Follow by Email

Monday, 22 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! -2


யாழ்ப்பாணத்தில் அமெரிக்கர்களான அலன் தம்பதிகளை கடத்திச் சென்றவர்கள், அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விஷயத்தைத் திசை திருப்புவதற்காக, கடத்தலுக்கு உபயோகித்த காரை காங்கேசன்துறை அருகே சேந்தாங்குளம் கடற்கரையில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.

கார் கடற்கரையில் நின்ற காரணத்தால் அவர்களை இந்தியாவுக்குக் கடத்திச் சென்றிருப்பார்கள் என்பதுபோல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மறுநாள் காலை யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரின் (கலெக்டர்) அலுவலகத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.  கடிதம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ராணுவப் பிரிவான பி.எல்.ஓ.வினால் எழுதப்பட்டிருந்தது.

அதில் அலன் தம்பதியினரின் கடத்தலுக்கு உரிமை கோரியிருந்தார்கள். அத்துடன், நிபந்தனைகள் இருந்தன.

அலன் தம்பதியினரை விடுதலை செய்ய வேண்டுமென்றால் 20 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.  50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்கள்.

20 அரசியல் கைதிகளையும் 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தையும் மே 14-ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அலன் தம்பதியினர் கொல்லப்படுவார்கள் என்று கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட கடிதம் ஒருவேளை மறைக்கப்படலாம் என்ற சந்தேகத்தில், இதே கடிதம் பல நகல்கள் எடுக்கப்பட்டு, யாழ்நகரின் பல பகுதிகளிலும் போடப்பட்டிருந்தது. 

விஷயம் வெளியே தெரியவந்தவுடன் இந்திய மத்திய அரசு திகைத்துப் போனது. சர்வதேச அளவில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது.

இந்தியா அதுவரை, “இலங்கை தமிழ் போராளி இயக்கங்களுக்கு நாங்கள் எந்தவித உதவியும் செய்யவில்லை. பயிற்சியும் கொடுக்கவில்லை. ஆயுதமும் கொடுக்கவில்லை” என்று வெளியுலகத்துக்குக் கூறிவந்தது.  

ஆனால் ஒரு விடுதலை இயக்கம் கடத்திவிட்டு, அதற்கான பணய தொகையை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கூறுவது, இந்தியாவுக்கும் இதில் தொடர்பு இருக்கின்றது என்பது போன்ற தோற்றம் ஒன்றை வெளியே உருவாக்கிவிடும்.

அது மாத்திரமல்ல விடுதலை இயக்கங்களுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய சம்மந்தம் இருக்கின்றது. விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை வெளியுலகத்துக்குக் காட்டிவிடும்.

இது மத்திய அரசுக்கு ஏற்பட்ட முதல் சிக்கல்.

அடுத்த சிக்கல் என்ன தெரியுமா? இந்த அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டது 1984ம் ஆண்டு, மே மாதம் 10-ம் தேதி என்று முதல் பாகத்தில் குறிப்பிட்டோம் அல்லவா? அவர்கள் கடத்தப்பட்டு இரு தினங்களில், அப்போதைய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (ரீகன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜார்ஜ் புஷ் துணை ஜனாதிபதியாக இருந்தார்) புதுடில்லி வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய விஜயம் நடைபெறுவதற்கு 2 தினங்களுக்கு முன் இரு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டு, அவர்களை மீட்க பணயத்தொகையை தமிழக அரசிடம் கொடுக்க சொன்னால் என்னாகும்?

கொந்தளித்தது மத்திய அரசு. ஆனால் என்ன செய்ய முடியும்? முழு பிரஷரையும் தமிழக அரசின் தலையில் போட்டார்கள்.

அரசியல் கைதிகளைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும், 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் கூறியதில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் கடும் கோபத்தில் இருந்தார்.

டி.ஐ.ஜி மோகன்தாசை அழைத்த எம்.ஜி.ஆர்., “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். உடனடியாக அலன் தம்பதியினர் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.

சென்னையிலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரின் வீடுகள் எல்லாம் தமிழக கியூ பிராஞ்ச் ஆட்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டன.

இதில் மற்றொரு தமாஷூம் நடந்தது. அது என்னவென்றால், தமிழகக் காவல்துறையின் கியூ பிராஞ்ச்கூட, அலன் தம்பதியினர் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றுதான் நம்பியதுதான்!

கடத்தியவர்கள் கடற்கரை ஓரமாக காரை விட்டுவிட்டு சென்றதால், அலன் தம்பதியினரை நிச்சயம் படகில் ஏற்றி இந்தியாவுக்கு கொண்டுவந்திருப்பார்கள் என்றே முடிவு கட்டியது, கியூ பிராஞ்ச். சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட உத்தரவுப்படி, மதுரை கியூ பிராஞ்ச் டீம் ஒன்று உடனடியாக இந்தியாவின் தெற்குக் கடற்பகுதிக்கு போய் இறங்கியது.

ராமேஸ்வரத்துக்கு அருகில் தங்கச்சிமடம் என்று ஒரு இடம் உண்டு. அங்கே இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க அனுதாபி ஒருவரின் (இவர் இந்தியர்) வீடு சுற்றி வளைக்கப்பட்டது. அலன் தம்பதியினரை தங்கச்சிமடத்தில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கே சோதனையிட தொடங்கினார்கள்.

தொடரும் 

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! முதல் பகுதியை படிக்க


தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு
No comments:

Post a Comment