Follow by Email

Tuesday, 30 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-9


டக்ளஸ் தேவானந்தா, தமது ராணுவப் பிரிவு ஆட்களிடம், அமெரிக்கர்களான அலன் தம்பதிகளை உடனடியான விடுவிக்கும்படி கூற, ஒருவழியாகத் தகவல் போய், யாழ்ப்பாணம் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் அலன் தம்பதியினர் சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்கள் கிளம்பிச் செல்லும்போது கூறியது -

“எங்களைக் கடத்தியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல – விடுதலைப் போராளிகள்.  பயங்கரவாதிகள் என்றால் எங்களைக் கொன்றிருப்பார்களே”

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கர்களான அலன் தம்பதியினரைக் கடத்திச் சென்றதும், பின்னர் இந்திய அழுத்தத்தால் அவர்களை விடுதலை செய்ததும், தமிழகத்தில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பெரியதொரு அரசில் சறுக்கலை கொடுத்தது.

அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கொதித்துக் கொண்டிருந்தார்.  அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் கியூ பிராஞ்ச் அவருக்குக் கொடுத்திருந்த எச்சரிக்கை.

“ஈழ விடுதலை இயக்கங்களின் போக்கு சரியில்லை. இவர்கள் தமிழகத்தில் இருந்துகொண்டு இதே பாணியில் செயல்பட்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசில் இருந்து அதிக சிக்கல்கள் வரலாம்” என்று மோகன்தாசால், எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் தாங்கள் கடத்திச் சென்றவர்களுக்கான பணயத் தொகையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததை மோகன்தாஸ் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக்காட்டி, “இந்தக் கடத்திலின் பின்னணியில் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு இருக்கலாம் அல்லது, குறைந்த பட்சம் தமிழக அரசின் ஆசியாவது இந்தக் கடத்தலுக்கு இருக்கலாம் என்று மத்திய அரசு குற்றம்சாட்ட முடியும்” என்றார்.

“அதை காரணமாக வைத்து மத்திய அரசு தமிழக அரசை ஆட்சிக் கலைப்புக்கூடச் செய்யலாம்” என்றும் உஷார் படுத்தினார்.

உண்மையில், தமிழகத்தில் அந்த காலப் பகுதியில் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் டில்லியில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.  அது எம்.ஜி.ஆருக்கும் நன்றாகத் தெரியும்.

ஆட்சிக் கலைப்பு முயற்சிக்கு டில்லியில் அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது தி.மு.க.

இந்த இடத்தில்தான் தமிழக அரசியலில் ஈழத் தமிழர்களை வைத்து நடந்து வந்த தமிழக அரசியல், முதல் தடவையாக ஒரு யூ-டர்ன் அடித்தது.

தெரிந்தோ, தெரியாமலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் அதற்குக் காரணமாகப் போய்விட்டது.

இப்படிச் சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதியினரின் கடத்தல் விவகாரத்துக்கு முன்பும், பின்பும் தமிழகத்தில் இருந்த உள்ளூர் அரசியல் நிலைமைகளையும், உள்ளூர் தலைவர்களின் பேச்சுக்களையும் பார்த்தாலே புரிந்துவிடும் – நிலைமை எப்படி மாறியது என்று.

அலன் தம்பதியினரின் கடத்தலுக்கு முன்னர் அரசியலில் இரு துருவங்களான எம்.ஜி.ஆரும், கலைஞரும், “ஈழத் தமிழருக்கு அவர் செய்வது போதாது.  நான்தான் அதிகம் செய்திருக்கிறேன்” என்று கூறியே அரசியல் செய்து கொண்டிருந்தார்கள்.

“கருணாநிதி தனக்குத் தானே தமிழின தலைவர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார். ஆனால் அவரோ, அவரது கட்சியான தி.மு.க.வோ ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்வதில்லை” என்று பேட்டி கொடுத்தார் எம்.ஜி.ஆர். (தினமணி)

“எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.  அதற்காக ஈழத்தமிழர்களுக்காக அவர் கவலைப்படுவதாக நடிக்க வேண்டுமா?

நண்பர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில், அவரது சண்டைக் காட்சிகள் தான் பெயர் வாங்கிக் கொடுக்கும். சோகக் காட்சிகளில் அவரது நடிப்பு எடுபடுவதில்லை. அதுபோலவே முதல்வராக இருந்தபடி ஈழத்தமிழருக்காகக் கவலைப்படுவது போல நடிப்பது சோபை இழந்து காட்சிதருகிறது” என்று கிண்டலாக எழுதினார் கலைஞர். (முரசொலி)

ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குத் தனது ஆதரவாளர்களுடன் செல்லப்போவதாக பழ நெடுமாறன் அறிவித்தபோது, மத்திய அரசின் உத்தரவுப்படி ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் இருந்த பெரிய, சிறிய படகுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிடும்படி உத்தரவிட்டது தமிழக அரசு.


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு


No comments:

Post a Comment