Follow by Email

Sunday, 26 January 2014

புலிகளின் இன்னொரு முகம் -10
நேரம் மாலையாகி விட்டிருந்தது. நான் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த நேரமும் கடந்து, 24 மணித்தியாலங்கள் ஆகி விட்டிருந்தன. 

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குற்றுயிரும் குலையுயிருமாக சிறைச்சாலைக்கு திரும்பவும் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தத் திகில் காட்சியில் நானும் ஒருவனாக விரைவில் மாற இருப்பது நிச்சயம் என எனது மனம் சொல்லியது.

பொழுது கருகும் நேரம் என்னிடம் வந்த புலி உறுப்பினன் ஒருவன், தன்னுடன் வருமாறு என்னை அழைத்தான். நான் தட்டுத்தடுமாறி எழுந்து அவனுடன் புறப்பட்டேன். எதற்காக அழைத்துச் செல்கிறான் என்பதைக் கேட்க முடியாத நிலை.

சிறைச்சாலைக் கட்டிடத்துக்கு (இந்த வீட்டைப் பல கனவுகளுடன் கட்டிய புண்ணியவான், இந்த மண்ணிலும் தனது வீட்டிலும் வருங்காலத்தில் தமிழர் பெயராலேயே இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்) முன்னால் உள்ள முற்றத்தில் காந்தி ஒரு கதிரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

அவனுக்கு அருகில், அவனைப் போல நெட்டையான இன்னொருவனும் ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தான். அவர்களைச் சுற்றி வேட்டை நாய்கள் போல ஐந்தாறு புலிகள் நின்று கொண்டிருந்தார்கள். காந்தி சுட்டு விரலைக் காட்டினால் போதும், இலக்கின் மீது பாய்ந்து கடித்துக் குதறிவிடும் தோரணையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகில் வெறுமையாக இருந்த இன்னொரு கதிரையில் என்னை இருக்கும்படி காந்தி கூறினான். நான் தயக்கத்துடன் அதில் இருந்தேன். திரும்பவும் மரியாதை கொடுத்து இருக்க வைத்துவிட்டு, உதைப்பதற்குத்தான் இந்த நாடகமோ என எனது உள்ளம் கருதியது.

காந்திக்கு அருகில் இருந்த நெட்டையன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “என்னைத் தெரியுமா?” என வினவினான்.

நான் “தெரியாது” என்றேன்.

“உங்கடை புத்தகக் கடைக்கு நான் கன தரம் வந்திருக்கிறன். புத்தகம் வாங்க அல்ல. புத்தகம் பாக்கும் சாட்டில் உங்களிட்டை ஆர் ஆரெல்லாம் வந்து போகினம் எண்டு பாக்கிறதுக்காக. 

அது சரி தில்லை வந்தால் நீங்களும் அவனும்; கடைக்குப் பின்னால் போய் இருந்து கன நேரமாக என்ன கதைக்கிறனிங்கள்?” என அவன் வினவினான்.

“அப்படி ஒண்டும் விசேசமாகக் கதைக்கிறதில்லை, சும்மா பல விசயங்களும் கதைப்பம்” எனப் பதிலளித்தேன்.

“என்னடா எங்களுக்குச் சுத்தப் பார்க்கிறியா? எங்களுக்கு எதிரான திட்டங்கள் தானே போடுறனிங்கள்?” என்று ஆவேசமாகக் கத்திய அவன், என்மீது ஒரு உதை விட்டான். அவனுடைய பலமான உதையால் நான் கதிரையுடன் சரிந்து விழுந்தேன்.

பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றேன். அப்பொழுதுதான் அவதானித்தேன். அந்த நெட்டையனின் இடுப்பில் பிஸ்டல் ஒன்று உறையுடன் தொங்கிக் கொண்டிருந்தது.

 ‘ஓ! இவன் இயக்கத்தில் ஒரு முக்கியமான ஆள்’ என்பது விளங்கிவிட்டது. இப்படியானவர்களை ஊரிலுள்ள சனங்கள் ‘பிஸ்டல் காய்’ என்று அழைப்பது வழமை. ‘தேசியத் தலைவர்” பிரபாகரன் இப்படியானவர்களின் ‘தகுதி’ கண்டுதான், இவர்கள் பிஸ்டல் வைத்திருக்க அனுமதிப்பது வழமை.

காந்தி திரும்பவும் என்னை அந்த கதிரையில் இருக்கச் சொன்னான். நான் அந்த யம கிங்கிரர்கள் முன்னால் தயக்கத்துடன் மீண்டும் உட்கார்ந்தேன். 

இப்பொழுது நான் எமது வருங்காலத் (‘தமிழீழ’) தமிழினத்தின் ஒரு குறியீடாக, அவர்களுக்கு முன்னால் கூனிக்குறுகி அமர்ந்திருந்தேன். நிச்சயமாக இந்த கொலைகாரப் புலிகளால், தமிழினம் வருங்காலத்தில் கூனிக் குறுகி அவலப்பட வேண்டிய ஒரு நிலை வரும் என்ற ஒரு எண்ணம், அந்த நேரத்தில் எனக்குள் தோன்றியது.

காந்தி தன்னைச் சுற்றி நின்ற ‘வேட்டை நாய்’களில் ஒன்றை அழைத்து ஏதோ காதுக்குள் சொன்னான். பின்னர் தனக்கருகில் இருந்த நெட்டையனை நோக்கி “உதயன் நீரும் எங்களுடன் வாறீர் தானே?” என வினவினான்.

எனக்கு இப்பொழுது அவனது பெயர் தெரிந்துவிட்டது. (அவன் பருத்தித்துறையைச் சேர்ந்தவன் என்றும், புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முக்கியமானவன் என்றும் பின்னாளில் தெரிந்து கொண்டேன்)

காந்தியால் இரகசியமாக உத்தரவிடப்பட்டவன், திடீரென அங்கு தில்லையை அழைத்துக் கொண்டு வந்து நின்றான். தில்லை கால் சங்கிலியுடன் தத்தித் தத்தி நடந்து வந்து காந்தியின் முன்னால் நின்றார்.

காந்தி தில்லையைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு, “என்ன தில்லை, உன்ரை மணியண்ணையையும் உனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறம். சந்தோசம் தானே?” எனக் கிண்டலாகக் கேட்டான். தில்லை எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.

“என்னடா மயிராண்டி, நான் சொல்லிறது கேட்கிறதா?” என காந்தி உறுமினான்.

“ம்..” என தில்லை அனுங்கியது மட்டும் கேட்டது.

சிறிது நேரத்தில் அந்த புலி உறுப்பினன் தில்லையை திரும்பவும் சிறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டான்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் என்னிடம் திரும்பிய காந்தி, “அது சரி அந்த அச்சுக்கூட சமான்களையெல்லாம் எங்கை வைச்சிருக்கிறாய்?” எனத் திடீரெனக் கேட்டான்.

நான் “எந்த அச்சுக்கூட சாமான்?” என அவனிடம் வினவினேன்.

“டேய் எங்களிட்டை சுத்தினியோ, பிறகு நேரே கைலாயம்தான் போகவேண்டி வரும். இஞ்சை வாற எல்லாரும் எங்களைச் சுத்திப்போட்டு லேசாகத் தப்பிப் போகலாம் எண்டு நினைச்சுத்தான் வாறவங்கள். 

பிறகு போகப்போகத்தான் தெரியும் நாங்கள் ஆரெண்டு. மரியாதையாக உண்மையைச் சொல்லிப்போடு.  இல்லையெண்டால் பிறகு எங்கடை பொடியன்கள் உன்ரை உடம்பிலை இருக்கிற எலும்பு எத்தனை எண்டு எண்ண வேண்டி வரும்” எனக் கத்தி எச்சரிக்கை விடுத்தான்.

எனக்குச் சிறிது யோசனையாகி விட்டது. ஏனெனில் எங்களிடம் புதிதாக அச்சகம் தொடங்குவதற்கான திட்டம் ஒன்று இருந்ததுடன், அதற்காக கடந்த சில வருடங்களாக தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருந்தோம்.

முதலில் நாம் வைத்திருந்த ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ என்ற அச்சகத்தில்தான், ஆரம்ப காலங்களில் எல்லா பிரதான இயக்கங்களின் வெளியீடுகளையும் அச்சிட்டு உதவியிருந்தோம். 

ஆனால் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு, உமா மகேஸ்வரன் தனியாக ‘புளொட்’ இயக்கத்தை ஆரம்பித்த பின்னர், ஏக காலத்தில் புலிகளின் ‘உணர்வு’ பத்திரிகையையும், புளொட்டின் ‘புதியபாதை’ பத்திரிகையையும் அச்சிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் இரு பகுதியினரும் எமது அச்சகத்துக்கு வரும் நேரங்களில்  பிரச்சினைகள் ஏதுமின்றி சுமூகமாக நடந்து கொண்டாலும், பின்னர் அவர்களுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்து நேரடியாக மோதிக் கொள்ளும் ஒரு நிலை உருவாகி வந்தது. 

அதற்காக இரு பகுதியினரும் ஒரே நேரத்தில் அச்சகத்துக்கு வந்துவிடாதபடி நேர அட்டவணையை நாம் வகுத்ததுடன், தற்செயலாக ஒரே நேரத்தில் வந்தாலும் நேரடியாகச் சந்தித்து விடாதபடி இருக்க, அச்சகத்தில் இரு வேறு பகுதிகளையும் அவர்கள் எம்முடன் அமர்ந்து பேசுவதற்கு வசதியாக ஒதுக்கி வைத்திருந்தோம். 

இருந்தாலும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எனவே அவர்களுக்கிடையிலான மோதல் எங்கள் அச்சகத்தில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அச்சகத்தை மூடிவிடத் தீர்மானித்தோம்.

இதற்கு வசதியாக 1981 ய+ன் 4ஆம் திகதி நடந்து முடிந்த யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்கள் யாழ் நகரைத் தீக்கிரையாக்கி செய்த அட்டூழியத்தைக் காரணமாக வைத்து, எமது முடிவைச் செயற்படுத்தத் தீர்மானித்தோம்.

 யாழ்ப்பாணத்தில் எமது அச்சகம் மட்டுமே தீவிரவாத தமிழ் இளைஞர் இயக்கங்களின் வெளியீடுகளை அச்சிட்டுக் கொடுத்திருந்தபடியால், அதைச் சாக்காகக் கொண்டு, ஐ.தே.க குண்டர்கள் எம்மைக் குறிவைத்துத் தாக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்து, நாம் எமது அச்சகத்தை மூடி வேறு இடத்துக்குப் பொருட்களை அப்புறப்படுத்தி, பின்னர் அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டோம்.

எமது அச்சம் நியாயமானது என்பதை, ‘புதிய பாதை’யை வெளியிட்டு வந்த suntharamசுந்தரத்தை சித்திரா அச்சகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்ததின் மூலம், பின்னர் புலிகள் நிரூபித்து விட்டனர். நாம் அச்சகத்தை விற்காது இருந்திருந்தால், அந்தக் கொலை எங்கள் அச்சகத்தில்தான் நிகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அது நடந்து வெகு காலத்திற்குப் பின்னர்தான், நாம் மீண்டும் அச்சகம் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருந்தோம். அதற்காக அச்சுயந்திரத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பொருட்களையும் இந்தியாவிலிருந்து தோழர் ஒருவர் மூலம் பெற்றிருந்தோம்.

அந்தத் தோழர் வேறு யாருமல்ல. அன்றைய காலகட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அத்தனை போராளிகளுக்கும் நன்கு பரிச்சயமான தோழர் வி.விசுவானந்ததேவன் அவர்களே அவர்.


வடமராட்சியிலுள்ள கல்லுவம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடப் பட்டதாரியுமான அவர், பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்தே இடதுசாரிக் கருத்துகளில் ஈடுபாடு கொண்ட ஒருவராவார். 

எமது முன்னைய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த அவா, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த  நா.சண்முகதாசனின் தவறான போக்குகளுக்கு எதிராக நடந்த உள்கட்சிப் போராட்டத்தில் எம்முடன் உறுதியாக நின்றதுடன், அதன் காரணமாக பின்னர் உருவான எமது மார்க்சிச – லெனினிசக் கம்யூனிஸ்ட் கvisuட்சியின் முக்கியமான ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார்.

1970களில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர், அநேகமாக எல்லா இடதுசாரிக் கட்சிகளும் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டில் சென்று கொண்டிருந்த போது, எமது கட்சி மட்டுமே அதில் விசேட கவனம் செலுத்தியது. 

இனப்பிரச்சினை சம்பந்தமாக எமது கட்சி கொழும்பில் இரண்டு நாள் விசேட மாநாடு நடாத்தி ஆராய்ந்ததுடன், தமிழ் மக்களின் தேசிய – ஜனநாயக உரிமைகளுக்குப் போராடுவதற்காக, ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற வெகுஜன அமைப்பையும் 1975ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருந்தது.

அந்த அமைப்புக்குப் பொறுப்பாகக் கட்சியால் நியமிக்கப்பட்டிருந்த தோழர்களில் விசுவானந்ததேவனும் முக்கியமான ஒருவராவார். பின்னர் அந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி தான், விசுவானந்ததேவனின் முன்முயற்சியால் ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயற்பட்டு வந்தது. அது வேறு கதை.

இப்பொழுது காந்தி என்னிடம் கேட்டது, தோழர் விசுவானந்ததேவன் நீணடகால நோக்கில், எமது அரசியல் வேலைகளுக்குப் பயன்படும் வகையிலும், பொருளாதார வருவாயை ஈட்டுவதற்காகவும், எமக்காகப் பல சிரமங்கள் மத்தியில் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து தந்த அந்த அச்சகப் பொருட்களைத்தான். 

அந்த விசுவானமான மனிதன், புனித கைங்கரியத்துக்காகக் கொண்டு வந்து தந்த அந்த அச்சகப் பொருட்களை, யாரும் அபகரித்துவிடாமல் இருப்பதற்காக, கடந்த பல வருடங்களாக - இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்த காலத்திலிருந்து நாம் எடுத்து வந்த முயற்சிகளே ஒரு சரித்திரம் ஆகும்.


தொடரும்

நன்றி.
அன்புடனும் தோழமையுடனும்,
மணியம்.  இது தேனீ’ பிரசுரம்

No comments:

Post a Comment