Follow by Email

Saturday, 1 September 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 20


அத்தியாயம் 20

முகம் தெரிந்த நபர்களின் பெயர்களும் தொடர்புகளும்

சென்னை அடையாறு பகுதியில் ‘அனபான்ட் சிலிகான் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நளினியும், வில்லிவாக்கம் நபர் தெரிவித்த அவரது பக்கத்து வீட்டு நளினியும், ஒரே நபர்தான் என்பதை புலனாய்வுக்குழு புரிந்து கொண்டது.

அதே நளினியின் பெயர் ஒரு துண்டுக் கடிதத்தில் எழுதப்பட்டு, தஞ்சாவூர் அருகே தமிழக போலீஸ் கைது செய்து வைத்திருந்த ரூசோ எனப்படும் சங்கர் கோணேஸ்வரன் வசம் இருந்த காரணத்தால், நளினிக்கு ராஜிவ் கொலையுடன் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டார்கள் புலனாய்வுக் குழுவினர்.

இதற்கிடையே விசாரணையின்போது ரூசோ, தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஒப்புக் கொண்டார். 

அவர் தஞ்சாவூர் பக்கத்தில் நடமாடிய காரணத்தால், அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அவரை விசாரித்தார்கள்.

அந்த விசாரணையில் ரூசோ, மற்றொருவரைக் காட்டிக் கொடுத்தார்.

இந்த நபர், தஞ்சாவூரில் இருந்து அதிக தொலைவில் இல்லாத கடலோர கிராமமான திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். 

தொழில் ரீதியாக கடத்தல்காரர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைப்பதில் இவர் உதவுவதாக ரூசோ தெரிவித்தார்.

தமிழக போலீஸார் இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரரைக் கைது செய்தனர். அவரை விசாரித்தபோது, புலிகளுக்கு தேவையான பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதற்கு உதவி செய்வதை அவர் ஒப்புக் கொண்டார். 

அதில் புலனாய்வுக்குழு அதிகம் அக்கறை காட்டவில்லை. காரணம் அந்தக் காலப் பகுதியில், தமிழகத்தின் கடலோரப் பகுதியில் வசித்த பலரது முழுநேர தொழிலே, புலிகளுக்கு பொருட்கள் அனுப்புவதுதான். மத்திய, மாநில அரசுகள் அதை கண்டும் காணாமலுமாக இருந்து வந்தன.

இதனால், புலிகளுக்காக பொருட்கள் கடத்துவதை பெரிய தண்டனைக்குரிய குற்றமாக கருதி அவரை விசாரிக்கவில்லை புலனாய்வுக்குழு. 

அவர்களது விசாரணை முழுவதும் ராஜிவ் கொலையை மையமாக வைத்தே இருந்தது. ராஜிவ் கொலையுடன் புலிகளுக்கு ஏதாவது தொடர்புகள் இருந்தனவா என்ற விபரங்களை அறியும் விதத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த திருத்துறைப்பூண்டி கடத்தல்காரருக்கு விடுதலைப்புலிகளுடன் நல்ல பரிச்சயம் இருந்தது. 

ஆனால், புலிகள் ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது மட்டுமே இவரைக் கடந்து செல்வார்கள். கடற்கரையில் இருந்து தமிழகத்துக்குள் சென்று சென்றுவிட்டால், அவர்கள் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்பது இவருக்கு தெரியாது. தமிழகத்தின் எந்த நகரத்துக்கு செல்கிறார்கள் என்றுகூட இவருக்கு தெரியாது.

இதனால் இந்தக் கடத்தல்காரரிடம் இருந்து உபயோகமான தகவல் ஏதும் புலனாய்வுக் குழுவுக்கு கிடைக்கவில்லை.

விசாரணையை முடித்துக்கொண்டு அவரை அனுப்பிவிடலாம் என இவர்கள் முடிவு செய்த நேரத்தில், என்ன தோன்றியதோ, புலனாய்வு அதிகாரி ஒருவர் தமது ஜீப்புக்குச் சென்று அதன் கிளவ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த கவர் ஒன்றை எடுத்து வந்தார். 

அதனுள் சில போட்டோக்கள் இருந்தன. ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன், ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை.

அந்த போட்டோக்களை கடத்தல்காரரிடம் காட்டிய புலனாய்வு அதிகாரி, “இந்த போட்டோவில் இருப்பவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

போட்டோக்களைப் பார்த்துவிட்டு கடத்தல்காரர், “இதோ இவரைத் தெரியும்” என்று காட்டிய நபரைக் கண்டதும் அதிகாரிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. 

காரணம் இவர்கள் ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்’ என ‘எக்ஸ்’ போட்டு வைத்திருந்த நபர் அவர். 

போட்டோவில் குர்தா-பைஜாமா அணிந்து கொண்டிருந்த அந்த நபர் யார் என்று அறிவதற்குதான் இவர்கள் பத்திரிகை விளம்பரம் எல்லாம் கொடுத்து தலைகீழாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!

“சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். போட்டோவில் உள்ள இந்த நபரையா தெரியும் என்கிறீர்கள்?”

“ஆம். இவரேதான். இவர் கடல் வழியாக தமிழகத்துக்கு வரும்போது சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இவரும் விடுதலைப்புலிதான்”

“இவருடைய பெயர் தெரியுமா?”

“சிவராசன் என்று அழைப்பார்கள். இவருக்கு ஒரு கண் மட்டும்தான் உண்டு. மற்றைய கண் ராணுவத்துடன் யுத்தம் புரிந்தபோது பறிபோனதாக சொன்னார்”

இந்தக் கட்டத்தில்தான், ராஜிவ் கொலையின் மாஸ்டர்மைன்ட் என்று அறியப்பட்ட நபரின் பெயர் சிவராசன் என்பது புலனாய்வுக் குழுவுக்கு முதல் தடவையாக தெரியவந்தது.

தஞ்சாவூரில் இருந்து இந்த புதிய தகவலுடன் சென்னை திரும்பியது புலனாய்வுக்குழு.

அடுத்து, இவர்கள் மறைமுகமாக கண்காணித்துக் கொண்டிருந்த போட்டோகிராபர் சுபா சுந்தரத்தை அழைத்து விசாரிக்க முடிவு செய்தார்கள். அவரை கண்காணித்த வகையில் புதிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், நேரடியாக விசாரிக்கத் தொடங்கினார்கள்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது மரணமடைந்த போட்டோ கிராபர் ஹரிபாபு, தன்னுடைய உதவியாளர்தான் என்றார் சுபா சுந்தரம். 

ஹரிபாபுவின் பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட பிரசுரங்களில் இருந்த போட்டோக்களில் யார் யாரையெல்லாம் தெரியும் என்று கேட்டபோது, அந்த போட்டோக்களில் இருந்த ஒருவரை அடையாளம் காட்டினார் சுபா சுந்தரம்.

“இவரது பெயர் பாக்கியநாதன். சென்னையில் பி.பி.எல். ஆல் ரவுண்டர்ஸ் என்ற பெயரில் அச்சகம் நடத்தி வருகிறார். விடுதலைப்புலிகளின் பிரசுரங்கள் பலவற்றை பிரின்ட் செய்து கொடுப்பவர் இவர்தான்” என்றார் சுபா சுந்தரம்.

இந்த பாக்கியநாதனை விசாரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவரை அனுப்பினார்கள்.

அந்த அதிகாரி திரும்பி வந்து, “பாக்கியநாதன் தொழில்முறையில் விடுதலைப் புலிகளுக்கு பிரின்டிங் செய்து கொடுத்ததைத் தவிர தனக்கும் அவர்களுக்கும் வேறு தொடர்பு ஏதும் கிடையாது என்கிறார். 

ஆனால், அவரது வீட்டுக்கு போனபோது மற்றொரு தகவல் கிடைத்தது. அவர்களது வீட்டில் உள்ள பேமிலி போட்டோவில் பாக்கியநாதனின் தங்கையின் போட்டோ உள்ளது. அந்த தங்கை வேறு யாருமல்ல, நளினிதான்!” என்றார்.

இவர்கள் இப்படிச் சுற்றி வளைத்து நளினி யார் என்பதைக் கண்டு பிடிப்பதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நளினியின் அண்ணன் பாக்கியநாதனை விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அழைத்துச் சென்றது. 

அவர் கூறிய விவரங்களைச் சரிபார்க்க மிகுந்த நேரம் பிடித்தது. அவரையும் அழைத்துக்கொண்டு அவரது வீட்டை சோதனையிடச் சென்றார்கள்.. அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது பாக்கியநாதன் தப்பியோட முற்பட்டார். அது தடுக்கப்பட்டது.

அதன் பின் மனதளவில் உடைந்துபோன அவர், புலனாய்வுக் குழுவினருக்கு உபயோகப்படக்கூடிய சில தகவல்களைத் தெரிவித்தார்.

குர்தா பைஜாமா நபர்தான் சிவராசன்; போராளியான அவருக்கு ஒரு கண்பார்வை இல்லை என்று, திருத்துறைப்பூண்டியில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் தெரிவித்த தகவலை பாக்கியநாதன் உறுதிப்படுத்தினார். 

மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய பெண்ணின் பெயர் தனு என்றும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணும் விடுதலைப்புலி உறுப்பினர்தான் என்றும், அவரது பெயர் சுபா என்றும் தெரிவித்தார்.

“சிவராசனை போராளிகள் வட்டாரத்தில் ரகு என்றும் ரகு அண்ணா என்றும் அழைப்பார்கள். அவரிடம் பயிற்சி பெற்ற சிலர் சிவராசன் மாஸ்டர் அல்லது ரகு மாஸ்டர் என்று சொல்வார்கள். பத்மநாபாவை கொலை செய்த ஆபரேஷனை தலைமை தாங்கிச் சென்றது சிவராசன்தான்” என்றும் பாக்கியநாதன் கூறினார்.

பத்மநாபா கொலையில் ரகுவரன், டேவிட் ஆகிய இரு போராளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக றோவும் தமிழக உளவுப்பிரிவு கியூ பிராஞ்சும் ஏற்கனவே புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்திருந்தன. இந்த ரகுவரனும் இவர்கள் கூறும் ரகுவும் ஒரே நபர்தான் என்ற முடிவுக்கு வந்தது புலனாய்வுக்குழு.

தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி ரூசோவிடம் கிடைத்த துண்டுச் சீட்டில் இருந்த தாஸ் என்பவர்தான் முருகன் என்று குறிப்பிட்ட பாக்கியநாதன், தலைமறைவாகிவிட்ட தனது தங்கை நளினியுடன் இந்த முருகனும் தப்பிச் சென்றுவிட்டார் என்றார்.

இந்தக் கட்டத்தில்தான் புலனாய்வுக் குழுவுக்கு பல பெயர்கள் கிடைத்திருந்தன. இந்தப் பெயர்களுக்கு உரியவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் தெரிய வந்திருந்தது. இனி இவர்களை தேடிப்பிடிக்க வேண்டும்.

சிவராசன், நளினி, சுபா ஆகியோரின் பெரிதுபடுத்தப்பட்ட போட்டோக்கள், கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட முருகனின் படம் ஆகியவற்றுடன் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒட்டப்பட்டன. 

ஏராளமான சுவரொட்டிகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன. சுவரொட்டியில் காணப்படும் நபர்களைப் பற்றியத் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது புலனாய்வுக் குழு.

இதற்கிடையே பாக்கியநாதனை விசாரித்ததில், விடுதலைப்புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பைத் தெரிவித்தார். 

அவரது தாயார் பத்மா, சென்னையில் உள்ள ஈ.வி. கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்குப் பிரபல புகைப்படப் பத்திரிகையாளர் சுபா சுந்தரத்தை நன்றாகத் தெரியும். 

இந்தியாவில் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதிலிருந்தே சுபா சுந்தரத்தின் ஸ்டூடியோ, போராளிகளின் செயற்பாட்டு மையம் போல இருந்து வந்தது.

1980களின் இறுதியில், சுபா சுந்தரத்திடம் பயிற்சி போட்டோ கிராபராக சேர்ந்தார் பாக்கியநாதன். 

அங்குதான் போராளிகளின் செல்வாக்கு மிக்க, மக்கள் தொடர்புப் பிரமுகரான பேபி சுப்பிரமணியத்தை அவர் சந்தித்தார். பின்னர் அவரால் ஈர்க்கப்பட்டு அவரது உதவியாளர் போல செயற்பட்டார். பேபி சுப்பிரமணியத்தை அடிக்கடி காணவரும் ஏராளமான போராளிகளை பாக்கியநாதன் பார்த்தார்.

அவர்களில் முத்துராஜா என்பவருடன் நெருக்கமாகப் பழகினார்.

முத்துராஜா இந்தியராக இருந்தபோதிலும், ஈழ விடுதலை லட்சியத்துக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். 

முத்துராஜாவின் தாயும், தங்கையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டை விடுதலைப்புலிகள்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் ஓர் அறை மட்டும் பேபி சுப்பிரமணியத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர் முத்துராஜா இல்லாமல் தமிழகத்தில் எதுவும் செய்வதில்லை என்ற நிலைமை இருந்துள்ளது.

பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்தை அடிக்கடி சந்திக்க வரும் மற்றொரு இளம் இந்தியரான அறிவு என்பவருடன் நட்பாகினார். அந்த இளைஞரும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். அறிவுவின் தந்தை, தீவிரமான திராவிடர் கழகத் தொண்டர்.

பாக்கியநாதன், அறிவு, ஹரிபாபு ஆகிய மூவருமே சுபா சுந்தரத்திடம் உதவியாளர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்திய அமைதிப் படையுடன் புலிகள் யுத்தம் புரிந்தபின், தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கிக் கொண்டிருந்த காலப்பகுதி அது. 

யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் புலிகளின் பிரசுரங்களை அச்சிடுவதற்கு பேபி சுப்பிரமணியத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குச் சொந்தமான அச்சகம், மிகச் சொற்ப விலைக்கு பாக்கியநாதனுக்குத் தரப்பட்டது.

அந்த அச்சகத்தை அவரது தொழிலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றபோதிலும், போராளிகள் தொடர்பான அச்சுப்பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாக்கியநாதனிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே,  பாக்கியநாதனின் அக்கா நளினி, அவரது தாயாருடன் சண்டையிட்டுக் கொண்டு வேறு இடத்தில் தனியாகத் தங்கப் போய்விட்டார். அவருக்கு விருப்பமென்றால், சில நாட்களுக்கு விடுதலைப்புலிகள் வாடகைக்கு எடுத்த வீட்டில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தங்கியிருக்குமாறு நளினியை முத்துராஜா கேட்டுக் கொண்டார்.

சில நாட்கள் முத்துராஜா வீட்டில் தங்கியபின், நளினி அங்கிருந்து வெளியேறி மகளிர் விடுதி ஒன்றில் சேர்ந்தார். அதையடுத்து, வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் ஒரு வீட்டைப் பிடித்து வாடகைக்குக் குடியேறினார் நளினி.

இந்த வீட்டில்தான் ராஜிவ் கொலைக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கின என்கிறார்கள்!

( தொடரும்)

நன்றி :விறுவிறுப்பு

1 comment:

  1. பதிவுகள் எழுதுவது தங்களின் தனிப்பட்ட உரிமை! இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க இயலாது. தங்களின் பதிவுகள் அருமையாக இருக்கின்றது. மற்ற தளத்து தொடர்கள் தங்களது பிளாக்கிற்கு அவசியமா? உங்களின் தளத்தின் தலைப்பில் கொடுக்கப்பட்டதற்கேற்ப உங்களின் பதிவுகள் இருந்தால் நன்றாக இருக்கும்! இது ஒரு தாழ்மையான யோசனை!

    ReplyDelete