Follow by Email

Sunday, 27 January 2013

பாவிகளுக்கு முடிவு கட்டுங்கள்!


இந்தியா என்றில்லை, உலகம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. 

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு பின்னால் இருப்பவர்களின் ஒரே நோக்கம், அமைதியை குலைப்பது, அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பது, வகுப்பு ஒற்றுமையை, சகிப்புத்தன்மையை குறைப்பது, தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது என்பதுதான். 

இதற்கு தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

சில ஆயிரங்களில் இருக்கும் தீவிரவாதிகள் தான் கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வருகிறார்கள். 

இருக்கட்டும்.


இப்போது இந்தியாவில் தீவிரவாத சிந்தனைகள் மட்டும்மல்ல, மத ரீதியான உணர்வுகளும், ஜாதி வெறியும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

கல்வியும், அறிவும் வளர்ந்த அளவிற்கு பகுத்தறிவு வளர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. அகலமாக  வேண்டிய அறிவு மனப்பான்மை, ஜாதி  மதம் என்று  சிக்குண்டு குறுகிய வட்டத்திற்குள் மனிதன் வந்து விட்டான்.

காரணம் என்ன?

தங்கள் சுயலாபத்திற்காக, அரசியல் நோக்கத்திற்காக முளை சலவை செய்து, ஒன்றும் அற்ற அப்பாவிகளை பலிகடாவாக்கி கொண்டே போகிறார்கள் அரசியல் பிழைப்புவாதிகள்.

தேசியக்கட்சிகள் அரசியலில் பிழைத்திருக்க மாநில கட்சிகளின் தயவு தேவை. மாநில கட்சிகள் அரசியலில் பிழைத்திருக்க, குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க அலையும் சாதி சங்க தலைவர்களை நாடுவதால் வந்த வினை.

எந்த ஜாதியில் பிறந்த மனிதனாக இருந்தாலும், வாழும் காலத்தில் ஆயிரம் பிரச்சனைகளோடு அல்லாடுகிறான். வறுமையில் வாடுகிறான். வாழ்க்கையோடு போராடுகிறான்.


அப்போதெல்லாம் வராத சாதி சங்கம், இனஉணர்வு, சக மனிதனால், அதாவது மாற்று ஜாதி மனிதனால் பாதிக்கப் பட்டால் போதும், சாதி சங்களுக்கு பொத்துக்கொண்டு வருகிறது அக்கறை.

எரிகிற வீட்டில் புடுங்கிய வரை லாபம் என்கிற மாதிரி, அதை வைத்து ஆதாய அரசியல் நடத்தவும், தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் ஜாதி சங்கங்கள் முயல்கின்றன.

இதற்கு உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மனிதன் சிக்குவதுதான் விபரீதம். தங்களை காக்க கடவுளே நேரில் வந்த மாதிரி பின்னால் கூட்டம் சேர்க்கவும், போராடவும் செய்கிறார்கள்.

இதனால் தான் வன்முறை, உயிர் இழப்பு என்பதும் பின்னால் தொடர்கதையாகி விடுகிறது.

அதுமட்டுமல்ல... வேலிக்கு ஓனான் சாட்சி என்கிற மாதிரி, ஜாதிய உணர்வுகளை பெரும் போராட்டமாக வெடிக்காமல் தடுக்க வேண்டிய அரசுகளே ஜாதி சங்கத்தை வளர்க்கும் போது, ஜாதி உணர்வு எப்படி குறையும்?

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நிலைமை மாறி, ஒற்றுமையில் வேற்றுமை என்கிற உணர்வு வரக்காரணம் அரசுகளும், அரசியல்வாதிகளும் தான்.


இதற்கு முற்றுப் புள்ளி எப்படி வைப்பது?

சுயலாப அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் மனது வைத்தால் தான் நடக்கும்.

கொள்கை பிடிப்பில்லாமல் பதவி வெறிபிடித்து அலையும் அரசியல் வாதிகளிடம் இந்த பெரும்தன்மையை எதிர்ப்பார்க்க முடியுமா?

ஜாதி கட்சிகளோடு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை, நாட்டு நலன், தேசிய நலன் பற்றி சிந்திக்கும் கட்சிகளோடு மட்டும்தான்  எங்கள்  உறவு என்று சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது?

அந்த சாதிக்காரனுக்கு நாலு மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கு, இந்த ஜாதிகாரனுக்கு ஏழு மாவட்டத்தில் வலுவான அமைப்பு இருக்கு.

அதனால் இந்த தொகுதியில் இந்த ஜாதிக்காரனை நிறுத்து என்று லாப நஷ்ட கணக்கு பார்க்கும் அரசியல்வாதிகள் மாறுவார்களா?

அது நடக்கப் போவதில்லை. மக்கள் மாறினால்தான் உண்டு.ஜாதி பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டியது நீங்கள் .

உணர்வுகளை தூண்டிவிட்டு, கூட்டம் சேர்த்து, அந்த கூட்டத்தை காட்டி குளிர் காய நினைப்பவர்களை தனிமை படுத்தி தண்டிக்க வேண்டியது நீங்கள்.

உங்கள் வீட்டு பிள்ளையாய், உங்கள் சேவகனாய், உங்களுக்காக உழைத்து  உயிர் கொடுக்க காத்திருக்கும்  உத்தமர்களை அடையாளம் கண்டு அநாதையாக்க வேண்டியது நீங்கள்.

இது ஜாதி உணர்வுகளுக்கு மட்டுமமல்ல, மத உணர்வுக்கும் பொருந்தும்.மனிதனுக்கு மதம் பிடிக்கலாம். மதம் பிடிக்க கூடாது.  பிடித்தால் என்ன நடக்கும் என்பதை உலகமே உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது தீவிரவாதம் என்ற பெயரில்.

இப்போது மத தீவிரவாதம் காலுக்கு அடியில் இருக்கும் கன்னி வெடி மாதிரி உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

ஊருக்கு நாலு பெயரை வைத்திருக்கும் மதவாத கட்சிகள் தங்களை பிரம்மாண்டமாக காட்டிக்கொள்ள முயல்கின்றன.  இதற்குள்  சிந்திக்க தெரிந்தவர்கள் சிக்கிவிட கூடாது.

அரிப்பெடுத்து அலையும் இந்த ஆதாயவாதிகள் அடுத்த பாராளுமன்ற தேர்தலை குறி வைக்கிறார்கள்.

அதற்காக கூட்டம் சேர்க்கவும், தங்களை மத காவலர்கள் போலவும்,  போலி வேஷமிட்டு அலைகிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

இவர்களை வளர விட்டால் நச்சு பாம்புக்கு பால் வார்த்த மாதிரி நாடு நாசமாய் போய்விடும்.  இந்த  பாவிகளுக்கு முடிவு கட்டுங்கள்! பாரதம் உருப்படும்.

ஓன்று மட்டும் சொல்வேன். ஓன்று பட்ட இந்தியா துண்டாக  மதம் தான் காரணம் என்பதை மறந்து விட வேண்டாம்.

No comments:

Post a Comment