Follow by Email

Friday, 26 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-6

முந்தைய பதிவுகளை படிக்க

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள் 1
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-2
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-3
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-4
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்-5ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் பத்மநாபா உட்பட்ட தலைவர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்து கடுமையான தொனியில் விசாரித்துக் கொண்டிருந்த, தமிழக உளவுப் பிரிவின் அந்த நாளைய தலைவர் மோகன்தாஸூக்கு மற்றொரு சிக்கலும் இருந்தது என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அது என்னவென்றால், அலன் தம்பதியினரின் கடத்தல் விவகாரத்தை முழுமையாக டீல் பண்ணி, அவர்களை விடுவிக்கும் முழுக் காரியத்தையும் தமிழக காவல்துறை கியூ பிராஞ்ச்தான் செய்ய வேண்டும் என்று மோகன்தாஸ் விரும்பினார்.

முதல்வர் எம்.ஜி.ஆரும் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது என்று உறுதிமொழி கொடுத்திருந்ததில், இந்த விவகாரத்தை தானே தீர்த்துவைத்து, பெயரை தட்டிக் கொண்டுபோவது அவரது திட்டம்.

ஆனால் அதற்கு இடையூறு, டில்லியில் இருந்து வந்தது.

விஷயம் வெளிநாட்டவர்களுடன் சம்மந்தப்பட்டது என்ற வகையில், மத்திய உளவுத்துறை ‘ரா’ களத்தில் குதிக்க விரும்பியது.  மற்றொரு மத்திய உளவுத்துறை ஐ.பி.-யும் தன்பங்குக்கு தலையிட விரும்பியது.

இது மோகன்தாசுக்கு மகா எரிச்சலை ஏற்படுத்தியது.

பத்மநாபா உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை மோகன்தாஸ் தனது அலுவலகத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்க, டெல்லியில் இருந்து ‘ரா’ அலுவலகம், ‘ஐ.பி.’ அலுவலகம் இரண்டுமே, உயர் மட்ட போன் அழைப்புக்களை மோகன்தாஸின் அலுவலகத்துக்குச் செய்யத் தொடங்கின.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மோகன்தாஸ் “என்னை என்னுடைய வேலையைச் செய்ய விடுங்கள். எனக்குச் சம்பளம் கொடுப்பது தமிழக அரசு. விசாரணையும் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது” என்று எகிறத் தொடங்க, போனின், மறுமுனையில் இருந்த ரா உயரதிகாரி, இவருக்கு மேலாக எகிற தொடங்கினார். (தமாஷ் என்னவென்றால், இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள்)

“பிரதமரின் அலுவலகத்தில் இருந்து யாரையாவது உங்களுடன் பேசச் சொல்லவா? ஜனாதிபதியிடம் இருந்து கடிதம் வேண்டுமா? இது வெளிநாட்டு விஷயம். மாநில போலீஸ் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்று முறைத்தார் ரா உயரதிகாரி.

இப்படியெல்லாம் நடைபெறும் என்பதை மோகன்தாஸ் ஊகித்திருந்தார் என்பதை, பின்நாட்களில் ஒரு தடவை அவரை சந்தித்தபோது சொன்னார்.

இந்த விவகாரம் நடந்து பல ஆண்டுகளின்பின் நான் அவரை பாங்காக்கில் சந்தித்தபோது அவர், ஒரு கூற்று கூறியது இன்னமும் ஞாபகம் உள்ளது. “பாம்பு அறியும் பாம்பின் கால்” என்றார் அவர்.

அதன் அர்த்தம், மத்திய உளவுத்துறை ஆட்கள் எந்த பாதையில் வருவார்கள் என்று தாம் ஊகித்து வைத்திருந்தார் என்பதே.

அலன் தம்பதிகள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தகவல் டில்லிக்கு வந்ததும், மத்திய உளவுத்துறை ஆட்களின் பார்வை முழுவதும் தமிழகத்தில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க தலைவர்கள் மீதும், தமிழக உளவுத்துறை தலைவர் தம் மீதும் பதியும் என்பதை மோகன்தாஸ் புரிந்து வைத்திருந்தார்.

அதுவும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க தலைவர்களை தமிழக உளவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க தொடங்கியதும், டில்லி உளவுத்துறை தலைகள் எல்லோரும் தாமும் ‘பானைக்குள் கை விடுவதற்கு’ முயற்சிப்பார்கள் என்பதையும் அவர் ஊகித்திருந்தார்.

இதனால், அவர்களது விளையாட்டை வெட்டி விளையாட, இவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை தனது அலுவலகத்தில் வைத்து விசாரிக்கத் தொடங்கியதற்கு முன்னரே மோகன்தாஸ், அவரது உதவியாளர் ஒருவர் மூலமாக ஒரு ஏற்பாட்டை ஏற்கனவே செய்திருந்தார். அது, அது, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை ரகசியமான இடம் ஒன்றுக்கு அழைத்துப்போய் விசாரிப்பது.

விசாரணை நடைபெறும் இடம் தெரிந்தால்தானே, டில்லி ஆட்கள் தொடர்பு கொள்ள முடியும்? (அந்த நாட்களில் செல் போன்கள் கிடையாது)

மோகன்தாஸின் உத்தரவுப்படி அவரது உதவியாளர், சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மற்றும் ஒரு நடுத்தர அளவுள்ள ஹோட்டலில் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு

No comments:

Post a Comment