Follow by Email

Thursday, 24 January 2013

விஸ்வருபம் தடை - அநியாயம்


உலக நாயகன் கமலுக்கு ஏற்பட்டிருப்பது  சறுக்கலா? விடபட்டிருப்பது சவாலா? என்ற ஆராட்சி இப்போது தேவை இல்லை. 

ஒரு மாபெரும் கலைஞன் அவமானப்படுத்தபட்டிருக்கிறான்.  ஒரு துளி கூட நியாயமே இல்லாத சேவை வரிக்கு எதிராக ஓன்று திரண்ட தமிழ் திரையுலகம், இப்போது பார்வையாளர் வரிசையில் இருக்கிறது. 

கமல்...!

வித்தியாசமான கலைஞன். நடிப்பில் பல்கலைகழகமாக திகழ்ந்த ஐயா சிவாஜிகணேசனை கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் உண்டு.

எந்த மனிதனும் சிவாஜி மாதிரி நடைமுறை வாழ்க்கையில் இருப்பதில்லை. அவர் ஓவர் ஆக்ட் செய்கிறார் என்று வாதிட்டவர்கள் உண்டு. அந்த மாபெரும் நடிப்பு சக்ரவத்தியையையே  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கமலை விமர்சிப்பதில்லை.

அவரின் ஆரம்ப கால படங்கள் பல மசாலா படங்கள் வரிசையில் வந்தது.  என்றாலும்  அதையே தொடர்கதையாக கொள்ளாமல், தனித்துவமாக படங்களை தந்தவர் கமல்.

கமலை புத்திசாலி என்பதை விட, மெத்த படைத்த மேதாவி என்பது பொருந்தும்.

பத்து வருடங்களுக்கு பிறகு செய்ய வேண்டியதை முன்னமே யோசிப்பவர் கமல். இதுதான் இவரின் பலம். இதுதான் இவரின் பலவீனம்.

இன்னமும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாதிரி,  குப்பை படங்களை தருகிற தமிழ் திரையில், துருவ நட்ச்சத்திரமாக ஜொலிப்பவர் கமல்.

இதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.  ஒரு ஆதங்கம்.. இப்படி வார்த்தைகளாக வருகிறது.


இப்போது விஸ்வருபம் பலவகையில் சர்ச்சைக்களை சந்தித்த வண்ணமே இருக்கிறது.

பல தடைகளை தாண்டிய விஸ்வருபம் இப்போது மதவாத போர்வையில் சிக்கி தவிக்கிறது.

சிறு நெருப்பு கிடைத்தாலும் அதை ஊதி பெரிசாக்க நினைக்கும், அரசியல்வாதிகளும், மதவாதிகளும் இப்போது படத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்.

கமல் ஓன்று மூளையற்ற முட்டாள் அல்ல. ஒரு மதத்திற்கு  எதிராக கருத்துக்களை சொன்னால் படத்திற்கு எதிர்ப்பு வரும் எனபது அவருக்கு தெரியும்.

படத்தின் ட்ரைலர் வெளியான காலம் முதலே இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான படம் என்பது போல் ஒரு புரளி கிளம்பி விட்டது.


எனக்கு கிடைத்த தகவலின் படி, விஸ்வருபம் ஆப்கன்தீவிரவாதிகளை பற்றிய படம்.

அங்கு பெண்களுக்கு எதிராக, மதசட்டம் என்ற போர்வையில்  நடந்த கொடுமைகளை பதிவு செய்கிறது விஸ்வருபம் .

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ட்ரோன் அட்டாக் (உளவு விமான ஏவுகணை தாக்குதல்கள்) ஆபரேஷன்களுக்கு  எதிரான கருத்தை கூறுகிறது. இதில் அப்பாவி மக்களும் கொல்லப்படுவதை விஸ்வரூபம் படம் பல  இடங்களில் சொல்கிறது. வசனங்களிலும், அந்த சாயல் இருக்கிறது.

கமலே சொல்கிறார்.   இப்படம் இஸ்லாமியர்களைப் சிறுமை படுத்துவதாக அமையாது. பெருமைப்படுத்துவதாகவே அமையும் என்று அதையே இப்போதும் கூறி வருகிறார். இருந்தும் எதிர்ப்பு.

படத்தில் சர்ச்சையான  காட்சிகள்   இருந்தால் சென்சார் அனுமதி கிடைத்திருக்காது.

வெறும் வார்த்தை வசனங்களையே துண்டிக்கும் சென்சார், மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் அனுமதி கொடுத்திருக்காது. அதுதான் உண்மை.


வீண் புரளிகளை கிளப்பி, அதன் அடிப்படையில், ஒன்றும் அற்ற அப்பாவிகளை தூண்டி விட்டு, போராட்டம் நடத்த வைத்து, படத்தை வெளியிடாமல் செய்வது பெரும் பாவம்.  இஸ்லாமிய சகோதர்கள் இந்த மாயவலையில் சிக்கிவிட  கூடாது.

அப்படி இருக்காலாம், இப்படி இருக்கலாம் என்ற ஊகங்களுக்கு பலியாகி விடக்கூடாது.

தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் இது போன்ற போராட்டங்கள் தவறான வழிகாட்டலுக்கு முன் உதாரணமாய் இருந்து விடக்கூடாது.

ஹிந்து மதத்தில் இருக்கும் திவீரவாதம் பற்றி கூட பேசப்படும் இந்த நேரத்தில் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை பற்றி சொல்லும்  போது, அகிம்சா சக்கரவர்த்திகள் என்று சொன்னால் அது கேலி கூத்தாக இருக்கும். நெருப்பை நெருப்பு என்றுதான் சொல்ல முடியும்.

தீவிரவாதிகள் ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிருஷ்துவர்கலாக இருந்தாலும் சரி, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களில், உண்மையைத்தான் பேச முடியும்.

இது படம். நம் கண் முன்னாள் நடந்த ஒரு சம்பவத்தை  பதிவு செய்கிறது. முதலில் வெளி வரட்டும். அதில் மதத்தை இழிவு படுத்துவது போன்ற சர்ச்சையான காட்சிகள் இருந்தால்,  திருக்குரானையோ,  நபிகள் நாயகத்தையோ இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் எதிர்ப்பது நியாயம்,  முறை.  படத்தை தடை செய்யுங்கள் என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கிறது.

பொத்தாம் பொதுவாக, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள் என்று வாதிடுவது தவறு.

இந்திய முஸ்லிம் சகோதர்களை தீவிரவாதிகள்  என்று சொல்லவில்லை. ஆப்கன் தான் கதை களம். அங்கு இருப்பது யார்? இருந்தது யார்? அதுதான் படத்தில் சொல்லபட்டிருக்கிறது.

எதிர்க்கும் இஸ்லாமிய சகோதர்கள், கமல் என்ற மாபெரும் கலைஞனின் மனகாயத்தை அதிகப் படுத்தக்கூடாது.

ஒரு பட தயாரிப்பளாராக, ஒரு படத்தின் இயக்குனராக, அதில் நடித்த நாயகனாக பெரும் உழைப்பை, பொருளை மூலதனம் செய்திருக்கிறார்.

அவர் சினிமாவிற்கு  செய்திருக்கும் சேவை மிகபெரியது. நன்றி கெட்ட திரை உலகம் அதை மறந்திருக்கலாம். நீங்கள் மறக்க கூடாது.

உங்களுக்காக பிரத்தியோக காட்சிகள் கூட காட்டப்பட்டிருக்கிறது.  அதில் மாற்றங்கள் வேண்டுமானால் சொல்லுங்கள். மொத்த படமும் தடை என்பது அநியாயம். இதை மனசாட்சி  உள்ள எந்த மனிதனும் சொல்ல முடியாத வார்த்தை.

2 comments:

  1. ஒரு நாளிழலில் வாசகர் சொன்ன கருத்து ( Swamidhason Francis )என் கருத்தோடு ஒத்து போகிறது. அதையே இங்கு பதிவு செய்கிறேன்.
    முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விஸ்வரூபம் படத்துக்கு 15நாட்கள் தடை விதித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. கமல் கூறுவது போல இது நிச்சயமாக ஒரு கலாச்சார தீவிரவாதம் தான். தீவிரவாதிகள் பற்றிய எல்லா படத்திலும் வில்லன் முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவனாக சித்தரிக்கப்படுவதை ஏற்க முடியாது தான். இருந்தாலும் சினிமா ஒரு கலைப் படைப்பு என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு படைப்பாளிக்கு கதாபாத்திரங்களை சித்தரிப்பதிலும், தன் பாணியில் கதை சொல்லவும் இந்தியாவில் சுதந்திரம் இருக்கிறது. அதில் ஏதாவது ஒரு சமூகத்தை புண்படுத்தும் காட்சிகளோ, விரசமோ இருந்தால் அதை சீர்செய்ய சென்ஸார் போர்டு உள்ளது. இதையும் தாண்டி ஒரு சமூக அமைப்பின் கோரிக்கையை ஏற்று ஒரு படத்தை அரசு தடை செய்வது முற்றிலும் அரசியல் லாபம் கருதி செய்யப் படும் ஒரு ஜனநாயாக விரோதச் செயல். கருத்து சுதந்திரத்தை கழுத்து நெரிக்கும் இந்த செயலால் அரசு யாரை திருப்திப் படுத்துகிறதோ தெரியவில்லை. கலையும் இலக்கியமும் ரசிக்கப்படுவதற்கு மட்டுமல்ல தர்க்கம் செய்யவும், விமர்சனம் செய்யவும், அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள எதிர்க்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை அரசே மிரட்டலுக்குப் பயந்து தடை செய்திருப்பது நிர்வாகத்தின் உறிதியின்மையைத் தான் காட்டுகிறது. சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் உலகமே வியந்து பாராட்டும் ஒரு உன்னத கலைஞனை காயப்படுத்துவதை கலையை நேசிக்கும் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். தமிழக அரசு இந்த தடையை உடனே திரும்பப் பெறவேண்டும்

    ReplyDelete
  2. விஸ்வரூபம் விமர்சனம் (சுட்டது)
    http://sekkaali.blogspot.com/2013/01/blog-post_24.html

    ReplyDelete