Follow by Email

Sunday, 28 April 2013

போர் முடிவடைந்து இருக்கலாம் ஆனால் தனித் தமிழ் நாடு அமைக்கும் எண்ணம் ஸ்ரீலங்காவில் மடிந்துவிடவில்லை(ஒரு சுற்றுலாப்பயணியின் மாறுவேடத்தில் ரேவதி லாவுல்,நாடு முழுவதும், பெரும்பாலும் போரினால் சீரழிந்த மாவட்டங்கள் தோறும், பிரயாணம் செய்துள்ளார். அபூர்வமாக  சொல்லக்கூடிய ஒரு கதையினை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார்)

2011ல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை என்கிற ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது. அது சுயாதீனமானது என்று கருதப்பட்டாலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. 

ஜூலை 2006 முதல் மே 2009 வரை 5,556 பேர்களை பாதுகாப்பு படை இழந்துள்ளதாகவும் மற்றும் 28,414 பேர்கள் காயமடைந்ததாகவும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

மறுபக்கத்தில் எல்.ரீ.ரீ.ஈ  அதன் அங்கத்தவர்களில் 22,247 பேர்களை இழந்துள்ளதாக கூறியுள்ளது. 

பொஸ்னியன் யுத்தத்தில் கொள்கையளவிலான விகிதாச்சாரம் மற்றும் யுத்தக் குற்றங்கள்  பற்றி கண்ட சம்பவங்கள், என்பனவற்றை மேற்கோள் காட்டிப் பேசி, ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களுக்கான பழி ஒரு ஒப்புமையான கேள்வி என்று சுட்டிக்காட்ட முயற்சிக்கிறது.

ஸ்ரீலங்காவாசிகளிடையே சாகாமல் பிழைத்திருந்தவர்களை தெகெல்க்கா சந்தித்தபோது, ஒருவேளை முகம் கொடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது 

யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்கள் காணாமல் போய்விட்டது என்று கூறியவர்களை சந்திப்பதுதான்.

போரைப்பற்றிய மேலதிக புள்ளிவிபரங்கள் மற்றும் விவரணங்கள் காணாமல் போனவர்கள் பற்றிய விடயத்துக்கு வரும்போது மிகவும் முரண்பாடானவையாக உள்ளன. 

உதாரணமாக ஒரு பாதிரியார்கள் குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வடக்கின் இரண்டு மாவட்டங்களிலிருந்தும் யத்தத்தின் இறுதியில் ஒன்று கூடியவர்களில் பெரும்பாலும் காணாமற்போன தமிழர்களின் தொகை 1,46,679 என்று குறிப்பிடுகிறது. 

அவர்கள் அரசாங்கத்தின் தரவுகளிலிருந்து அக்டோபர்  2008 மற்றும் மே 2009 வரை நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புகளை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இராணுவ பேச்சாளர் இந்த எண்ணிக்கைகளை குப்பை எனக்கூறியுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 

அவர் கண்டிருப்பது அரசாங்க பாடசாலை ஆசிரியர்களாலும் மற்றும் கிராம மட்டத்திலுள்ள அதிகாரிகளினாலும் தொகுக்கப்பட்ட அறிக்கையை. 

இந்த அறிக்கை வடக்கிலுள்ள நான்கு மாவட்டங்களிலும் 2005 முதல் 2009 வரை காணாமற்போனவர்களாக குறிப்பிடுவது 4,156 பேர்களை.

எந்தப் புள்ளிவிபரமும் பொன்னம்மா கந்தசாமி மற்றும் அவருடைய கணவருக்கு ஆறதலளிக்கவில்லை. அவர்கள் தங்கள் மகள், மருமகன் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகள் ஆகியவர்களை தேடுகிறார்கள். 

அவர்கள் அனைவருமே காணாமற் போய்விட்டார்கள். அவர்களின் மருமகன் ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர், போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் அணியில் அவரும் இருந்தார். 

அதன்பின் அவர்கள் பொன்னம்மாவையும் அவளது கணவனையும் நிரந்தரமாக தவிக்கவிட்டு ஒரு வெளியினுள் மறைந்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவில் ஒரு அங்கத்தவராக இருந்த  பவானியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரும் சரணடைந்தார். 

அவரைக் கண்டுபிடிக்க பவானி அப்போது முதல் முயற்சித்து வருகிறாள், தனது வாழ்வில் தனக்கு வேண்டியதெல்லாம் தனது கணவரை காண்பதே என்கிறாள் அவள்.

தமிழர்களின் காணாமற்போன உறவுகளை கண்டுபிடிப்பதற்காக ஆர்வத்துடன் பாடுபடும் ஒரு பாதிரியார் கூறுகையில், பவானியைப் போன்ற பெண்களின் கதி இருள் நிறைந்ததாகவே உள்ளது என்றார். 

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன, கதவருகில் உட்கார்ந்தபடி முடிவில்லாமல் காத்திருக்க முடியாது, அவரது முயற்சி அவர்களை மெதுவாக அதிலிருந்து திருப்புவதுதான். 

அவர்கள் வேலை செய்ய முயற்சிப்பதுடன் இன்னமும் உயிரோடிருக்கும் அவர்களது பிள்ளைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கத்தோலிக்க மதகுருக்கள் அவர்களது தேவாலயங்கள் நடுவிலிருந்து இரண்டாக பிளந்துவிட்டது போன்ற நிலைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். 

பாதிக்கப்பட்ட கத்தோலிக்க தமிழர்கள் ஒருபக்கம். மற்றும் சிங்கள கத்தோலிக்கர்கள் மறுபுறம் - அவர்கள் வெற்றியாளர்களான ஏனைய சிங்களவர்களின் பின்னால் தங்களை அணிசேர்த்துள்ளார்கள்.

மற்றொரு மதகுரு தனது பங்கிலுள்ளவர்களில எத்தனைபேர் தங்கள் மனநிலையை இழந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தினார். 

ஒரு குடும்பத்தின் கதை குறிப்பாக உள்ளத்தை உறையவைக்கும். 

ஒரு தம்பதியர் தங்களின் இரண்டு இளம் பெண்பிள்ளைகளும் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் அகப்பட்டு செத்துக்கொண்டிருப்பதை கண்ணால் கண்ட அதேவேளை அவர்களின் மூன்றாவது பிள்ளையான அவாகளின் மகன் தனது இரண்டு கரங்களையும் இழந்திருந்தான். 

இரண்டு மகள்களும் இறந்துகிடந்த வேளை மகனது கைகளில் இருந்து  இரத்தம் வழிவதை கண்ட தந்தை பைத்தியமானார். 

இந்த நிலமையை சமாளிக்க முடியாதவராய் அவர்; வட்டமாகச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார். 

உடனடியாக அந்தப் பையன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அவனுக்கு இரண்டு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன,மற்றும் இப்போது அவன் கணணிப் பயிற்சி பயின்று வருகிறான்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இறங்கியுள்ள மதகுருக்கள், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே நடக்கிறார்கள். பயணம் செய்யும் வேளைகளில் அவர்கள் வேறு வேறு பாதைகளைப் பயன்படுத்துகிறார்கள். 

புலனாய்வு பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியாக கிடைக்கப் பெறும் அழைப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய அழைப்பு வரலாற்றை தங்கள் செல்லிடப் பேசிகளில் இருந்து அடிக்கடி அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல தமிழ் ஊடகங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. ஏப்ரல் 3ந் திகதி விடிகாலை கிளிநொச்சி உதயன் தினசரியின் அலுவலக மேலாளர் முதற் தொகுதி தினசரிகளை விநியோகத்துக்கு தயாராகி கொண்டிருக்கையில், முகமூடி அணிந்த ஆறு குண்டர்கள் கிரிக்கட் பொல்லுகளால் அவரை 17 தடவை அடித்துள்ளார்கள். 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகம் இதற்கு சில நாட்களுக்கு முன்பு முகமூடி அணிந்த குண்டர்களால் இதேபோல தாக்கப்பட்டது. 

வழமையான நிலமைகளின்கீழ் நடைபெறும் இந்த தொடர் தாக்குதல்கள் முற்றிலும் தொடர்பற்றவையாக உள்ளன. தமிழர்கள் இப்போது வாழும் காலங்களில் எல்லா தாக்குதல்களும் ஓரிடத்தை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன - 

சிங்கள கும்பல்கள் அடக்கியாளும் அதிகாரத்தை வலியுறுத்த முயல்கிறார்கள்.

லிபரல் கட்சியின் தலைவர் விஜேசிங்கா இந்த சில்லறை கும்பல்களின் செயற்பாடுகள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்கிறார். 

பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதை விரும்புகிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார். எனினும் அரசாங்கத்துக்குள்ளிருக்கும் சில கெட்ட சக்திகள் அதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றன.

இந்த வகையான தோற்றங்கள்தான் அநேகமாக எல்.ரீ.ரீ.ஈ  தோன்றுவதற்கு வழி நடத்திய தமிழர்கள் ஒடுக்குமுறை வரலாற்றை அகற்றுகின்றன. 

அதன் கண்ணோட்டத்தில் அவைகளை ஒரு பிறழ்ச்சியாக வர்ணம் தீட்டுகின்றன 1980களில் பயங்கரவாதம் திடீரென எங்கிருந்தோ தோன்றயது போல காட்டுகின்றன. 

எனினும் நாங்கள் சந்தித்த ஒவ்வொரு தமிழனும் சொல்லுவதற்கு இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை உள்ளது. 

நீங்கள் ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு தமிழனாகவும் மற்றும் 1980 மற்றும் 90களில் இங்கு வாழ்ந்தவராகவும் இருந்தால் ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவராகவோ அல்லது அதன் ஆதரவாளராகவோ இருந்திருப்பீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அநியாயத்தின் கூட்டான நினைவுகள்தான் சுவேந்திரனை (பெயர் மாற்றப்பட்;டுள்ளது) 1991ல் எல்.ரீ.ரீ.ஈ  யில் இணைய வைத்தது. 

இப்போது மிதிவெடிகள் புதைத்ததினால் தனது ஒரு காலை இழந்த நிலையில் அவர் உள்ளார். சரணடைந்த பின்னர் சொல்வதற்கோ அல்லது உணர்வதற்கோ அவரிடம் ஒன்றுமில்லை. 

அவரைப்போலவே அவரது தோழருக்கும் எல்.ரீ.ரீ.ஈ  யில் இணைவதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான தூண்டதல் எதுவும் கிடையாது. 

அதைத்தான் 1990களில் தமிழர்கள் செய்தார்கள். அவரும் காயம்பட்ட ஒரு காலுள்ளவராவார். வடக்கு முழுவதும் அவயங்களை இழந்த மனிதர்களும் மற்றும் வாழ ஆசையற்றவர்களும் நிறைந்துள்ளார்கள்.

திவாகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்போது அவருக்கு வயது 15. தமிழ இளைஞர்களின் புதிய ஆரம்பம் தோன்றும் சாத்தியம் நிறைந்திருந்த காலநிலை அப்போது நிலவியது. 

அங்கு அவர் தனது இயக்கத்திலிருந்த சக பெண் தோழிமீது காதல் கொண்டார். “ஆண்களும் மற்றும் பெண்களும் வெவ்வேறு  முகாம்களில் இருந்ததால் நாங்கள் இரகசியமாகவே சந்திக்க வேண்டியிருந்தது. 

அது ஒரு விதமான காதல் ஒரு ஐஸ்கிறீமை ஒருமித்து பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே செலவழிப்போம”; 

அவர் தனது நினைவுகளை மீட்டிப்பார்த்தார். பல எல்.ரீ.ரீ.ஈ   காதல்களைப்போல அவர்கள் காதலும் நிலைக்கவில்லை. 

திவாகர் 2005ல் எல்.ரீ.ரீ.ஈ  யினை விட்டு விலகினார், ஆனால் அவரது காதலி அவர்களுடனேயே இருந்தாள். 

யுத்தத்துக்கு பின் அவருக்கு ஒழுங்கான மத்தியதர வேலை ஒன்று உள்ளது, ஆனால் தான் கண்டவற்றையும் மற்றும் அனுபவித்தவைகளையும் பற்றி அவர் மௌனம் பாலிக்க வேண்டியுள்ளது. 

சரணடைந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவரானபடியால் அவரது நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப் படுவதால் அவர் அச்சத்துடனேயே வாழ்கிறார்.

யுத்தத்தின் கடைசி நாட்கள் தப்பியோடும் தமிழர்கள் - புலிகள் மற்றும் பொதுமக்கள் - மனங்களில் கோரமான நினைவுகள் உறுதியாக பதிக்கப்பட்டிருக்கும். 

இந்திரகுமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்.ரீ.ரீ.ஈ யின் பிரச்சாரப் பிரிவில் இருந்ததுடன்  அவரும் அவரது குடும்பத்தினரும் ஓடிக்கொண்டிருந்த வேளையிலும் போரின் முடிவுவரை தொடர்ந்து பணியாற்றியும் வந்தார். 

அப்படியான ஒரு தாக்குதல் சம்பவம் 2007 ஆகஸ்டில் நடந்தது, 13 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் அநேகமானவர்கள் காயமடைந்தார்கள். 

அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் கிடைக்கவில்லை. இரண்டு இரத்தம் வடியும் சிறார்களை தனது மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு 16 கி.மீ தொலைவிலுள்ள வைத்தியசாலைக்கு ஓடியது இந்திரகுமாருக்கு இன்னும் நினைவிலுள்ளது. 

தன்னால் இயன்றவரை வேகமாக அவர் மிதிவண்டியை ஓட்டியபோதிலும், ஒரு குழந்தையின் தலை சாய்வதை அவர் கண்டார். இருவருமே உயிர் பிழைக்கவில்லை.

முன்னாள் யுத்த நாட்டில், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர்களை ஆட்டிவைக்கும் திகில்களிலிருந்து  அவர்களை விடுவிக்க தெகல்கா முயற்சித்தது. 

ஒரு கட்டத்தில் இராணுவத்தால் நாங்கள் துரத்தப்பட்டபோது, திவாகரின் முகம் வெளுத்துப் போனது. அவர் வெகு நேரம் மௌனமாக இருந்தபின் தன்னை மறந்து “அரசாங்கம் அதன் அட்டூழியங்களுக்கு சாட்சியாக இருந்த யாவற்றையும் துடைத்து அழித்துவிட்டது” என்றார்.

எங்களுடன் கடைசியாக பகிர்ந்து கொள்ள இந்திரகுமாருக்கு ஒரு பயங்கர சம்பவம் மீதமாக இருந்தது. தாக்குதல் நடக்கும் ஒரு இடத்திலிருந்து பாதுகாப்பு தேடி மற்றொரு இடத்துக்கு ஓடும்போது அந்த இடம் போர்நடக்கும் புதிய களமாக மாறும்.

திரும்பவும் அவர் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் வேறு இடம் நோக்கி ஓடுவார். 

இந்த ஓட்டத்தினிடையே அவரது 9 மாத குழந்தை இறந்துபோனது. அது ஏப்ரல் 9ந்திகதி தமிழ் புதுவருட தினம். 

அந்த பையன தீவிரமான நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தான். மருந்து எதுவும் கிடைக்கவில்லை, எல்.ரீ.ரீ.ஈ யினை அழிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் வகுத்திருந்த வியுகம் காரணமாகவே மருந்து கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

2011ம் ஆண்டின் ஐநா அறிக்கையும் இதுபோன்ற சம்பவங்களை எடுத்துக்கூறுகிறது, அனால் இந்த கோரிக்கையை சுதந்திரமாக ஆராய தெகல்;காவுக்கு எந்த வழியும் இருக்கவில்லை. 

எந்த வழியிலும் மறுக்க முடியாததாக இருந்தது இந்திரகுமாரின் மகன் இறந்துபோனது. இந்தக் கட்டத்தில் அவரும் அவருடைய மனைவியும் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்கள். 

அது அவர்கள் வந்து சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் நிறைந்திருந்து முகாமுக்கு வந்பொழுது எடுத்த முடிவு. திடீரென அவர்கள் கடல் போன்ற திகிலுக்கு ஆளானார்கள். 

அங்கிருந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளையை பறிகொடுத்திருந்தார்கள். 

இந்த கோரம், சகோதர உணர்வை அவர்களிடத்தில் கொண்டுவந்தது, அதன் காரணமாக அவரும் அவரது மனைவியும் இன்னும் உயிரோடிருக்கிறார்கள்.

தமிழ் பிரதேசத்தில்  எல்லோருமே பிரபாகரனாலும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினாலும் சமமாக பாதிக்கப்படவில்லை, 

அதிலும் விசேடமாக கிளிநொச்சியிலுள்ள திருநீலகண்டன சரோஜாவை போன்றவர்கள் அந்த கூட்டத்தில் இருக்கமாட்டார்கள். 

ஒரு சிறிய குடிசையில் மங்கலான சிமினி விளக்கு வெளிச்சத்தில் எப்படி தனது 22வயது மகனை  வலுக்கட்டாயமாக ஒரு எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவனாக்குவதற்காக எப்படி பிடித்துச் சென்றார்கள் என்பதை சரோஜா கசப்புடன் சொன்னார். 

அவனை இப்போது காணவில்லை.”நாங்கள் எங்கள் வாய்களை மூடிக்கொண்டு வாழ்கிறோம்” என கோபத்துடன் சொன்னார். 

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் எல்.ரீ.ரீ.ஈ  மற்றும் அவரது மகனின் மறைவு என்பன மௌனமாக்கப்பட்டு விட்டன. ஆனால் அவரது தனிப்பட்ட கோபம் தமிழர்களின் கூட்டான சீற்றம் எனும் பெருங்கடலினுள் ஆழ்ந்துள்ளது. 

எல்லாவற்றையும் மீறி ஒரு தனித் தமிழ்நாட்டு விடயத்தை தான் ஆதரிப்பதாக முரண்பாடான வகையில் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அடக்குமுறைகளையும் மற்றும் பயங்கரவாதத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருங்கடல் அது, அரசாங்கத்தால் அதை அழிக்க இயலாது. 

போர் முடிவடைந்த உடனேயே வடக்கிலுள்ள மாகாணசபைகளுக்கு நிருவாக அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக ஒரு சுயாட்சியை ஏற்படுத்தி, தமிழர்களுக்கு ஒரு அரசியல் சமரசத்தை தான் ஏற்படுத்தப்போவதாக ராஜபக்ஸ அறிவித்திருந்தார். 

அந்தச் செய்தி இந்தியாவை கொண்டாட வைத்தது, மற்றும் தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா ஸ்ரீலங்காமீது அழுத்தம் பியோகித்துள்ளதாக அனைத்து அரசியற் கட்சிகளுக்கும அறிவிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் பகிரங்கமாக தனது வாக்கை மீறினார்.

சுதந்திர தினத்தன்று (பெப்ரவரி 4,2013ல்) மக்களுக்கு உரையாற்றும் வேளையில், ஸ்ரீலங்கா  இன,மத. வேற்றுமைகளற்ற ஒரு நாடு, எனவே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களுக்கு பெரியளவிலான சுயாட்சி  அவசியமற்றது என்று பேசியதன் மூலம் அந்த வாக்குறுதியை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். 

அந்தப் பேச்சு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டிலுள்ள திருகோணமலையிலிருந்து வெளியிடப்பட்டதால், அதன் அர்த்தம் வெகு தெளிவாக இருந்தது.

காசா நிலப்பரப்பில் வாழும் பலஸ்தீனியர்களைப் போலவே தமிழர்களுக்கும் சொந்தமாக ஒரு நாடு இல்லை. தமிழ் ஆர்வலர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறுவது, முழு உலகமும், மற்றும் குறிப்பாக இந்தியாவும் உட்கார்ந்து இதில் கவனம் செலுத்துவதற்கு ஒரு காரணம் உள்ளது என்று. 

குருபரன் போன்ற ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவது, தமிழர்களின் இக்கட்டான நிலையை உலகெங்கிலுமுள்ள பல இன குழுக்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. அவர்களின் ஒரே நம்பிக்கை தமிழ் புலம் பெயர்ந்த சமூகத்தால் வழங்கப்படும் ஆதரவில் உயிர் வாழ்வது.

தமிழ் புலம் பெயர்ந்த சமூகம் மிகவும் பெரியது, நல்ல நிதி வளத்துடன் ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற இடங்களில் பரந்து வியாபித்துள்ளது. 

அதிகமான பரப்புரைகள், மற்றும் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிதேடி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதின் பெரும்பகுதி இதன் மூலமாகவே ஆற்றப்படுகிறது. 

அவர்கள் இப்போது கூறுவது, தங்களின் நீண்டகால நோக்கம், சர்வதேச சமூகத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து ஸ்ரீலங்காவின் பிரதேசத்தின் ஒரு பகுதியை தமிழர்களுக்காக செதுக்கி அதனை சர்வதேசரீதியில் நிர்வகிப்பதற்காக ஸ்ரீலங்காவை வற்புறுத்துவது என்று.

எவ்வாறு கிழக்கு திமோர் 2002ல் ஐநாவின் தலையீட்டினால் இந்தோனசியாவிலிருந்து பிரிந்து திமோர் லெஸ்ட் ஆனதோ, இதுவும் அதேபோலத்தான். இந்த தலையீடு கிழக்கு தீமோர் மேற்கொண்ட இடைவிடாத பரப்புரை மூலமாகவும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் விளைவினாலுமே ஏற்பட்டது. 

இந்தப் பகுதி இறுதியாக ஒரு சுதந்திரமான அரசாங்கததிடம் கையளிக்கப்படும்வரை 1999 முதல் 2012 வரை ஐநாவின் நிருவாகத்தின் கீழ் இருந்தது. 

தமிழர்கள் இப்போது அதேபோன்ற பதிப்பு மூலம் உண்மையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். தரப்படும் வன்முறையின் வரலாறு மற்றும் உடைந்த வாக்குறுதிகள் எனபனவற்றை பார்க்கும்போது நல்லிணக்கம் ஒரு சரியான தெரிவல்ல என பலரும் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வது நம்பிக்கையின் சாளரம் இப்போது இரண்டில் தங்கியுள்ளது, 

இந்தியா மற்றும் அமெரிக்கா - இந்த இரண்டு நாடுகளும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது நெருக்கத்தை சீனாவுடனும் மற்றும் பாகிஸ்தானுடனும் அதிகரித்துக் கொண்டுள்ளதால் அச்சமடைந்துள்ளன. 

இந்தியாவுக்கு அதன் தென்பகுதி கடலோரத்திலிருந்து 5 கி.மீற்றருக்கும் குறைவான தூரத்தில் பாகிஸ்தானும் மற்றும் சீனாவும் இருப்பதை இந்தியா விரும்புகிறதா என அவர்கள் கேட்கிறார்கள். 

மற்றும் அமெரிக்காவும் இதேபோன்ற அச்சம் காரணமாக தங்கள் விடயத்தில் பின்துணை நல்கும் என அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு இதுதான் அவர்களின் ஒரே துணையாதாரம்.

முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் “ எது சாத்தியம் என்று நாங்கள் யோசிப்பது எங்களுக்கு ஆபத்தானது. 

நாங்கள் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தால் அதன் அர்த்தம் வெறும் உட்கிரகித்தலாக மட்டுமே இருக்கும். 

நாங்கள் தமிழை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும், நாங்கள் எங்கள் மதத்தையும் விட்டுவிட வேண்டும் நாங்கள் சிங்கள பௌத்தர்களாக மாறவேண்டும்” என்று வெகு சாதாரணமாக சொல்கிறார்.

பூகோள மற்றும் உள்நாட்டு தமிழ் அரசியல் இந்தியாவை மேலும் மேலும் நேரடியாகத் தாக்குகிறது. 

ஸ்ரீலங்கா தமிழர்களின் கதை ஒரு சங்கடமான கேள்வியை எழுப்புகிறது, ஒரு மக்களின் நம்பிக்கையற்ற மற்றும் தொடரும் நிர்க்கதியான நிலையை பயங்கரவாதத்தால் மட்டுமே ஏற்பட்டது, என்று விளக்கமளித்து தள்ளிவிட முடியுமா? 

இப்போது ஸ்ரீலங்காவில் 22 லட்சம் தமிழர்களும் மற்றும் 10 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரும் இந்த உலகளாவிய சிக்கல் நிறைந்த கேள்வியை கேட்கிறார்கள். 

அவர்களது கதையும் அவர்களைப்போல நாடற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்குகிறது. 

ஐநாவும,; உலகமும் இரட்டை வேடம் போடும் இந்த வேளையில் நாட்டைப்பற்றிய உங்கள் எண்ணம் அடுத்ததாக மறையக்கூடியதாக இருக்கும். 

ஆனால் பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை என்பனவற்றின் பின்விளைவாக உருவான ஒரு நாடு என்கிற தமிழர்களின் எண்ணம் ஒருபோதும் மறையாது. 

இந்தியா தனது வாசற்படியின் முன் மற்றொரு வன்முறை வட்டம் உருவாவதை விரும்பாவிட்டாலும்கூட  லங்கன் தமிழர்களின் குரலை அதனால் அலட்சியப்படுத்த முடியாது.

தெகல்கா சஞ்சிகையின் 27,ஏப்ரல் 2013ல் வெளியான 10 வது தொகுதி வெளியீட்டில் இந்தக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்


No comments:

Post a Comment