Follow by Email

Tuesday, 7 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -4


புலிகளின் இன்னொரு முகம்-1
புலிகளின் இன்னொரு முகம்-2
புலிகளின் இன்னொரு முகம்-3

என்னை அந்த அறைக்குள் தள்ளிய புலி உறுப்பினன், உள்ளே இருந்தவர்களை நோக்கி, “டேய் வாற ஆளிட்டை ஏதாவது அப்புக்காத்து வேலை பாத்தியளோ, முதுகு முறியும்” என எச்சரித்துவிட்டு, கதவைக் வேகமாகப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.

அந்தச் சின்னஞ்சிறிய அறைக்குள் ஆறு ‘மனிதர்கள்’ இருந்தனர். அவர்களை மனிதர்கள் என்று அழைப்பதா அல்லது வேறு ஏதாவது பெயர் சொல்லி அழைப்பதா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

அவ்வளது தூரம் அவர்களது தோற்றம் இருந்தது. புதிய விருந்தாளியான என்னை, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்துடனும் ஒருவகை நேச பாவத்துடனும் நோக்கினர்.

என்னை வரவேற்று உட்கார வைக்கும் நோக்குடன், நெருக்கமான தமது இருப்பிடங்களில் சிறிது இடம் ஏற்படுத்தி நகர்ந்து இருந்துகொண்டனர். ஆனால் எனக்கு உடனடியாக இருக்கத் தோன்றவில்லை. நின்ற நிலையிலேயே அவர்களையும் அந்த அறையையும் நோட்டமிட்டேன்.

அவர்கள் எல்லோருடைய தலைமயிரும் சொல்லி வைத்ததுபோல, போல ஒரேமாதிரி நீண்டு வளர்ந்திருந்தது. சிலருடைய முடி புளியங்காய் கணக்கில் ஒன்றுடன் ஒன்று பின்னித் தொங்கியது.

பல மாதங்களாகச் சவரத்தைக் கண்டிராத முகத்தில,; ஒரு அடி நீளத்துக்கு தாடி வளர்ந்திருந்தது.

இடுப்பில் அழுக்கடைந்த சாரமோ அல்லது வேஸ்டியும், உடலில் அதேபோல அழுக்கடைந்த மேல் சட்டையும் காணப்பட்டன. அனைவரது கண்களும் குழிவிழுந்து, ஒளியிழந்து, நம்பிக்கை வரட்சியுடன் காணப்பட்டன.

அவர்களில் உயரமான ஒருவர் என்னைப் பார்த்து, “இதிலை இருங்கோ” என தனக்கருகில் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். அருகில் சென்ற பின்புதான் அவர்கள் அனைவரது உடலிலிருந்தும் வீசிய துர்நாற்றத்தை உணர முடிந்தது.

இவ்வளவு காலமும் வெளிக்காற்றை சுவாசித்துவிட்டுச் சென்ற எனக்கு, அது அருவருப்பாகவும், குமட்டலை உண்டுபண்ணக் கூடியதாகவும் இருந்தது. அதேநேரத்தில், அவர்களை இந்த நரக வாழ்க்கையில் தள்ளிய புலிகளின் மேல் தீராத வெறுப்பும் ஆத்திரமும் ஏற்பட்டது.

நான் அமர்ந்த பின்னர் என்னை உட்காரச் சொன்னவர் என்னைப் பார்த்து, “உங்களை என்ன கேசிலை பிடிச்சவங்கள்?” என மெதுவாக வினவினார்.

அவருடைய கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன் என, அங்கிருந்த எல்லோரும் ஆவலுடன் அவதானித்தனர்.

அங்கிருந்த சிறிய ஜன்னலுக்கருகில் நின்றுகொண்டு வெளி உலகத்தையும், தூய்மையான காற்றையும் ரசித்துக் கொண்டிருந்த ஒருவனும் கூட, என் பதிலை அறியும் ஆவலுடன் அருகில் வந்து நின்றான்.அந்த ஜன்னலுக்குள்ளால் பெரும் படையெடுப்புப் போல உள்ளே நுழைந்து கொண்டிருந்த நுளம்புக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்னொருவன் எழுந்து சென்று ஜன்னலை இழுத்து மூடினான்.

“என்ன பிரச்சனை எண்டு தெரியாது. ஏதோ விசாரிக்க வேணுமெண்டு கூட்டி வந்தவை” என நான் பதில் சொன்னேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வைகள், நான் உண்மையை மறைக்கிறேன் என்பதை அர்த்தப்படுத்தியதா அல்லது ‘இதுவும் எங்கடை கேஸ் மாதிரித்தான்’ என அவர்களுக்கு அசுவாரசியத்தை ஏற்படுத்தியதா எனத் தெரியவில்லை. எதுவானாலும், எனது பதில் அவர்களுக்கு எதுவித உற்சாகத்தையும் அளிக்கவில்லை என்று தெரிந்தது.

“நீங்கள் என்ன வேலை செய்யிறியள்?” என வேறொருவர் என்னிடம் கேட்டார்.

சில வேளைகளில் நான் செய்யும் வேலையை வைத்து ஏதாவது துப்புத் துலக்கலாம் என அவர் எண்ணினாரோ என்னவோ?

“நான் புத்தகக்கடை வைச்சிருக்கிறன்” என்று பதிலளித்தேன்.

“எது பூபாலசிங்கம் கடையோ?” என இன்னொருவர் அவசரமாக வினவினார். அவருக்கு பூபாலசிங்கம் புத்தகக் கடையைத் தெரிந்திருந்தது. ஆனால் அக்கடையின் ஒரு வாடிக்கையாளராக இருப்பார் போலத் தோன்றவில்லை.

“இல்லை, வேறை கடை” எனப் பதிலளித்தேன்.

“நீங்கள் வேறை இயக்கங்கள் எதிலையும் இருந்தனிங்களோ?” என மீண்டும்  ஒரு கேள்வி என்னை நோக்கி வந்தது.

இந்தக் கேள்வியைக் கேட்டவரின் தொனியில், ‘ஏன் சுற்றிவளைப்பான், நேரேயே விசயத்துக்குப் போவோம்’ என்ற ஒரு நெற்றியடித் தன்மை வெளிப்பட்டது.

“இல்லை” என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்தேன்.

அவர்கள் அதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. புலிகள் என்னை விசாரிப்பதற்கு முதல், அவர்கள் புலி உறுப்பினனின் எச்சரிக்கையையும் மீறி என்னிடம் மேற்கொண்ட ‘பூர்வாங்க’ விசாரணை, அத்துடன் முடிந்தது போல் தோன்றியது.

அதன் பின்னர் நான் அந்த அறையைச் சுற்றிலும்  நோட்டமிட்டேன். ஒரு மூலையில் அலுமினியச் சட்டி ஒன்று இருந்தது. அதில் அரைவாசிக்கு மேல் சிறுநீர் நிறைந்திருந்தது.

அவசர உபாதை வந்தால், அதற்குள்தான் கழிக்க வேண்டும் என்பது புரிந்தது. அறையின் சுவர் முழுவதும் ஒரே இரத்தக் கறைகளாக இருந்தது.

நான் அதை உற்றுப் பார்த்ததை அவதானித்த ஒருவர், “பயப்பிடதையுங்கோ, அது வேறையொண்டுமில்லை. மூட்டைப்பூச்சி நசுக்கின அடையாளம். இஞ்சை மூட்டைப்பூச்சித் தொல்லையெண்டால் சொல்லேலாது” என்று சற்று நகைச்சுவை கலந்து விளக்கம் தந்தார்.

இதற்கிடையில் அவர்களில் இருவர், ஒரு அங்குல நீளம்  வரையிலான ஒரு குறைச்சுருட்டை, அங்கிருந்த மண்ணெண்ணெய் கைவிளக்கில் பற்றவைக்க முயன்று கொண்டிருந்தனர்.

அதைக் கண்ணுற்ற இன்னொருவர், “டேய் உங்கடை வேலையாலை நாங்கள் எல்லாரும்தான் அடி வேண்ட வேண்டி வரும்” என எச்சரித்தார். ஆனால் அவர்களோ அவருடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அதன் பின்னர் நான் என்னை முதலில் உட்கார அழைத்தவரிடம், “உங்களை என்ன பிரச்சனைக்காகப் பிடிச்சவையள்?” என சற்றுத் தயக்கத்துடன் வினவினேன்.

“உங்களை மாதிரித்தான். ஏதோ விசாரணை எண்டு கொண்டுவந்தாங்கள். ஆனா இண்டுவரையும் ஒரு விசாரணையும் நடக்கல்லை” என்று கூறிப் பெருமூச்சு விட்டார்.

“எவ்வளவு காலமாக இஞ்சை இருக்கிறியள்?” என நான் மீண்டும் வினவினேன்.

“ஏழு மாதங்கள்(!);” என்று சொன்ன அவர், “இஞ்சை இருக்கிற ஆட்களிலை நான் தான் குறைஞ்ச காலம். மற்ற எல்லாரும் ஒரு வருசத்துக்கு மேலை:” எனத் தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் எனக்கு முதற்தடவையாக மிகுந்த பயம் ஏற்பட்டது என்னையும் அவர்கள் விசாரணை எதுவுமில்லாமல், இந்த சிறிய நாற்றமெடுக்கும் அறைக்குள் வருடக்கணக்காக அடைத்து வைத்திருக்கப் போகிறார்களோ என்ற ஏக்கம் என்னை வாட்டியது.

அதை நினைக்க, என் நெஞ்சுக்குள் பெரியதொரு பாறாங்கல்லை, யாரோ ஒருவர் திடீரென உருட்டிவிட்டது என்ற அதிர்ச்சி உணர்வு ஏற்பட்டது. துக்கம் தொண்டையை அடைத்தது.

இங்கு அடைத்து வைத்திருபவர்களை, புலிகள் ஏன் பிடித்து வந்தார்கள் என்ற காரணத்தை, இன்றுவரை அவர்களுக்குச் சொல்லவில்லையென்றால், புலிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்போகும் ‘தமிழீழ’ அரசின் நீதி நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

முதற்தடவையாக, எனது தற்போதைய நிலையை, நானே இரண்டாம் ஆளாக எட்டிநின்று அவதானிப்பது போல எனக்குத் தோன்றியது. எனது சிந்தனைகள் ஒரு நிலைப்படாது தாறுமாறாக எகிறிப் பாய்ந்தன.

நான் யார்?

என்னை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள்?

நான் செய்த குற்றம் என்ன?

ஒரு விடுதலை இயக்கம் இப்படி மக்களை காரணமின்றிக் கைதுசெய்யும் சம்பவங்கள் ஏனைய நாடுகளிலும் நடந்துள்ளனவா?

புல நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் சம்பந்தமாக நான் படித்த ஏராளமான நூல்களில், அவையெல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தனவா?

என்னுடைய எதிர்காலம் என்னவாகப் போகின்றது?

நிர்க்கதிக்குள்ளாகப் போகும் எனது மனைவியும் குழந்தையும், அனாதரவாக மற்றவர்களிடம் கையேந்தி நிற்கப்போகிறார்களா?

இப்படிப் பல கேள்விகள் என்னுடைய மனதில் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டே இருந்தன. கைதுசெய்யப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களுக்குள் எனது சிந்தனை இப்படிக் குழம்புகிறதென்றால், இங்கு வருடக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தேன்.

மனம் சோர்ந்த நிலையில் சுவரில் சாய்ந்தேன். சிந்தனை மட்டும் சாய்ந்துவிடாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

திடீரென எனது சிந்தனைச் சூழலில் இருந்து என்னை இழுத்தெடுப்பது போல, பல குரல்கள் ஒன்று சேர்ந்து பாடுவது போன்ற ஒரு ஒலி எழுந்தது. நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அவதானித்தேன்.

இந்த ஒலி எங்கிருந்து வருகிறது? இங்கு இன்னும் பல மனிதர்கள் வேறு வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா? போகப்போக அந்த ஒலி நமது மொழியிலானது அல்ல என்பது புரிந்தது.

அப்படியானால்ஸ இப்பொழுது அது தெளிவாகக் கேட்டது. என்ன அது? தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளில் ‘பிரித்’ ஓதும் போது எழும், சிங்கள மொழியிலான ஒலி போலல்லவா அது இருக்கின்றது!

என்னுடைய முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அவதானித்த அந்த நெட்டை மனிதர், “என்ன சத்தம் எண்டு பாக்கிறியளோ?” என வினவினார்.

நான் ‘ஓம்’ என்பது போலத் தலையாட்டினேன்.

“அது இவங்கள் பிடிச்சு வைச்சிருக்கிற சிங்களப் பொலிஸ்காரங்கள் கும்பிடுற சத்தம். ஒவ்வொரு நாள் பின்னேரமும் அவங்கள் இப்படி ஓதுறது வழக்கம்” என  விளக்கமளித்தார்.

இந்த புலி எம காதகர்களின் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கும்படி, போதி மாதவனிடம் அவர்கள் நெஞ்சுருகிக் கெஞ்சுகிறார்கள் என்பது புரிந்தது.

காலத்துக்குக் காலம் புலிகள் தம்மிடம் வகையாக அகப்படும் சிங்களப் பொலிசாரைப் பிடிப்பதும், பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது அவர்களது உறவினர்கள் தவிப்பதும், தமிழ் பொதுமக்களுக்குக் கூட அவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியாமல் இருப்பதும், ஏற்கெனவே நான் அறிந்த சங்கதிகள்தான்.

ஆனால் இப்பொழுதுதான் அது பற்றிய ஒரு நேரடி அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது. (இது மற்றவர்களுக்கு கிடைக்காத, எனக்கு மட்டும் கிடைத்த ஒரு அபூர்வ சந்தர்ப்பம் அல்லவா!?)

ஆனால் புலிகள் பிடித்த பொலிஸ்காரர்கள் அனைவரும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது அவர்களில் சிலர் கொல்லப்பட்டுவிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. (ஆனால் அவர்கள் அனைவரும் ஒருவர்கூட பாக்கியில்லாமல், புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என, பின்னர் நான் அறிந்துகொண்டேன்)

இப்பொழுது என்ன நேரம் இருக்கும் என அறிய விரும்பினேன். ஆனால் அதற்கான வழியேதும் அங்கு இல்லை. அவர்கள் என்னைப் பிடித்த நேரத்தை வைத்துப் பார்க்கையில், குத்துமதிப்பாக இப்பொழுது இரவு எட்டு அல்லது எட்டரை மணி இருக்கும் எனத் தோன்றியது.

நேரம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்கையில், திடீரென எமது அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

கதவைத் திறந்தவன் முதலில் என்னைக் கொண்டு வந்து விட்ட புலி உறுப்பினன். அவனது கையில் ஒரு அலுமினியச் சட்டி இருந்தது.

உள்ளே இருந்தவர்களைப் பார்த்து, “கோப்பையை எடுங்கோடா” என உத்தரவிடும் பாணியில் அவன் உரத்துக் கூறினான்.

அங்கு ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, மிகவும் நெளிந்து ‘நோய்வாய்ப்பட்டு’ அழுக்குடன் காணப்பட்ட, சில அலுமினியத் தட்டுகளை அங்கிருந்தவர்கள் எடுத்து நீட்டினர்.

அவன் கொண்டு வந்திருந்த சட்டியிலிருந்த கொத்து ரொட்டியை, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோப்பைகளில் எடுத்துப் போட்டான். பின்னர் அவாகளை நோக்கி, “புதிசா வந்த ஆளையும் சேத்து சாப்பிடுங்கோ” எனச் சொல்லிவிட்டு கதவை மூட ஆயத்தமானான்.

அதற்கிடையில் அங்கிருந்தவர்களில் ஒருவர், “அண்ணை குடிதண்ணீர் கொஞ்சம் வேணும்” என கெஞ்சும் பாவனையில் கேட்டார்.

தண்ணீர் கேட்டவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். வந்திருந்த புலி உறுப்பினனுக்கு 18 – 20 வயதிருக்கலாம். இன்னமும் அவனது மீசையில் சரியாகக் கருமை படரவில்லை.

இருக்கும் இடம், ஸ்தானம் காரணமாக, அந்த ஐம்பது வயதுக்காரருக்கு அவன் ‘அண்ணை’யாகியிருந்தான். இந்த அண்ணை விளையாட்டு, உள்ளுக்கை மட்டுமின்றி, வெளியிலும் உலா வருவதை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.

“என்னடா நேத்துத் தந்த தண்ணி எல்லாத்தையும் குடிச்சு முடிச்சிட்டியளோடா? ஒட்டகப் பிறவியள்” என அவன் சொல்லிவிட்டு, கதவை அடிச்சுச்சாத்திப் பூட்டிக்கொண்டு போய்விட்டான். தண்ணீh கேட்டவர் ஏமாற்றத்துடன் வந்து இருந்துகொண்டார்.

சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்கப்பட்டது. முதலில் வந்தவனே மீண்டும் ஒரு வாளி தண்ணீருடன் நின்றான். வாளி கிணற்றடியில் உடுப்புத் தோய்ப்பதற்கு அல்லது மலசல கூடத்திற்குப் பயன்படுத்தப்படும் தோற்றத்தைக் காட்டியது.

உள்ளேயிருந்தவர்களில் ஒருவன் அங்கிருந்த மண் குடத்தை எடுத்து நீட்ட, கொண்டு வந்த தண்ணீரால் அதை நிரப்பிவிட்டு மீண்டும் கதவைப் பூட்டிக்கொண்டு அவன் போய்விட்டான்.

அவன் இந்தச் சீவன்களுக்கு மனமிரங்கி உடனும் தண்ணீர் கொண்டு வந்ததைப் பார்த்தபோது, ‘கல்லுக்குள்ளும் கூட ஈரம் இருக்கும்’ என்று இதைத்தான் சொல்வார்களோ? ஏன எண்ணினேன். 

அவன் போனதும், அங்கிருந்த அறுவரும் அவன் நான்கு தட்டுகளில் போட்ட கொத்து ரொட்டியை; சாப்பிடுவதற்குத் தயாரானார்கள். என்னையும் சாப்பிட வருமாறு அழைத்தனர். நான் எனக்கு பசிக்கவில்லை எனச் சொல்லி, அவர்களையே என் பங்கையும் சாப்பிடச் சொன்னேன்.

நான் இருந்த மன நிலையில், சாப்பாட்டைப் பற்றியே நான் சிந்திக்கவில்லை. ‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்’ என தமிழில் ஒரு வழக்குண்டு. அது இப்பொழுது என் விடயத்தில், ‘பதற்றம் வந்தால் பசியும் பறந்திடும்’ என மாறிவிட்டிருந்தது.

சாதாரண காலங்களில் என்றால,; கொத்துரொட்டி என்றதும், எனது பசி இன்னும் கூடுதலாக்கியிருக்கக்கூடும்.

ஏனெனில் அதன் சுவை. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, அந்தக்காலங்களில் இந்தக் கொத்துரொட்டி ஒரு விசேட உணவு. செலவானதும் கூட. ஆரம்பகாலங்களில் இதன் சுவையை முழுமையாக அனுபவிப்பதற்குப் பல இளைஞர்கள், யாழ் முஸ்லீம் வட்டாரத்திலிருந்த சாப்பாட்டுக் கடைகளுக்குச் செல்வது வழமை.

ஆனால் இயக்கங்கள் உருவான பிறகு, அவர்களது தேவை கருதி, மூலைக்கு மூலை இந்தக் கொத்துரொட்டிக் கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஏனெனில், அநேகமாக எல்லா இயக்கங்களினதும் ‘தேசிய உணவாக’ இருந்தது இந்தக்  கொத்துரொட்டிதான்.

உதாரணத்துக்கு, நெல்லியடியில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடை நடாத்தி வந்த எமது தோழர் ஒருவர், குறிப்பிட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் சாப்பிடுவதற்காக, அவர்களின் வற்புறுத்தலின் பேரில், தனது கடையை ஒரு கொத்துரொட்டிக் கடையாக மாற்றவேண்டி ஏற்பட்ட விடயத்தை நான் அறிவேன். 

கொத்துரொட்டி என்றால் அது உணவா அல்லது விளையாட்டுப் பொம்மையா என மக்கள் விழி பிதுங்கி நிற்கும், எனது இயக்கச்சி போன்ற மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் கூட, இயக்கங்களின் வருகையுடன் கொத்துரொட்டிக் கடையும் பிரசன்னமாகிவிட்டது என்றால் பாருங்களேன்!

எனவே எனது சக கைதிகள், ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் கசியுமாம் ஆங்கே’ என்பது போல, இயக்கப் ‘பொடியள்’ சாப்பிட்டு மீதமிச்சமாக வீசிய கொத்துரொட்டியை, ஆவலுடன் ஒரு கைபார்க்கப் புறப்பட்டதில் வியப்பதற்கு ஏதுமில்லை என்று எனக்குத் தோன்றியது. அதேநேரத்தில், பங்கிட்டுண்ணும் மானிடப் பாங்கில்,  என்னையும் அவர்கள் அழைத்தது, என் நெஞ்சைத் தொட்டது.

“யோசிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை தம்பி. ஏதோ வந்திட்டம். உயிரோடை திரும்பிப் போவமோ இல்லையோ எண்டு தெரியாது. இருக்கும்வரை சமாளிக்கத்தானே வேணும்.

நாங்கள் சாப்பிடாமல் இருக்கிறதாலை அவங்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. கொஞ்சமெண்டாலும் சாப்பிடுங்கோ” என, அவர்களில் வயதான ஒருவர் என்னை அன்புடன் வலியுறுத்தினார்.

ஆனால் அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று சாப்பிடும் நிலையில் நான் இருக்கவில்லை. அவர்கள் கூட, தமது முதல் நாள் சிறை வாழ்க்கையின் போது என்னைப்போல சாப்பிடாமல் இருந்திருக்கக்கூடும். இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் சகஜமாகிவிட்டது போல் தோன்றியது. 

என்னை புலிகள் கைதுசெய்ததை எண்ணி, எனது மனைவி மற்றும் உறவினர்கள் அன்று ‘செத்தவீடு’ கொண்டாடியிருப்பார்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும்.

பல நாட்களுக்கு எனது மனைவி அன்ன ஆகாரமின்றி பட்டினி கிடப்பாள் என்பதும் தெரியும். அதுவும் அன்றிரவு நான் சாப்பிட மறுத்ததிற்கு ஒரு காரணம். எனவே, அன்றிரவு சாப்பிடாமலே இருந்துவிட்டேன். 

அவர்கள் அந்தச் சாப்பாட்டை வழித்துத் துடைத்து உண்டதைக் கண்டபொழுது, மனதுக்குப் பெரும் துயரமாக இருந்தது. அந்தத் தட்டுகளைக் கழுவவேண்டிய தேவையில்லாத அளவுக்கு, அவர்கள் அதைச் சுத்தம் செய்திருந்தார்கள்.

உண்மையில் அவர்களுக்கு புலிகள் வழங்கிய அந்த உணவு கொஞ்சமும் போதாது.

அவர்கள் வெளியிலிருந்த போது கடினமான உழைப்பாளிகளாக இருந்திருப்பார்கள் என்பதையும், விரும்பியதை உண்டு களித்திருப்பார்கள் என்பதையும், அவர்களது உடல் வாகு இன்னமும் பறைசாற்றிக்கொண்டு இருந்தது. என்ன செய்வது, பற்றாக்குறையைப் போக்க, மீதி வயிற்றைத் தண்ணீரால் நிரப்பிக்கொண்டனர்.

அந்த கைதிகளுக்கு புலிகள் அளித்துள்ள வசதிகள் பற்றி அறிய முற்பட்டேன். காலையில் மட்டும் அவர்களது காலைக் கடன்களைக் கழிப்பதற்காக, ஐந்து நிமிட நேரம் இரு துப்பாக்கி ஏந்திய புலிகளின் பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சொன்னார்கள்.

கிழமைக்கு ஒரு தடவை, ஒரு வாளி தண்ணீரில் ‘குளிக்கும்’ சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மேல்மாடியில் கடுமையான கட்டுக்காவலுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களப் பொலிசார், எக்காரணம் கொண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவதில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக எனது புதிய கைதித்தோழர்கள் சொன்னார்கள். ஒன்று வெளியே கொண்டு சென்றால், நன்கு பயிற்சி பெற்ற அவர்கள் தப்பியோட முயற்சிக்கக்கூடும்.

இரண்டாவது, அவர்கள் வெளியே வந்தால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் அவர்களைப் பார்த்துவிடுவார்கள். எனவே அவற்றைத் தவிர்ப்பதற்காக, அவர்களுக்கு மலசல கூடம், குளியலறை எல்லாமே உள்ளேயே அமைக்கப்பட்டிருந்தன.

அங்குள்ள நிலைமைகள் பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை, தாங்கள் ஊகித்தவற்றை, ஒருவர் மாறி ஒருவர் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். இவையெல்லாம் எனக்குப் புது அனுபவங்களாக இருந்தன.

இந்த ‘விடுதலை வீரர்கள்’ நடாத்தும் சிறைமுகாம்களின் லட்சணத்தை, அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழ் பொதுமக்கள் கண்டால், நெஞ்சம் பதறித் துடிப்பார்களா அல்லது ‘விடுதலைப் போராட்டம் என்றால் அப்படித்தான் இருக்கும்’ என சப்பைக்கட்டு கட்டுவார்களா என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன்.

ஏனெனில் புலிகள் ரெலோ இயக்கத்தை அழித்த பொழுது, அதன் உறுப்பினர்களை துடிக்கப் பதைக்க சுட்டுக் கொன்ற போது, கொலைகாரப் புலிகளுக்கு குளிர்பானம் வழங்கி மகிழ்ந்தவர்களல்லவா எமது ‘வீர மறத் தமிழர்கள்’!

அந்த கைதித் தோழர்களுடன் கதைத்ததில் நேரம் போனது தெரியவில்லை. நான் அவர்களைத் தோழர்கள் என்று அழைப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.

வெளியே நாம் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினர்களையும்,  உழைப்பாளி மக்களையும், ஒடுக்கப்பட்ட (குறிப்பாக சாதி ஒடுக்குமுறை) ‘தோழர்’ என்றே விழித்துப் பேசுவதுண்டு.

அவர்களும் எம்மை உரிமையுடனும், வாஞ்சையுடனும் அவ்வாறே அழைப்பார்கள். எனக்கு இனி அந்தப் பாக்கியம் கிடைக்காது. இனிமேல் எனது உலகம் புலிகளின் சித்திரவதைச் சிறைக்கூடங்கள்தான். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பலவிதமான கைதிகள்தான், இனிமேல் எனது புதிய தோழர்கள்.

நேரம் நள்ளிரவு 12 மணியை அண்மித்திருக்கும் என ஊகித்தேன். எனது சக கைதித்தோழர்களில் சிலர், வெற்று சீமெந்துத் தரையில் தம்மை மறந்து கண்ணயரத் தொடங்கிவிட்டிருந்தனர்.

அடுத்து எனக்கு என்ன நடக்கப் போகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். கண்கள் தூக்கத்தைத் தழுவ மறுத்தன. திடீரென வெளியே சில காலடிச் சத்தங்களும், சிலர் கதைக்கும் குரல்களும் கேட்டன.

தொடர்ந்து எமது அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டனர்.

அங்கு பிரசன்னமாகியிருந்த, என்னை முதலில் அறையில் கொண்டு வந்து அடைத்தவன் என்னைப் பார்த்து, “ஐயா வெளியாலை வாங்கோ” எனக் கூறினான்.

நான் மீண்டும் அங்கு கொண்டு வந்து விடப்படுவேனா என்று தெரியாத சூழலில், சில மணி நேரங்களே பழகிய அந்தச் சிறைத் தோழர்களிடம் கண்களால் விடைபெற்றுக் கொண்டேன்.

அந்த வீட்டின் வாசல் முகப்புக்கு நான் மீண்டும் கூட்டி வரப்பட்ட போது, மாலையில் என்னைக் கைதுசெய்த புலனாய்வுப் பொறுப்பாளன் சின்னவன், இன்னொருவனுடன் ஏதோ கதைத்துக்கொண்டு நிற்பதைக்; கண்டேன்.


தொடரும்

No comments:

Post a Comment