Follow by Email

Thursday, 30 August 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 18


அத்தியாயம் 18

ஹரிபாபுவின் பெட்டியில் இருந்த பொருட்கள்

சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த ஒருவர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். 

அவர் கொடுத்த தகவல்கள் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தில் நடந்த சம்பவங்களுடன் பொருந்தி வருவதுபோல இருந்தன.

அவர் கொடுத்த தகவல்களில் இருந்து புலனாய்வுக் குழுவுக்கு புதிய பெயர் ஒன்று கிடைத்திருந்தது – நளினி!

அதுவரை காலமும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சந்தேகப் பட்டியலில், குர்தா-பைஜாமா நபர் மாத்திரமே இருந்தார். 

ராஜிவ் கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகத்துக்குரிய விதத்தில் நடமாடியதாக இவர்கள் கருதிய மனித வெடிகுண்டாக வந்து வெடித்த பெண் மற்றும் போட்டோகிராபர் ஹரிபாபு ஆகிய இருவரும் ராஜிவ் கொல்லப்பட்ட அதே தினத்தில் கொல்லப்பட்டு விட்டனர். 

மற்றொரு போட்டோகிராபரான சுபா சுந்தரத்தை, அவர் அறியாமலேயே இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

இதனால், சந்தேக நபர் என்ற விதத்தில் புலனாய்வுக் குழு தேடிக்கொண்டிருந்த ஒரே நபர், பெயர் தெரியாத, குர்தா-பைஜாமா நபர் மாத்திரமே. 

இப்போது நளினி என்ற மற்றொரு பெயர் கிடைத்திருக்கின்றது. ஆனால், அவரது பெயர் இவர்களுக்கு தெரியவந்த நேரத்தில், வில்லிவாக்கத்திலிருந்து நளினி மாயமாகிவிட்டார்.

நளினியைத் தேடுவதில் புலனாய்வுக் குழுவில் ஒரு பகுதியினர் ஈடுபட, கார்த்திகேயன் தலைமையில் மற்றைய பிரிவினர் விடுதலைப் புலிகளின் தமிழக நடவடிக்கைகள் பற்றிய தகவல் சேரிப்பில் இறங்கினர். 

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய ஈழ விடுதலை இயக்கங்களில் நடவடிக்கைகள் தொடர்பாக சி.பி.ஐ.-யிடம் பெரியளவில் தகவல் ஏதும் அப்போது இருக்கவில்லை.

இந்திய உளவுத்துறைகளில் சி.பி.ஐ. முக்கியமான ஒன்றுதான் என்றாலும், அவர்களது போகஸ் முழுவதும் வெளிநாடு தொடர்பற்ற இந்தியப் புலனாய்வுகள் தொடர்பாகவே இருந்தது. 

ஈழ விடுதலை இயக்கங்கள் தொடர்பான விவகாரங்களை அதிகளவில் டீல் பண்ணியது மற்றொரு உளவு அமைப்பான றோ பிரிவுதான்.

அத்துடன், விடுதலைப் புலிகள் புலிகள் உட்பட ஈழ விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் தமிழகத்தை மையப்படுத்தியே இருந்து வந்த காரணத்தால், தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவான கியூ பிராஞ்ச், தமது பங்குக்கு நிறையவே தகவல்களை வைத்திருந்தது.

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப் பட்டபோது, கார்த்திகேயன் உட்பட சி.பி.ஐ.-யின் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் யாருக்கும், றோ அல்லது கியூ பிராஞ்ச் அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிந்திருந்த அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லை. 

இதனால், இவர்கள் அந்த இரு உளவு அமைப்புகளிடமிருந்தும் தகவல்களை கோர வேண்டியிருந்தது.

விடுதலைப் புலிகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, தமது பாதையின் தொடக்கமாக எடுத்துக் கொண்ட சம்பவம், சென்னையில் நடைபெற்ற பத்மநாபா கொலைச் சம்பவம்தான்.

ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பயன்படுத்திய வெடிகுண்டில் இருந்த சிறு குண்டுகளும், பத்மநாபா கொலையுண்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட, வெடிக்காத எஸ்.எப்.ஜி.-87 கையெறிகுண்டில் காணப்பட்ட சிறு குண்டுகளும் ஒரே மாதிரியாக இருந்ததை புலனாய்வுக் குழு முதலில் உறுதி செய்து கொண்டது. 

அடுத்து, 1990 ஜூன் மாதம் பத்மநாபா மற்றும் அவரது ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களின் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் யார் என்ற விபரங்களை தமக்கு கொடுத்து உதவுமாறு றோ, மற்றும் கியூ பிராஞ்சிடம் கேட்டுக் கொண்டது சி.பி.ஐ. புலனாய்வுக் குழு.

றோ, மிகச் சுருக்கமாகப் பதில் கொடுத்திருந்தது. டேவிட், ரகுவரன் ஆகிய இரு விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் பெயர்களைக் கொடுத்து, “இவர்கள்தான் தலைமை தாங்கிச் செய்ததாக எம்மிடம் தகவல் உள்ளது. 

அதற்குமேல் ஏதுமில்லை” என்று ஒதுங்கிக் கொண்டது. அந்த இருவரது போட்டோக்கள்கூட தம்மிடம் கிடையாது என கைவிரித்து விட்டது.

பின்னாட்களில் றோ அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “நிச்சயமாக அவர்களது போட்டோக்கள் எம்மிடம் இருந்தன. 

ஆனால், சி.பி.ஐ.-யால் அவற்றை எம்மிடமிருந்து (றோ) பெற முடியாது. அதெல்லாம் உள்வீட்டு பாலிடிக்ஸ்” என்றார். “சி.பி.ஐ.-யும் உளவுத்துறைதானே.. அவர்களே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே” என்று கூறிச் சிரித்தார்.

தமிழக காவல்துறையின் கியூ பிராஞ்ச் வஞ்சகமில்லாமல், தகவல்களை நிறையவே கொடுத்தார்கள்.

ஜூன் 3-ம் தேதி, கியூ பிராஞ்ச்சிடமிருந்து கத்தை கத்தையாகக் காகிதங்களும், வேறு சில ஆவணங்களும் சிறப்புப் புலனாய்வுப்படைக்கு வந்தன. 

அந்த பைல்களையெல்லாம் படித்துப் புரிந்து கொள்ளவே புலனாய்வுக் குழுவுக்கு சில தினங்கள் பிடித்தன. 

அந்தத் தகவல்கள், தனிப்பட்டு பத்மநாபா கொலை மட்டும் என்று இல்லாமல், விடுதலைப்புலிகளின் தமிழ்நாட்டு நடவடிக்கைகள் என்று பொதுப்படையாக இருந்தன.

அவற்றில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, 1991-ம் ஆண்டு ஜனவரியில், சென்னை புறநகர்ப் பகுதியில் ரகசிய ட்ரான்ஸ்மிஷன் சென்டர் ஒன்று இயங்குவதை கியூ பிராஞ்ச் கண்டுபிடித்தது. 

இந்த ரகசிய ட்ரான்ஸ்மிஷன் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட மற்றொரு சென்டருடன் சிறப்பு அலைவரிசையில் தகவல்களைப் பறிமாறிக்கொண்டிருந்த விஷயமும் தெரியவந்தது.

இங்கிருந்து பரிமாறப்பட்ட தகவல்கள் அனைத்தும் ரகசிய கோர்டு-வேர்டுகளில் இருந்தன. அந்த கோர்டு-வேர்டுகளை கியூ பிராஞ்சால் அப்போது உடைக்க முடிந்திருக்கவில்லை.

அத்துடன், சென்னை புறநகர்ப் பகுதியில் இந்த ரகசிய தகவல் தொடர்பு நிலையம் இயங்குகின்றது என்பதுவரைதான் கியூ பிராஞ்சால் கண்டுபிடிக்க முடிந்திருந்தது. 

புறநகர்ப் பகுதியில் சரியாக எந்த இடத்தில் இருந்து இயக்கப்படுகின்றது என்பதையும் கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதிகள் கியூ பிராஞ்சிடம் இருக்கவில்லை.

குறிப்பிட்ட பைலில் கியூ பிராஞ்ச் எழுதியிருந்த குறிப்பில், “இலங்கையைச் சேர்ந்த, நவீன ஒயர்லெஸ் சாதனங்களைக் கையாள்வதில் திறமைசாலிகளான சிலரால் அந்த ட்ரான்ஸ்மிஷன் நடாத்தப்படுகின்றது என்பதை புரிந்து கொண்டோம். 

அதற்குமேல் எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எழுதப்பட்டிருந்தது.

கியூ பிராஞ்சால் அனுப்பப்பட்டிருந்த பைல்களுடன் கத்தை கத்தையாக வந்திருந்த காகிதங்களில் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் தேதி வாரியாக இருந்தன. 

ஆனால், அவற்றை புரிந்து கொள்ள கோர்டு-வேர்டுகளை டி-கோர்டு செய்யும் கோர்டு ஷீட் தேவை. 

இதனால், அந்தக் காகிதங்களால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில் இருந்தன.

இந்தக் கட்டத்தில் மிக மோசமான நிலையில் இருந்தது ராஜிவ் காந்தி கொலை புலனாய்வு. 

புலனாய்வுக் குழு, மூன்று லீட்களில் புலனாய்வு செய்யத் தொடங்கியிருந்து, மூன்றுமே பாதி வழியில் பாதை தெரியாமல் தடுமாறி நின்றன.

முதலாவது, சுபா சுந்தரத்தை கண்காணித்ததில் புதிதாக ஏதும் தெரியவில்லை. 

இரண்டாவது, நளினியைக் காணவில்லை. 

மூன்றாவது, விடுதலைப்புலிகள் பற்றிய ஆய்வும் புரியாத காகிதங்களுடன் நின்றது.

இந்த நிலையில்தான் நான்காவதாக ஒரு லீட், புலனாய்வுக் குழுவுக்கு வலிய வந்து சேர்ந்தது.

குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கு தெரிந்தவர் ஒருவர் லோக்கல் போலீஸை தொடர்பு கொண்டிருந்தார். 

ஹரிபாபுவின் பெட்டி ஒன்று இவரது வீட்டில் இருந்தது. ஹரிபாபு குண்டு வெடிப்பில் இறந்ததும், அவரைப் பற்றிய சில சந்தேகங்கள் பத்திரிகைகளில் எழுப்பப்பட்டதும், இவரை உஷாரடைய வைத்திருந்தது.

இவர் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே ஏராளமான காகிதக் கத்தைகள்.

அந்தக் காகிதக் கத்தைகளில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் போட்டோ, விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட காலண்டர், காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளின் பட்டியல், வேலூர் கோட்டையின் வரைபடம், ஹரிபாபுவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த சில கடிதங்கள் ஆகியவையும் இருந்தன.

வேலூர் கோட்டையில் என்ன முக்கியத்துவம்? இது நடைபெற்ற காலப்பகுதியில்,  வேலூர் கோட்டையில் உள்ள சிறையில், ஏராளமான ஈழ விடுதலைப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

ஹரிபாபுவுக்கு வந்த கடிதங்களில் ஒன்று, அவருக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கடிதம். 

ஹரிபாவு ஏதோ ஆபத்தான வேலையில் ஈடுபடப் போகிறார் என்பதும் அவ்வாறு ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் வகையிலும் அக்கடிதம் இருந்தது.

பாக்கியநாதன் என்பவர் ஹரிபாபுவுக்கு எழுதிய ஒரு துண்டுக் கடிதமும் அதில் இருந்தது. 

அதில், “முத்துராஜாவின் மின் கட்டணத்தைக் கட்டிவிட்டு, அதன் ரசீதை முருகனிடம் தந்துவிடவும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சாதாரணமாகப் பார்த்தால் இதில் ஒன்றுமில்லைதான். ஆனால், பின்னாட்களில் பாக்கியநாதன், முத்துராஜா, முருகன் ஆகிய மூவரும் இந்த வழக்கில் சம்மந்தப்படப் போகிறார்கள்.

ஹரிபாபுவின் பொருட்களில் கிடைத்த மற்றொன்று, 1991, மே 21-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு பூம்புகார் கைவினைப் பொருள் கழகத்தின் ரசீது. ரூ.65 மதிப்புள்ள சந்தன மாலை வாங்கியதற்காக அது வழங்கப்பட்டிருந்தது.

ராஜிவ் காந்தியைக் கொன்ற மனித வெடிகுண்டு என்று இவர்கள் சந்தேகப்பட்ட பெண்ணை ஹரிபாபு எடுத்த போட்டோவில், ராஜிவ் காந்தியை நெருங்கிய நிலையில் அந்தப் பெண் நின்றிருந்தது ஞாபகமிருக்கிறதா?

அப்போது, அவரது கையில் இருந்ததும் ஒரு சந்தனமாலைதான்!

( தொடரும் )

நன்றி: தமிழர்களின் தாகம், தமிழீழதாயகம் 

No comments:

Post a Comment