Follow by Email

Sunday, 5 January 2014

இது தான் விக்கிலீக்ஸ் 3

இது தான் விக்கிலீக்ஸ் 1

இது தான் விக்கிலீக்ஸ் 2


அமெரிக்க ராணுவத்தின் பலமே வான்படை தான். தரை வழித் தாக்குதலில் பலத்த அடிவாங்கிய அனுபவம் அமெரிக்காவிற்கு வரலாற்றில் பல இடங்களில் சிறப்பாகக் கிடைக்கப் பெற்றதால் தான் இன்றும் உலகின் எந்தப் பகுதிக்கு உரண்டை இழுக்கப் போனாலும் தரை வழித் தாக்குதலில் மிகப் பலம் வாய்ந்த இங்கிலாந்தையும் வம்படியாக இழுத்துக் கொண்டு போவது தொடர்கிறது. 

இப்படி உலகின் பலம் வாய்ந்த வான்படையின் முக்கிய ஆட்டக்காரர் தான் அபெச்சி (apache) எனப்படும் கனரக ஆயுதங்கள் பொருத்தப் பட்ட உலங்கு ஊர்தி (helicopter). 

ஈராக்கில் களமிறக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வான்படையினர், அபெச்சி ஒன்றினில் நகர்வலம் செல்லும் பொழுது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒன்று குறித்த காணொளி வெளியீடு தான் ஜூலியனின் ஐஸ்லாந்து விஜயத்தின் முக்கிய நோக்கம். 

விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அனைத்து ஜூலியனால் ஹேக் செய்தே வெளியிடப்படுகின்றன,சி.ஐ.ஏவின் கையாள், விக்கி என்பதே ஒரு மோசடி போன்ற பல மாங்காய்களுக்கு இந்த ஒரு வெளியீடு மூலம் ஒரு சேர குறி வைத்திருந்தார் ஜூலியன். 

தன் நியூயார்க்கர் பத்திரிக்கை நண்பருடன் ஐஸ்லாந்தில் வந்திறங்கியதும் ஜூலியன் செய்த முதல் வேலை ‘நாங்கள் ஐஸ்லாந்து போலீஸ் மற்றும் சி.ஐ.ஏ வின் கூட்டுக் கண்காணிப்பில் இருக்கிறோம்” என்று டிவிட்டியது தான். 

ஜூலியன் ஏதோ விபரீதத்திற்குத் திட்டம் போடுவதை ஒருவாறாக அமெரிக்கா மோப்பம் பிடித்திருந்தாலும், இம்முறை பலியாடு யாரென்பதை அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமலே போனது ஜூலியனின் தொழிநுட்பத்திற்குக் கிடைத்த வெற்றி. 

ஐஸ்லாந்தின் ஆளரவம் அதிகமில்லா ஒரு வீடு “எரிமலை குறித்து எழுத வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்காக” என்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.

அடுத்த சிலமணி நேரத்தில் விக்கிலீக்ஸ் தளத்தின் ஐஸ்லாந்து கிளைக் கழகக் கண்மணிகள் புடை சூழ ஆறு மடிக்கணினிகள் வலையமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு போர்க் கட்டுப்பாடு அறை போல காட்சியளித்த அந்த வீட்டில், ஜூலியனின் தலைமையில் வேலை ஆரம்பித்தது. 

அறையில் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் உணவுப்பொருட்கள் நிரப்பபட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கிருந்த யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. 

எப்பொழுதாவது கேட்கப்படும் ஒரு சிலக் கேள்விகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலியன். அவர்கள் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது சுமார் 30 நிமிடம் ஓடக் கூடிய ஒரு காணொளிக் கோப்பு. 

அதன் உண்மைத் தன்மை முதலில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு, அதனை அனுப்பியவர் குறித்த பின்புலங்கள் விசாரித்த பின் திருப்தியளித்ததும், காணொளியின் தேவையில்லாத பகுதிகள் வெட்டப்பட்டன. 

வெகுஜன ஊடகங்களுக்கான செய்தியறிக்கைத் தயார் செய்யப்பட்டது. அனைத்தையும் ஒரு முறை ஆழ்ந்து கவனித்த ஜூலியன் சிற்சிறு குறைகளைச் சுட்டிக் காட்டியதும் சரிசெய்யப்பட்டது.

அனைத்தும் தயார், இறுதியாக ஒரு முறை ஜூலியன் அனைத்தையும் சரிபார்த்ததும், அனைத்துக் கோப்புகளும் ஜூலியனின் மடிக்கணினிக்கு நகலெடுக்கப்பட்டன. மற்ற மடிக்கணினிகளின் கோப்புகள் அனைத்தும் சிறப்பு மென்பொருட்கள் கொண்டு துடைத்தெடுக்கப்பட்டன. 

ஜூலியன் அனைத்துக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் (file headers) தகவல்களை நீக்குவதில் மூழ்கியிருந்தார். அதே நேரத்தில் வீட்டின் அறைகள், குளிர்சாதனப் பெட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. 

அனைத்து வேலைகளும் முடிந்ததும் அனைவரையும் நிமிர்ந்து கூர்மையான பார்வை பார்த்தபடி ஜூலியன் கேட்ட கேள்வி, ‘காணொளிக்கு என்ன பெயர் வைக்கலாம்?”.. 

பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஜூலியன் தேர்வு செய்தது “collateral murder”. 

விக்கிலீக்ஸ் தளத்திற்கான வழங்கிகளைச் செயல்படுத்தும் நிறுவனங்களுடன் காணொளியின் தீவிரத்தையும், எந்த நிர்ப்பந்தத்திலும் நீக்காமல் இருக்கவும் உறுதிசெய்து கொண்ட ஜூலியன், கூகுளின் யூ-டியூப் தள நிர்வாகிகளிடமும் பேசி அங்கும் காணொளியினை வெளியிட ஏற்பாடு செய்து கொண்டார். 

அடுத்த சில நொடிகளில் கோப்புகள் வலையேற்றப்பட்டன. ஜூலியன் திருப்தியென கட்டை விரல் உயர்த்தியதும், சடுதியில் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும், மடிக்கணினிகளும் மூட்டை கட்டிக் கொண்டு அனைவரும் வெளியேறி மறைந்தனர்.

யாரும் அங்கிருந்ததற்கான அந்த அறிகுறியுமில்லாமல் உலகின் முகத்தில் ஓங்கியறையும் உண்மை குறித்த ஒரு காணொளியினை வலையேற்றிட உதவியத் திருப்தியுடன் அந்த இடம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. 

மறுநாள் உலக ஊடகங்கள் அனைத்தும் கூவிக்கூவிக் களைத்தன. ஒட்டு மொத்த அமெரிக்காவும் அவமானத்தால் முகத்தினை கவிழ்த்து கொண்டது. 

அப்படி என்ன இருந்தது அந்த காணொளியில்?.

எந்த வித விபரீத அறிகுறியும் இல்லாமல், வெறும் முன்னெச்சரிக்கைக்காக என்ற காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிட்டுக்குருவிகள் போல் சாதாரண மக்களை, குழந்தைகளை, பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடத்தினை என சகட்டுமேனிக்கு வேட்டையாடப்படுவதை விரிவாகக் கூறிக்கொண்டிருந்தது. 

அதில் இறந்தவர்களில் புகழ்பெற்ற “reuters’ செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவரும் அடங்குவர். அவர்களின் மரணம் குறித்து பலமுறை கேள்வியெழுப்பிய போதெல்லாம், தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதுவரை அமெரிக்கா மறுத்து வந்தததும், அந்த காணொளி தாக்குதலில் ஈடுபட்ட அதே அபெச்சி உலங்கு ஊர்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருந்ததும் ஆச்சர்யக் குறிப்பு. 

அமெரிக்காவின் மனித உரிமை, சர்வதேசப் போர் விதிமுறைகள் சாயங்கள் இணையத்தில் மொத்தமாகக் கரைந்து, இவ்வளவு நாள் மறைத்து வைக்கப்பட்ட விகாரமான இராணுவ முகம் உலகத்தின் கண்களுக்கு காட்சியளித்தது. 

ஜூலியன் சி.ஐ.ஏவின் கையாள் என்றவர்கள் தலையை சொறிந்து கொண்டிருந்தனர். இராணுவத் தாக்குதலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த காணொளி எப்படி ஜூலியனின் கைக்குச் சென்றது, 

எடுத்தது யார்? 

விக்கிலீக்ஸ் தளத்திற்குக் கொடுத்தது யார்? 

இல்லை தன் பழையப் பழக்கத்தில் ஜூலியன் ‘தன் கையே தனக்கு உதவி’ முறையில் இராணுவ வலையமைப்பிலிருந்து சுடப்பட்டதா என்று பல கேள்விகளோடு அலைந்த கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, சில வாரங்களில் பதில் தேடி வந்தது… 

விக்கிலீக்ஸ் வரலாற்றில் collateral murder காணொளி வெளியீடு ஒரு மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. 

அதுவரை வெறும் உலக அரசியல் விமர்சகர்களாலும், சக பத்திர்க்கையாளர்களாலும் மட்டுமே கவனிக்கப்பட்டு வந்த ஜூலியன், இப்போது மனித உரிமை, உலக அமைதி போன்ற விஷயங்களுக்காகச் செயல்பட்டு வரும் குழுமங்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளுக்கு புதிய ஊடக ஒழுங்குமுறை சட்டத்திருத்தங்களுக்கான கருத்தரங்குகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு ஜூலியன் விஸ்வரூபமெடுத்திருந்தார்.

மழைக்காலத்தில் நம்மூர் தெருக்களில் ஆடைகளில் மழைநீர் பட்டுவிடாமல் கவனமாக நடப்பது போல், ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களைக் கொடுப்பவர்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிவராமல் பார்த்துக் கொள்வதே விக்கிலீக்ஸ் தளத்திற்கான பலம் என்பது புரிந்தே இருந்தது. 

இதன் காரணமாக பலரும் ஜூலியன் தானே ஹேக் செய்து வெளியிட்டு விட்டு, விக்கிலீக்ஸ் மூலம் தன் கல்யாணத்திற்குத் தானே மேளம் அடித்துக் கொள்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலை கொள்வதற்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை. 

ஆனால் இதையெல்லாம் தகர்ப்பதைப் போல ஒரு நாள் நள்ளிரவில் collateral murder காணொளிக் காட்சி உட்பட பல இராணுவ ஆவணங்களை விக்கிலீக்ஸ் தளத்திற்கு அனுப்பி வைத்ததாக பிராட்லி என்னும் 22 வயது அமெரிக்க இராணுவ வீரர் ஈராக் இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டு, குவைத்தில் வைத்து விசாரித்து வருவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்து விக்கிலீக்ஸ் செயல்பாடுகளை அவதானித்து வருபவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

ஜூலியனைத் தவிர அனைவரும் விக்கிலீக்ஸ் தளத்தின் தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சிறிதே கவலை கொண்டிருந்த வேலையில், பிராட்லி தானே முன்வந்து இணைய அரட்டையில் குறுகிய காலத்திற்கே அறிந்திருந்த ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் ஹேக்கிங் நிபுணருமான அட்ரியன் என்பவரிடம் விக்கிலீக்ஸ் தளத்திற்கு தான் அனுப்பிய விவரங்கள் குறித்து சிலாகித்துச் சிலிர்த்து வைக்க, அட்ரியன் அதை அப்படியே அமெரிக்க அரசாங்கத்திடம் புட்டு வைக்க, பிராட்லி கைது செய்யப்பட்டார். 

இன்றளவும் அமெரிக்க இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் பிராட்லி மீதுள்ள குற்றச்சாடுகளுக்கு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனைக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அமெரிக்காவின் சிறந்த வழக்கறிஞர்கள் இருவரை பிராட்லிக்காக வாதிட விக்கிலீக்ஸ் சார்பில் நியமித்தாலும், அமெரிக்கா அரசாங்கம் அனுமதி மறுத்துவிட்டது. 

இதுநாள் வரை விக்கிலீக்ஸ் தளத்தின் சார்பாக, பிராட்லி தான் தங்களுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தாக எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும், விக்கிலீக்ஸ் தளத்தின் மீதோ அல்லது ஜூலியன் மீதோ பெரிதாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

பிராட்லியின் கைதுக்குப் பிறகு ‘நாந்தான் அப்பவே சொன்னேன்ல..தனியாளா இவ்வளவு பண்ண முடியுமா…இவனுக்கு இதெல்லாம் யாரோ அனுப்புறாங்கய்யா…” என்ற குரல்கள் பரவலாக எழுந்தடங்கியது.

அனைத்து சோதனை முயற்சிகளும் வெற்றியில் முடிந்த திருப்தியில், ஆப்கன் போர் குறிப்பு வெளியீடுகளுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த ஜூலியனுக்கு, பிராட்லியின் கைது பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. 

என்றுமே தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ தொல்லைகள் வரும்போது ஜூலியன் அமைதி காத்ததே கிடையாது, சீண்டச் சீண்டச் சீறுவதே ஜூலியனின் கொள்கை. 

பிராட்லியின் கைது, எங்கு சென்றாலும் உளவாளிகளின் நோட்டம் என்று கடுப்பாகி போன ஜூலியன் திட்டமிட்டதைக் காட்டிலும் விரைவாக ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்டு அமெரிக்காவிற்கு வெறியேற்றியிருந்தார். 

இதுவரை போராடிப் பார்த்த அமெரிக்கா, தொழில்நுட்பத்தில் ஜூலியனுடன் மோதி வெற்றி பெற முடியாதென்பதை உணர்ந்திருந்த அமெரிக்கா, ஜூலியனுக்காக வேறொரு திட்டம் வைத்திருந்தது. 

தன் எதிரிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே இருப்பதும், அவர்களை தன் விக்கிலீக்ஸ் வெளியீடுகளாலேயே அடக்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த ஜூலியன் அடுத்து அமெரிக்காவிற்காக வைத்திருந்த அதிரடி அணுகுண்டு தான் Cablegates என்றழைக்கப்படும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆவணங்களின் வெளியீடு. 

ஆனால் அவற்றைத் தயார்ப்படுத்துவதற்கு ஜூலியனுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது. அந்த சில மாதங்கள் இடைவெளியில் ஜூலியனின் வாழ்வில் மீண்டும் வசந்தகாலம் எட்டிப்பார்த்தது. 

அதுவரை துணைவியில்லாத, தனிமையான, ரகசிய இருப்பிடங்களில் பதுங்கித் திரியும் வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருந்த ஜூலியனுக்கு collateral murder காணொளி மற்றும் ஆப்கன் போர்க்குறிப்புகள் வெளியீடுகளுக்குப் பின் அனைத்துத் தரப்பினராலும் ஆராதிக்கப்படும் நாயகன் அந்தஸ்து கிடைத்திருந்தது.

அந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், தொலைக்காட்சிப் பேட்டிகள் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். சென்ற இடமெல்லாம் சிறப்பு வரவேற்பும், இளம் சமுதாயத்தின் ஆரவாரமும் ஜூலியனுக்கு உற்சாகமூட்டியது. 

இக்காலகட்டத்தில் ஸ்வீடனில் ஒரு தேவாலயக்குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது தான் ஜூலியன் என்னும் சிங்கம், இரண்டு புள்ளிமான்களால் சாய்க்கப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்தேறியது. 

‘சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே – நாகராஜ்’ போன்ற வாசகங்களைக் கொண்ட ஆட்டோக்களைத் தன் வாழ்நாளில் பார்த்துமறியாத ஜூலியனுக்கு ஸ்விடனில் நடந்த அசம்பாவிதம் என்ன? என்ன? என்ன? விரிவாக அடுத்த பகுதியில்.

நன்றி : எழில் நிலா 

No comments:

Post a Comment