Follow by Email

Thursday, 2 May 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள் – 10


ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குத் தனது ஆதரவாளர்களுடன் செல்லப்போவதாக பழ நெடுமாறன் அறிவித்தபோது, மத்திய அரசின் உத்தரவுப்படி ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இருந்த பெரிய, சிறிய படகுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிடும்படி உத்தரவிட்டது தமிழக அரசு.

“எம் ஜி ஆர் படகுகளை அப்புறப்படுத்தி விட்டார். அவருக்குத் தமிழனைப் பற்றிய கவலை இல்லை” என்றார் கலைஞர் கருணாநிதி.

படகுகளை அப்புறப்படுத்திய விவகாரம் பற்றிக் கலந்தாலோசிக்க சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டினார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அந்த மாநாட்டுக்குச் செல்லாமல் தி.மு.க. புறக்கணித்தது.

இந்த நிலையில் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அ.அமிர்தலிங்கம் கொழும்புவிலிருந்து சென்னை வரப் போவதாக அறிவித்தார். ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை வருவதாக தெரிவித்திருந்தார்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுபற்றிப் பேசப்போவதாக அறிவித்து விட்டுத்தான் சென்னை வந்தார் அவர்.

சென்னை முழுவதிலும், “நாவலரே வருக” என்று போஸ்டர் அடித்து ஒட்டியது தி.மு.க.

பலருக்கு குழப்பம். ஒருவேளை நாவலர் நெடுஞ்செழியன் அ.தி.மு.க.-வில் இருந்து தி.மு.க.வுக்கு வருகிறாரோ என்று பரபரப்பு. அப்புறம்தான் தெரிந்தது, யாழ்ப்பாணத்தின் பிரபலமான ‘ஆறுமுக நாவலர்’ என்ற பெயரில் அமிர்தலிங்கத்தை விழித்து போஸ்டர் அடித்திருந்தார் கலைஞர் என்பது!

சென்னையில் அஅமிர்தலிங்கத்தை வரவேற்று அழைத்துச் செல்ல, கலைஞர், எம் ஜி ஆர் இருவரும் வாகனம் அனுப்பியதில், அமிர்தலிங்கம் எம்.ஜி.ஆர் அனுப்பிய காரில் ஏறிச் சென்றுவிட, கலைஞர் கோபமடைந்தார். உடனே அவர் ஒரு அறிக்கை விட்டார்.

“அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு கட்சி அலுவலாக நான் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது ஏற்கனவே போடப்பட்ட திட்டம். மாற்ற முடியாது. இதனால் நான் நான்கு நாட்கள் சென்னையில் இருக்க மாட்டேன். எனவே இந்தியா வந்திருக்கும் அமிர்தலிங்கத்தை என்னால் சந்திக்க முடியாது” என்பது கலைஞரின் அறிக்கை (முரசொலி)

டெல்லியினால் பேச்சுக்களுக்கு கொழும்பு வரை அனுப்பப்பட்ட ஜி.பார்த்தசாரதி இந்தியா திரும்பியபோது “அவரது கொழும்பு விஜயம் மகத்தான தோல்வி” என்று அறிவித்தார் கலைஞர்.  “மகத்தான வெற்றி” என்றார் எம்.ஜி.ஆர்.

சென்னையில் டெலோ இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவப் படங்களைத் திறந்து வைத்தார் கலைஞர் கருணாநிதி (ஆகஸ்ட் 29)

உடனே எம்.ஜி.ஆர், குட்டிமணியின் குடும்பத்தினருக்கு (சகோதரர், சகோதரி ஆகியோர் மண்டபம் முகாமில் இருந்தார்கள்) 2 லட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்றை தமிழக அரசின் சார்பாகக் கொடுப்பதாக அறிவித்தார்.


முந்தைய பதிவுகளை படிக்க 



தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு

No comments:

Post a Comment