Follow by Email

Wednesday, 11 December 2013

விடுதலைபுலிகளின் முடிவு - நடந்தது இதுதான்.

புலனாய்வு கட்டுரை எழுதுவதில் விறுவிறுப்பு ரிஷி தனித்திறமை வாய்ந்தவர்.  இவர் எழுதிய பல கட்டுரைகள் அருகில் இருந்து பார்த்த மாதிரி துல்லியமான விபரங்களுடன் வரும்.  அவர் இப்போது எழுதியிருக்கும் ஒரு கட்டுரையை இப்போது உங்களுக்காக வெளியிட்டு இருக்கிறேன்/  படித்து பாருங்கள். உண்மை புரியும். 


சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?

ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு..

…இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு, தனி நாடு கேட்க முடியாது. இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தனி நாடு கோருகின்றனர். அதை சரி என்று இந்தியா ஏற்றுக் கொள்கிறதா? அப்படித்தான் இலங்கை ஏற்கவில்லை..” என்றார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, “இலங்கைப் போரில் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றதும், புலிகள் தரப்பில் நடேசன் மூலமாக, குமரன் பத்மநாதன் வழியே இந்திய அரசிடம் உதவி கேட்டனர். மத்திய அமைச்சர் சிதம்பரம் அதற்கு முயற்சி மேற்கொண்டு, புலிகள் தரப்பிலும் இலங்கை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பழ.நெடுமாறனும் வைகோவும், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அவர்கள் மூலம் தனி நாடு பெறலாம்’ என்று கூறி புலிகளை குழப்பிவிட்டனர். அதனால் நிலைமை மாறிப்போனது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்த சலசலப்பு, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஒரு தரப்பினர், “கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்தபின் இவர்கள் கதை விடுகிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ, “இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோர் இறந்து விட்டதால், தாம் கூறுவதை மறுத்துப் பேச ஆளில்லை என்பதால், தேர்தல் சமயத்தில் இவ்வாறு திசை திருப்பி விடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இவர்கள் கூறுவது நிஜமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் ‘எமது பேச்சை கேட்டிருந்தால், பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கலாம்’ என்று கூறுவது நிஜமா என்பதில் பலத்த சர்ச்சை. (நெடுமாறன் ஐயா, சீமான் ஆகியோருக்கு இந்த சர்ச்சையில் சிக்கல் கிடையாது. காரணம், அவர்களுக்கு பிரபாகரன் உயிருடன் உள்ளார்)

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறோம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோரை தவிர, புலிகள் தரப்பில் இந்த விவகாரத்தை டீல் பண்ணிய மூவர் இன்னமும் உயிருடன் உள்ளார்கள். இந்தியாவில், அமைச்சர் ப.சிதம்பரத்தை தவிர, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய வேறு இருவர், இன்னமும் இந்தியாவிலேயே உள்ளார்கள்.

மத்திய அரசின் திட்டத்தை குழப்பினார்கள் என்று காங்கிரஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்ட பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரை, மேலே சொன்ன கணக்கில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரை தவிர, இந்த விவகாரத்தில் தொடர்புடைய வேறு இருவர் இந்தியாவில் உள்ளார்கள்.

அவர்களில் ஒருவர், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமான, ஆனால் அரசியல்வாதி அல்லாத நபர். இரண்டாவது நபர், இந்தியாவின் தேசிய கட்சி ஒன்றின் தமிழகத்தை சேர்ந்த மாநில அரசியல்வாதி.இவர்கள் இருவருக்கும் இந்த விவகாரத்தில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விவகாரம் பற்றி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறுவதை பார்த்தால், இது ஒரு தடவை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போன்ற தோற்றம் ஏற்படுகிறது அல்லவா? ஆனால், நிஜம் அதுவல்லை.

இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இரு கட்டங்களுக்கும் இடையே சில மாதங்கள் இடைவெளி உண்டு. முதலாவது கட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோருக்கு தொடர்பு உண்டு. இரண்டாவது கட்டத்தில் தொடர்பு இல்லை.

சரி. அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல, “மத்திய அரசு சொன்னதை கேட்டிருந்தால், பிரபாகரன் ஒருவேளை உயிர் தப்பியிருக்கலாம்” என்பது எந்தளவுக்கு உண்மை?

அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் (விறுவிறுப்பு.காமில் நாமே பல தடவைகள் விமர்சித்துள்ளோம்), இந்த விஷயத்தில் அவர் கூறுவது, ஏறக்குறைய நிஜம். கே.எஸ்.அழகிரி கூறுவதும் அப்படியே.

இத்தனை ஆண்டுகளாக விறுவிறுப்பு.காம் படித்துவரும் வாசகர்களுக்கு, நாம் காங்கிரஸ் ஆதரவு மீடியாவோ, காங்கிரஸ் அனுதாபியோகூட அல்ல என்பது புரிந்திருக்கும். இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் அமைச்சர் சிதம்பரம் கூறுவது ஏறக்குறைய நிஜம் என்று, எமக்கு தெரிந்த விஷயங்களில் அடிப்படையில் சொல்கிறோம். We firmly stand on it.

சரி. உண்மையில் இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? இதோ, முழுமையான விபரங்கள்:

இந்த விவகாரம், யுத்தத்தின் இறுதி நாட்களில் தொடங்கியது அல்ல. யுத்தம் முக்கால் பங்கு முடிவடைந்து, கிளிநொச்சி நகரம் எந்த நேரத்திலும் ராணுவத்தால் கைப்பற்றப்படலாம் என்று இருந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

அந்த நிலையில் தமிழ் மீடியா பிரசாரம், “விடுதலைப் புலிகள் தந்திரமாக பின்வாங்கி செல்கிறார்கள்” என்பதாக இருந்தது. ஆனால், நிஜ நிலைமை அப்படி இருக்கவில்லை. ராணுவ படைப்பிரிவுகளின் வெவ்வேறு திசையிலான தாக்குதல்கள் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரத்தையும் கைவிட்டு, கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சி அடுத்து ராணுவத்தின் கைகளில் விழப் போகிறது என்று புலிகள் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது. கிளிநொச்சியை கைவிட்டு பின்வாங்கினால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனை புலிகளின் தளபதிகள் மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.
மீடியாக்களில் காட்டப்பட்ட பிம்பம் வேறு என்ற போதிலும், நிஜ நிலைமை இலங்கைக்கு வெளியே மிகச் சிலருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், வட அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனால் ‘நிலைமை படுமோசம்’ என்ற தகவல் 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

வட அமெரிக்காவில் வசித்தவருக்கு, தமிழக அரசியல் வட்டாரங்களில் நல்ல தொடர்பு உண்டு. அவர் தமக்கு கிடைத்த தகவல் பற்றி, இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருடன் விவாதித்திருக்கிறார். “இந்திய மத்திய அரசால், ஏதாவது செய்ய முடியுமா” என்று கேட்டிருக்கிறார்.

பின்னாட்களில் இந்த விஷயம் தெரியவந்தபோது வட அமெரிக்காவில் வசித்தவரிடம் நாம் ஒரு கேள்வி கேட்டோம். “தமிழகத்தில் ஈழ அரசியல் பற்றி அதிகம் பேசும் பலர் இருக்க, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், ஏன் இந்த இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டீர்கள்?” என்பதே நாம் அவரிடம் கேட்ட கேள்வி.


“இந்திய தேசியக் கட்சியின் இந்த தமிழக தலைவர் ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாதவர். மிகவும் நியாயமானவர். இவர் மூலம் செய்யப்படும் இப்படியான காரியங்களை தமது சுய அரசியல் லாபத்துக்காக வெளியிடவோ, பயன்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அவருடன் இதுபற்றி பேசினேன்” என்பது நமக்கு கூறப்பட்ட பதில்.

அந்த நம்பிக்கையை, குறிப்பிட்ட அரசியல் தலைவர் இன்னமும் காப்பாற்றி வருகிறார் என்பது, தமிழக அரசியலின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று.

இந்த தமிழக தலைவர், அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார்.

இவர் தெரிவிப்பதற்கு முன்னரே, இந்திய உளவுத்துறை மூலம், விடுதலைப் புலிகளின் அப்போதைய இக்கட்டான நிலை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் தரப்பில் இருந்து யாரும், அமைச்சர் சிதம்பரத்துடனோ, மத்திய அரசுடனோ தொடர்பில் இருக்கவில்லை.

தமிழகத் தலைவர், ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம், அந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக மத்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு indirect தொடர்பு ஏற்பட்டது.

வட அமெரிக்காவில் உள்ளவர் யார்? அவருடன் தொடர்பில் உள்ள புலிகளின் தளபதி (நா.நடேசன்) யார்? என்ற விபரங்களை கேட்டு தெரிந்துகொண்ட அமைச்சர் சிதம்பரம், இதுபற்றி ஆலோசித்து சொல்வதாக தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. அந்த தகவல், வன்னியில் இருந்த நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், அடுத்தடுத்த தினங்களில் டில்லிக்கும், சென்னைக்கும், அமெரிக்காவுக்கும், வன்னியில் உள்ள புலிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடராக செய்திப் பரிமாற்றம் நடந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவுக்கும், டில்லிக்கும் இடையே சில நேரடி உரையாடல்களும் இடம்பெற்றன. அமைச்சர் சிதம்பரத்தின் சில சந்தேகங்களுக்கான பதில், வன்னியில் இருந்து பெறப்பட்டு தெரிவிக்கப்பட்டது.

சரியாக சொல்வதென்றால், இது ஜனவரி 1-ம் தேதி (2008) நடந்தது. அன்று மாலை வன்னியில், பரந்தன் நகரை ராணுவம் நெருங்கிக் கொண்டிருந்தது. பரந்தன் வீழ்ந்தால், அடுத்த இலக்கு கிளிநொச்சி நகரம்தான் என்பது புலிகளுக்கு தெரிந்திருந்தது.

ஜனவரி 2-ம் தேதி, காலை 11.15க்கு இலங்கை ராணுவ தலைமையகம் நியூஸ் பிளாஷ் ஒன்றை அரசு டி.வி. சேனல் ரூபவாஹினியில் வெளியிட்டது. “பிளாஷ்: கிளிநொச்சி எந்த நிமிடமும் விழலாம். கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்திக்கு தயாராக இருங்கள்”. ஆனால், அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த அப்டேட்டும் இல்லை.

சுமார் 3 மணிக்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், விசித்திரமான தகவல் ஒன்று இருந்தது. “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்பதே அந்த செய்தி.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாக இல்லை. ஆனால், “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை கைப்பற்றப்பட்டது” என்கிறது பாதுகாப்பு அமைச்சு.

பரபரப்புக்கு காரணம், இந்த நெடுஞ்சாலை, கிளிநொச்சி ஊடாக செல்கிறது! அப்படியானால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு விட்டதா?

இந்த நேரத்தில் பா.நடேசன் அமெரிக்காவில் இருந்த நபரை தொடர்புகொண்டு, “கிளிநொச்சி ராணுவத்திடம் எந்த நிமிடமும் வீழ்ந்து விடும். நாம் முல்லைத்தீவு நோக்கி நகர்கிறோம். இந்திய மத்திய அரசை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்து, ஏதாவது செய்ய சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து டில்லிக்கு போகுமுன், “கிளிநொச்சி நகரை தெற்கில் இருந்து 57-ம் டிவிஷன் படைப்பிரிவு நெருங்கிவிட்டது. வடக்கே இருந்து நகர்ந்து வரும் அதிரடிப்படை-1 கரடிப்போங்கு ஜங்ஷனை கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சியை அண்மித்து விட்டது” என்ற செய்தியை வெளியிட்டது ராணுவ தகவல் மையம்.

இந்த அவசர சூழ்நிலையில் அமைச்சர் சிதம்பரம், தமது நிலைப்பாட்டையும், மத்திய அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக தெரிவித்தார். இப்போது அவர் கூறிய அதே வார்த்தைகளைதான் அப்போதும் (2008-ல்) இடைப்பட்ட தொடர்பாளர்கள் மூலம் பா.நடேசனுக்கு தெரிவித்தார்.

“இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்றார் ப.சிதம்பரம்.

இந்த தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது. 

அமைச்சர் சிதம்பரத்தின், “இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் தற்போதைக்கு ஈழத்தை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது” என்ற தகவல், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரை மட்டுமன்றி, கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் ராணுவம் நுழைந்து புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், புலிகளின் தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்தது. அதில், இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் அனுப்பிய தகவல் ஆராயப்பட்டது.

ஆலோசனையில் கலந்துகொண்ட தீபன், “ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும். அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்” என்ற நிஜ கள நிலைமையை தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள், அதை மறுத்தனர். முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாக தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனையில், ‘ஈழம்’ கொள்கையை கைவிடுவதாக அறிவிப்பது குறித்து பலத்த விவாதம் நடந்தது. அதில், 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம் ஒன்று ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது.

2002-ம் ஆண்டு புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாங்காக்கில் தொடங்கியபோது, “நாட்டை பிரித்து ஈழம் அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகள் ஈழம் கொள்கையை கைவிட்டால்தான், பேச்சுவார்த்தையை தொடங்க முடியும்” என இலங்கை அரசு சார்பில், ஜி.எல்.பீரீஸ் (தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவர்) நிபந்தனை விதித்தார்.

அப்போது, புலிகளின் சார்பில் கலந்துகொண்ட குழுவின் தலைவர் ஆன்டன் பாலசிங்கம், “எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையை கைவிட தயார்” என தெரிவித்தார். அதையடுத்தே, பேச்சுவார்த்தைகள் அப்போது தொடங்கின.

“இப்போதும், அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையை கைவிட்டால், இந்தியாவால் எந்த விதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்” என்பது சில தளபதிகளின் கருத்து.

இது நடந்துகொண்டிருந்தபோது, புலிகளின் சம்மதத்துடன் அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை சந்தித்து புலிகள் தரப்பில் பேசுவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்த முயற்சிகள் வெற்றியடையும் கட்டத்தில் இருந்ததாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. (கடந்த பாகத்தில் நாம் குறிப்பிட்ட அமெரிக்கா வாழ் தமிழருக்கும், இதற்கும் தொடர்பு கிடையாது)

வாஷிங்டனின் முடிவை பார்த்துவிட்டு, புதுடில்லியிடம் செல்லலாம் என்பதே புலிகள் தலைவர் பிரபாகரனின் கருத்தாக இருந்தது.

அதேநேரத்தில், “போர் நிலைமை புலிகளுக்கு மிக மோசமாக இருந்த காரணத்தால், புதுடில்லியின் ஆஃபர் என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது” என தீபன் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமைச்சர் பா.சிதம்பரம், “ஈழம் கொள்கையை கைவிடுவதாக புலிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் டில்லி மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடும்” என தெரிவித்திருந்தார். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதா என்ற விவாதமும் நடந்தது.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன், விசித்திரமான முடிவு ஒன்றை எடுத்தார். “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்” என்பதே, அந்த முடிவு.

அத்துடன், புதுக்குடியிருப்பில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. இந்த முடிவை டில்லிக்கு தெரிவிக்கும் பொறுப்பு பா.நடேசனிடம் வழங்கப்பட்டது.

நடேசன், தம்முடன் தொடர்பில் இருந்த அமெரிக்கா வாழ் தமிழரிடம் இது குறித்து தெரிவித்தார். அதன்பின், தமிழகத்தில் உள்ள தேசிய கட்சியின் தலைவருக்கும் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா வாழ் தமிழர், டில்லியில் இருந்த அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடியாக பேச முயற்சி செய்தார். அது முடியவில்லை. அமைச்சர் சிதம்பரத்தின் உதவியாளர் (காரைக்குடியை சேர்ந்தவர். முன்னாள் பத்திரிகையாளர்) ஒருவருடன் மட்டுமே பேச முடிந்தது.

ஆனால், தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரால், அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொள்ள முடிந்தது. “ஈழம் கொள்கையை கைவிடுவது தொடர்பான ப்ரபோசலை புதுடில்லியே தயாரித்து கொடுத்தால், புலிகளின் தலைமை அதை பரிசீலிக்க தயார்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் ரகசியமாக தயாரித்தது யார் தெரியுமா? அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்பட தயாரித்தார்.
மிக ரகசியமாக தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை கொடுப்பதற்கு முன், அமைச்சர் சிதம்பரம் விதித்த நிபந்தனை: “இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது”

அமைச்சர் சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணம், முல்லைத்தீவுக்கு போய் சேர்ந்தது. அவரது நிபந்தனையும் பா.நடேசனிடம் தெளிவாக, மிக அழுத்தமாக கூறப்பட்டது.

இந்த விஷயங்கள் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன (தமிழகத்தில் மே மாதம் 13-ம் தேதி நடந்தது. அதே மாதம் 18-ம் தேதி யுத்தமும் முடிந்தது). அப்போது தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை பற்றி சுருக்கமாக சொல்லிவிடலாம்.

அப்போதுதான், இந்தக் கட்டுரையில் நாம் கூறப்போகும் சில விஷயங்கள் புரியும்.

2009 லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில், வைகோவின் ம.தி.மு.க. இணைவதாக இருந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன.

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா, “இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஈழம் அமைத்துக் கொடுப்பது” என அறிவிப்பதாக நிலைப்பாடு எடுத்திருந்தார். வைகோ கொடுத்த ஆலோசனை காரணமாகவே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தார் என்று பின்னர் (தேர்தல் நெருங்கியபோது) பரவலாக நம்பப்பட்டது.

வைகோவும், தமது பேட்டிகளில் ஈழம் அமைப்பது தொடர்பாகவே கருத்து கூறிக்கொண்டு இருந்தார். ஈழத்தமிழரின் சில வெளிநாட்டு மீடியாக்கள் ஜெயலலிதாவை ‘ஈழத்தாய்’ என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருந்தன.

மேலே குறிப்பிட்டதுதான், தமிழகத்தில் இருந்த அரசியல் நிலைமை.

இந்த நிலையில்தான், ப.சிதம்பரம் தயாரித்த ப்ரபோசல், பா.நடேசனின் கைகளுக்கு போனது. புலிகளின் தலைவர் பிரபாகரனிடமும் கொடுக்கப்பட்டது.

“இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது” என்று அமைச்சர் சிதம்பரம் விதித்திருந்த நிபந்தனையை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா, அல்லது தமிழகத்தில் உள்ள தமக்கு தெரிந்தவர்களுக்கு கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் விலாவாரியாக கூறிவிட்டார்.

விபரம் அறிந்த வைகோ கொதித்தார். “இது காங்கிரஸ் கட்சியின் சதி” என்றார்.

“நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்க போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையை கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்” என்றார் வைகோ, நடேசனிடம்.

குழம்பிப் போனார் நடேசன்.

நடேசன் அடுத்து தொடர்பு கொண்டது, பழ.நெடுமாறனை. அவரும் வைகோ சொன்னதையே ரிப்பீட் செய்தார். “காங்கிரஸ் அரசை நம்பவேண்டாம். அவர்கள் எப்படி தந்திரமாக செயல்படுவார்கள் என்பதை முன்னாள் காங்கிரஸ்காரனான நான் நன்றாகவே அறிவேன்” என்றார்.

இவர்கள் இருவரும் சொன்னதை, புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கொண்டுபோய் சேர்த்தார் நடேசன்.

அப்போது, பிரபாகரனுடன் வேறு சில தளபதிகளும் இருந்தனர். சிலர், இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரனும் அதையே நம்பியதாக தெரிகிறது.

சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, அமைச்சர் சிதம்பரம் தயாரித்து கொடுத்த ஆவணத்தை எடுத்துவர சொன்னார். அந்த ஆவணத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பேனாவை எடுத்து அதில் ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.
அமைச்சர் சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.

இந்த ப்ரபோசல் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட தகவல் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசனால், அமெரிக்க தமிழருக்கு சொல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டு போனபோது, அமைச்சர் சிதம்பரத்தின் ப்ரபோசலுக்கு எதிராக வைகோ, மற்றும் நெடுமாறன் கொடுத்த ஆலோசனை விபரம் அவருக்கு தெரியவந்தது.

அவர் இந்த விஷயத்தை உடனே தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு சொல்லவில்லை. இந்த ப்ரபோசலை எப்படியாவது புலிகளின் தலைமை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளில் இறங்கினார்.

“யுத்தம் முடிவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், இது (சிதம்பரத்தின் ப்ரபோசல்) ஒரு கடைசி நேர சந்தர்ப்பம். இதை தவற விடாதீர்கள்” என பா.நடேசனிடமும், புலிகளின் வேறு சில தளபதிகளிடமும் இரு தினங்களாத திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், பலன்தான் பூச்சியம். “மேல்மட்டத்தில் (பிரபாகரன்) முடிவு எடுக்கப்பட்டு விட்டது. இதை விட்டுவிடுங்கள்” என்ற பதிலே கிடைத்தது.

அவர் ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்தார். தமிழகத்தில் உள்ள தேசியக் கட்சி தலைவருக்கு விஷயத்தை சொன்னார். அப்படியே அந்த விஷயம் அமைச்சர் சிதம்பரத்துக்கும் சொல்லப்பட்டது.

இதற்கு அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பதில், அமெரிக்க தமிழருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மூலமாக, பா.நடேசனுக்கும் போய்ச் சேர்ந்தது.

அந்தப் பதில்: “இந்த விஷயத்தில் ரகசியம் காக்கும்படி நான் சொன்ன பின்னரும், தமிழகத்திலுள்ள சிலரிடம் புலிகள் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அது போகட்டும். புலிகளிடம் ஒரு விஷயம் சொல்லுங்கள். அவர்கள் கடைசி சந்தர்ப்பத்தை தவற விடுகிறார்கள்.

தற்போது இலங்கையில் நடக்கும் யுத்தம் பற்றிய விபரங்கள் உங்கள் தமிழக தலைவர்களுக்கு (வைகோ, நெடுமாறன்) தெரியாது. இலங்கை ராணுவத்தின் பலம், அவர்களால் எதுவரை போக முடியும் என்பதும் உங்கள் தமிழக தலைவர்களுக்கு தெரியாது. ஆனால், உளவுத்துறை மூலம் எமக்கு (மத்திய அரசு) தெரியும். இந்த யுத்தம் இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிந்துவிடும். புலிகள் ஜெயிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

புலிகள் இயக்கம் தப்பிப்பதற்கு ஒரே வழி இப்போது யுத்த நிறுத்தம்தான். அதை இந்தியா கொண்டுவர வேண்டுமென்றால் ஒரே வழி, மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஈழம் கோரிக்கையை புலிகள் கைவிட்டார்கள் என்று நாம் (மத்திய அரசு) இலங்கை அரசிடம் சொல்லி கன்வின்ஸ் செய்ய வேண்டும். அதற்கு எம்மிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது.

மத்திய அரசில் உள்ள தமிழன் என்ற முறையில் எனது எல்லைகளை தாண்டி, out-of-the-wayயாக இந்த முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் புலிகள் என்னை நம்புவதைவிட, அவர்களது தமிழக கனெக்ஷன்களை நம்புவதாக தெரிகிறது. நல்லது. எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck.”

அமைச்சர் சிதம்பரத்தின் இந்தப் பதிலை, பா.நடேசனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக்கொண்டார் அமெரிக்க தமிழர். அதன்பின் அவர், புலிகள் தொடர்பான எந்த விஷயத்திலும் தலையிடவில்லை.

இதன்பின் யுத்தம் துரிதகதியில் நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது.

இந்த நிலையில்தான், புலிகள் மீண்டும் இந்தியாவை தொடர்பு கொள்ள முயன்றார்கள். (இதற்கிடையே அமெரிக்க திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையை கைவிட வேண்டும்’ என்ற அளவில் இருந்தது. அமெரிக்க திட்டமோ, ஒரு ஸ்டெப் அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்’ என்ற வகையில் இருந்தது)

பா.நடேசன் மீண்டும் அமெரிக்க தமிழரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் அமெரிக்காவிலேயே இல்லை. தமிழகத்தில் இருந்த தேசியக் கட்சித் தலைவரை தொடர்பு கொண்டபோது அவர், ‘என்னை விட்டுவிடுங்கள். நீங்களே நேரடியாக அமைச்சர் சிதம்பரத்துடன் பேசுங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

பா.நடேசனுக்கு அல்லது, வன்னியில் இருந்த புலிகளுக்கு அமைச்சர் சிதம்பரத்துடன் நேரடி தொடர்பு கிடையாது.

இந்த நிலையில் வன்னியில் இருந்த பிரபாகரனால் தொடர்பு கொள்ளப்பட்டவர்தான், கேபி. அவர் அப்போது மலேசியாவில் இருந்தார்.
இது நடந்தது, 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில். அப்போது புலிகள் மிகமிக சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டு இருந்தார்கள்.

இன்னும் சில தினங்களில் கதை முடிந்துவிடும் என்பது, யுத்த நிலைமை பற்றி விஷயமறிந்தவர்களுக்கு தெரியும். அதற்கு ஒரு வாரத்துக்கு முன், ‘அமெரிக்க திட்டத்தை’யும் பிரபாகரன் நிராகரித்திருந்தார். (அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும், தளபதிகளையும் வெளியேற்றும் அந்த ‘அமெரிக்க திட்ட’ விபரங்களை ‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ என்ற எமது தொடரின் இறுதி அத்தியாயங்கள் வெளியாகும்போது பாருங்கள்)

“இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பாருங்கள்” என்றார் பிரபாகரன் கே.பி.யிடம்.

இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்” என்றார்.

இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது.

கே.பி. தமது முயற்சிகளில் இறங்கினார். அவற்றில் ஒன்று, வெளிநாட்டு தனியார் செக்யூரிட்டி ஆட்களை வாடகைக்கு அமர்த்தி, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரனையும் வேறு ஓரிருவரையும் வெளியேற்றுவது. புலிகளின் வெளிநாட்டு நிதியை வைத்திருந்த நெடியவன், அதற்கு தேவையான பணத்தை (சுமார் 10 லட்சம் டாலர்) கொடுக்க மறுத்துவிட்டார்.

“பணம் இருக்கிறது. ஆனால், காஸ்ட்ரோ உத்தரவிட்டால்தான் பணம் கொடுக்க முடியும்” என்றார் அவர். அப்போது காஸ்ட்ரோவே உயிருடன் இல்லை. “கடைசியாக காஸ்ட்ரோவுடன் எப்போது பேசினீர்கள்?” என்று கேட்டபோது, “10 நாட்களாக அவரிடம் இருந்து போன் வரவில்லை” என்றார் நெடியவன் அப்பாவியாக!

கே.பி.யின் இரண்டாவது முயற்சி, மீண்டும் டில்லியின் கதவை தட்டுவது.

கே.பி. தொடர்புகொண்டது, தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நண்பரை. அவர் மூலமாக மீண்டும் அமைச்சர் சிதம்பரத்திடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் சில முயற்சிகளை செய்ததாக தெரிகிறது. ஆனால், அந்த முயற்சிகளை செய்வதற்கு முன்பே, “எனது முயற்சிகள் பலிப்பது சந்தேகமே. யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி இலங்கை அரசை யாராலும் தடுக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்” என்றார்.

எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

“பா.ஜ.க. ஆட்சி வரட்டும். எல்லாமே ஒரே நாளில் தலைகீழாக மாறும்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார் வை.கோ.

அதுவும் பலிக்கவில்லை.

லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. முடிவு வெளியாகி 48 மணி நேரத்துக்குள் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது.

இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4-ம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த நாள், மே 19-ம் தேதி.

அன்றைய தினத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன், அமைச்சர் ப.சிதம்பரம், “எனது முயற்சிக்கு எதிராக ஆலோசனை கொடுத்த உங்கள் தமிழக தலைவர்களால் (வைகோ, நெடுமாறன்) பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தையும், காப்பாற்ற முடிந்தால், எனக்கும் சந்தோஷம்தான். Good luck” என்று கூறியிருந்தார்.

அவர் கூறியது பலித்ததா? ஒரு விதத்தில் பலித்தது!!

வைகோவும், நெடுமாறனும் புலிகள் இயக்கத்தையும் காப்பாற்றி, பிரபாகரனையும் இன்றுவரை உயிருடன் வைத்திருக்கிறார்கள்… தமது அறிக்கைகளில்! (முற்றும்)

No comments:

Post a Comment