந்தன. உதயத்தின் அறிகுறிகள் மெல்ல மெல்லக் கேட்கத் தொடங்கின.

திடீரென இரும்பு சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ஒலிகளும், கொறட்டை சிலவும் கேட்டன. கொஞ்சம் தள்ளி பெரிய கைவிளக்கொன்று, காற்றினால் அழைக்கழிக்கப்பட்ட தனது சுடரைப் பாதுகாக்கப் படாதபாடு பட்டவாறு எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கிய ஒளியில் ஒரே மாதிரியான சிவப்பு நிறச் சாரங்களை அணிந்த பல மனிதர்கள், கிழங்கு அடுக்கியது போல, நிரையாகப் படுத்திருப்பது தெரிந்தது.

நாளை நானும் அவர்களில் ஒருவனாகப் படுத்திருப்பேன் போலும் எனத் தோன்றியது

தொடரும்……

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment