ads

Wednesday 27 November 2013

காமமும் ஆசையும்



காமமும் ஆசையும் நிறைவு பெறாதது.  காம வயப்பட்டவர்களுக்கு துய்க்கும் போது, போதும் என்றுத் தோன்றும் ஆனால் அடுத்த நாள் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். ஆசையும் அப்படித்தான்.  

ஒரு சின்னக் கார் வாங்கினால் போதும் என்றுதான் தோன்றும், வாங்கியப் பிறகு இதை விட சற்று பெரியதாய் வாங்கினால்  பரவாயில்லையே என்றுத் தோன்றும். பெரியதாய் வாங்கிவிட்டால் பிஎம் டிபிள்யூ வாங்கினால் நன்றாக இருக்கும் என்று மனதில் ஆசை எழும். 

 மனம் பக்குவப்பட்ட நிலையை அடையும் போது மட்டுமே இவையெல்லாம் சாதாரணமாகத் தோன்றும், பக்குவப்பட்ட மனம் அடைய ஆன்மிக நிலையில் மேன்மைபெற வேண்டும். ஆன்மிக நிலையில் மேன்மைபெற இறைவன் மேல் மனம் நாட்டம் கொள்ள வேண்டும். 

இறைவன் மேல் நாட்டம் கொள்ள கொள்ள ஐம்புலன்கள் ஒரு பக்குவத்திற்கு வந்துவிடும். ஐம்புலன்கள் பக்குவப்பட மனம் செம்மையுறும்.  அப்போது உலக இன்பங்கள் நமக்குப் பெரியதாய் தோன்றாது. ஒரு ஞானியின் மனநிலை வாய்க்கும்.  

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி என்ற அரசன். நகுசனின் மகன்.   யயாதி சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி என்பவளை மணந்து கொள்கிறான். 

அசுரகுல அரசன் விருஷபர்வன் என்பவனின் மகள் சர்மிஷ்டை. ஆரம்பத்தில் தேவயானியும் சர்மிஷ்டையும் நல்ல தோழிகள், ஆனால் அரசனின் மகள் என்பதால் தேவயானியை ஒருமுறை சர்மிஷ்டை அவமானப்படுத்தி விடுகிறாள். 

சுக்ராச்சாரியார் தன் மகளின் நிலை அறிந்து அரசனிடம் சொல்லி சர்மிஷ்டையை தேவயானிக்கு பணிப்பெண்ணாய் பணிபுரியுமாறு  செய்து விடுகிறாள்.

ஒரு முறை சர்மிஷ்டையை சந்தித்த யயாதி அவள் மீது காதல் கொள்கிறான். சர்மிஷ்டையின் வற்புறுத்தலால் அவளுடன்  ரகசியமாக குடும்பம் நடத்துகிறான்.

தேவயானிக்கு யது, துர்வசு என்ற மகன்களும், சர்மிஷ்டைக்கு திருஹ்யு, அனு, பூரு என்ற மகன்களும் பிறக்கின்றனர். 

சர்மிஷ்டை யயாதியின் இந்த ரகசிய உறவு  தேவயானிக்கு தெரிந்து விட, மிகுந்த கோபம் கொள்கிறாள். தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் சொல்லி அழுகிறாள். 

இளமையின் திமிர், அதனால் காமத்தில் கருத்திழந்து விட்டான் யயாதி, அவன் இளமை காணாமல் போகட்டும் , முதுமை அவனை அட்கொள்ளட்டும் என்று சபித்து விடுகிறார் சுக்ராச்சாரியார். 

 யயாதி  அவரிடம் மன்னிப்புக் கேட்டதும் சாபவிமோசனமும் அருள்கிறார். எவனாவது இளைஞன் ஒருவன் உனக்கு தன் இளமையை தர சம்மதித்தால் அவன் இளமையை நீ பெற்றுக¢கொண்டு முதுமையை  அவனுக்குக் கொடுத்து விடலாம் என்று விமோசனம் வழங்குகிறார். 

யயாதிக்கு தான் வாழ்க்கையை இன்னும் சரியாக அனுபவிக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. காமம் அவன் மனதில் கிளர்ந்தெழுகிறது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. 

அய்யோ இப்படியா அரசனாக இருந்தும், அந்தப்புரத்தில் இத்தனை அழகிகள் இருந்தும்,  சுகத்தை அனுபவிக்காமல் வாழ்ந்து என்ன பிரயோசனம் என்று அவன் மனம் ஏங்குகிறது. 

தன் மகன்கள் ஐவரையும் அழைக்கிறான். உங்களில் யாராவது என் முதுமையை எடுத்துக் கொண்டு எனக்கு இளமையைத் தாருங்கள் என்று கெஞ்சுகிறான்.  

ம்ம்.. பாரடா உடல் கிழடு தட்டியும், கிழவனுக்கு ஆசை அறுந்து போகவில்லை.. இன்னும் அனுபவிக்க வேண்டுமாம்.. இவரது சில்மிஷத்தை தாங்க முடியவில்லை என்று பணிப்பெண்கள் யாரும் இவரது அறைக்கே செல்ல மறுக்கிறார்களாம். 

இவருக்கு இளமையைக் கொடுத்து விட்டு நாம் என்ன சாமியாராகப் போவதா.. முடியாது முடியாது.. சாபத்தை பெற்றவரே அனுபவிப்பதுதான் முறை என்று அவரது நான்கு மகன்களும் கூறிவிட, பூரு தந்தையின் அருகில் வருகிறான்.

தந்தையே என்னுடைய இளமையை எடுத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் முதுமையை எனக்குத் தாருங்கள்.. என்கிறான்

  மகனே ! உண்மையாகத்தான் சொல்கிறாயா? 

ஆம்தந்தையே இளமை என்ன முதுமை என்ன? அழியக் கூடியது மனித உடல், இங்கே எதுவும் நிரந்தரமில்லை என்பதை நான் அறிவேன்.  ஆன்மா ஒரு நாள் இத்துப்போன இந்தச் சட்டையை கழட்டி எறிந்து விட்டுப் போகத்தான் போகிறது. 

இந்த உடலால் உங்களுக்கு ஓர் உபகாரம் செய்ய முடிந்தால் அதைவிட எனக்கு வேறு சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது, பெற்றுக்கொள்ளுங்கள் என்று அன்புடன் கூறினான் பூரு.

 பூரூவை பாசத்தோடு கட்டி அணைத்துக் கொண்டான் யயாதி.  மகனே! மிகச் சிறந்த மனிதன் நீயே!  நீ தான் உண்மையில் என் வாரிசு.. இந்த நாட்டை ஆளும் உரிமை உனக்கேத் தருகிறேன் என்ற யயாதி தன் முதுமையை கொடுத்துவிட்டு, மகனின் இளமையப் பெற்றுக் கொள்கிறான்.  

அளவுக்கு மீறி இன்பம் துய்த்து துய்த்தும் அவனுக்கு ஆசை அடங்கவில்லை.  ஆனால் மனதில் சிந்தனை தோன்றியது. இந்த ஆசை அடங்கவே அடங்காது போலிருக்கு.. 

உடல் வலுவிழந்த பின்னாலேயே அந்த உடலின் இயலாமையால் மனம் பக்குவப்படுமோ? பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே  ஆனால் என் மகனுக்கு இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு பக்குவம் வந்திருக்கிறதே .. அது எப்படி? எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணமோ? மனம் பக்குவப்பட்டுவிட்டால் உண்மை விளங்கும் போலிருக்கிறது.. 

நானும் என் மனதை பக்குவப்படுத்த வேண்டும், தவம் செய்தால் மனம் பக்குவப்படும் என்கிறார்கள்.. பார்க்கலாம்.. மகன் பூருவிடம் வந்தான் யயாதி.

மகனே நீ உன் இளமையைப் பெற்றுக் கொள். என் மனதை நான் பக்குவப்படுத்த வேண்டும். நீ நாட்டை ஆளும் அரசன். உனக்கு உடல் வலிமை முக்கியம்.. என் ஆசை தீரவில்லை.. ஆனால் மனதிற்கு ஒரு அயர்வு தெரிகிறது.. எவ்வளவு நாளைக்கு இப்படி என்ற கேள்விபிறக்கிறது. 

விளக்கில் எண்ணெய் வார்க்க வார்க்க தீபம் கொழுந்து விட்டு எரிவது போல் காமம் அதிகரிக்கவேச் செய்யும். ஆனால் காமத்தால் ஆன்மாவை மாயை அழுத்தமாய¢போர்த்துக் கொள்ளும் என்பதை உணர்கிறேன். 

நான் ஆன்மாவைப் பிரகாசம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.. அதற்காக நான் தவம் செய்ய போகிறேன். முழு மனதோடு சொல்கிறேன்.. நீ வா.. இதோ உன் இளமை என்று , பூருவிடம் இளமையைத் திருப்பிக் கொடுத்து விட்டு, விடைபெற்றான். 

கடுமையாய் தவம் புரிந்தான். அவன் ஆன்மா ஒளிபெற்று சுடர் விட்டது.  அக்னி வளர்த்து அதில் உடலை செலுத்தினான். அவன் ஆன்மா பிரகாசமான ஒளியுடலுடன் சொர்க்கம் சென்றது. இந்திரலோகம், கந்தர்வலோகம், பிரம்மலோகம் போன்ற உலகங்களில் சஞ்சரித்தான். 

 தான் மேன்மையடைந்து விட்டோம் என்று  யயாதிக்கு இப்போது  கர்வம் தோன்றியது. 

இந்திரன் யயாதியிடம் கேட்டான்..  யயாதி, உன் உடலையே அக்னியில் உகுத்தாய். இப்படி ஒரு மனதிடம் பெற்ற ரிஷியை நான் பார்த்ததில்லை. உன்னைப் போன்றோர் உலகில் உண்டோ? 

இந்திரனே தன்னைப் பற்றி வியந்து கேட்டதும், இன்னும் அதிக பெருமையுடன் ஆம் இந்திரரே! அப்படி பட்ட பெருமை எனக்கு மட்டுமே உரியது என்றுதான் நான் நினைக்கிறேன். வேறு யாரும் என்னைப் போன்ற இப்படியொரு காரியத்தை செய்யத் துணிய மாட்டார்கள் என்று தற்பெருமையுடன் கூறினான். 

யயாதி, தற்பெருமை ஒருவனின் அனைத்துப் புண்ணியங்களையும் அழித்துவிடும். உன் மனதில் கர்வம் அதிகரித்ததால்  உன் புண்ணியங்கள் உன்னை விட்டு விலகுகிறது, இனி சொர்க்கத்தில் வாழும் தகுதி உனக்கில்லை. நீ கிழே விழக்கடவாய்! என்றான் இந்திரன். 

யயாதிக்கு தன் தவறு புரிகிறது. மன்னியுங்கள் இந்திரரே! நல்லவர்கள் மத்தியில் என்னை விழச் செய்யுங்கள் என்று வணங்கியவாறு கிழே விழுந்தான்.  

ஒரு நட்சத்திரம் ஒளியுடன் கீழ் விழுவதை காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நான்கு  இளைஞர்கள் பார்த்தனர்.  அவர்கள் வேறு யாருமல்ல, யயாதியின் மகள் வழி பேரர்கள். தவசீலர்கள், அஷ்டகன், பிரதந்தனன், வசுமான், சிபி என்கிற பெயர்களைக் கொண்டவர்கள்.

 அவர்கள் தன் பாட்டனாரை அடையாளம் கண்டு கொண்டனர். ஏன் எந்த வீழ்ச்சி என்று கேட்டனர்.

தற்பெருமை என்னை சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளிவிட்டது. நான் செய்த தவப் புண்ணியங்கள் என்னை விட்டு விலகிவிட்டன என்றான் யயாதி. 

நீங்கள் வருத்தப்படவேண்டாம். எங்கள் புண்ணியங்கள் அத்தனையும் உங்களுக்குத் தருகிறோம் மீண்டும் சொர்க்கம் செல்லுங்கள் என்றார்கள் நால்வரும் ஒரே குரலில்.  புண்ணியத்தை தானம் செய்து மாபெரும் புண்ணியவான்கள் ஆனார்கள். 

அந்த சமயத்தில் வானிலிருந்து ஐந்து விமானங்கள்  தரை இறங்கின. அவர்கள் ஐந்து பேரையும் இந்திரலோகம் அழைத்துச் சென்றன. 

 பணிவுடன் இந்திரனை வணங்கினான் யயாதி. தற்பெருமையும் மோசமானது  நம்மை கீழே இறக்கிவிடக்கூடியது என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறினான். 

அதன் பின்  நிரந்தரமான ஆனந்தத்தில் திளைக்க சதா இறை நினைப்பில் வாழ ஆரம்பித்தான்.    

Mathivanan

முத்துக்களும் பெண்களும்

   


பெண்மையின் மென்மையைப் பறைசாற்றி, அவர்களின் அழகினை மெருகேற்றும் வெண்மையானதோர்  அணிகலன், நவரத்தினமணிகளில் எளிமையானதும், விலை மலிவானதும்,  அதேசமயம் ஒப்புயர்வற்ற மிடுக்கினைத் தரக்கூடிய அணிகலன் இந்த முத்து மணிகளால்  செய்திட்ட அணிகலன்தான் . 

பெண்களின் முகத்தினை நிலவுக்கு ஒப்பிடும் கவிஞர்கள், அவர்களின் புன்னகையை சந்திரனுக்குரிய வெண்முத்தினுக்கு ஒப்பிடுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கவிஞர்களின் கற்பனையில் மட்டுமல்ல,  அறிவியல் ஆய்வுப்பூர்வமாகவும்  இந்த முத்துக்கள் பெண்களுக்கு ஏற்றதோர் அணிகலன்தான்.   

அழகினை அதிகரிக்கச் செய்யும் ரத்தினம்தான்.  பெண்களின் உடலுக்கு, உணர்வுக்குப் பொருத்தமான    மணிவகைதான். 

பெண்மையின் மென்மைக்கும் ,  அழகின் மேன்மைக்கும்,   சரும பொலிவிற்கும் இந்த முத்துமணிகள் சாதகமாய் அமைகின்றன. 

 முத்து என்றால் முழுமை என்றும் அழகு என்றும் நாம் பேச்சு வழக்கில்  குறிக்கிறோம். எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கின்றன என்றும் பேசும் வார்த்தைகள் முத்துமணி போல் அருமையாய் விழுகின்றன என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

முத்து அழகுக்கு இலக்கணமாய் சொல்லப்படுகிறது. இலக்கியத்தில் அழகின் ஒப்பீடாய் மொழியப்படுகிறது. 

உண்மையைச் சொல்லப்போனால் ஒரு பெண்மணியின் கழுத்தினில் இந்த வெண்மணிமாலை   இருக்குமானால் அது அழகின் அணிகலனாகிறது. அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

பனித்துளி ஒன்று சிப்பிக்குள் விழுந்து, விளைந்து முத்தாகிறது என்கிறது இலக்கியம்.

கால்சியம் கார்பனேட் , கார்பன் மற்றும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற தாதுக்கள் இணைந்தே முத்தாகிறது என்கிறது அறிவியல்.

 கடலில் சிப்பிகள் நிறைய இருந்தாலும் எல்லாச் சிப்பிகளிலும் முத்துக்கள் விளைவதில்லை. அதே போல் கடலில் மட்டுமல்ல, ஆற்றில் வாழும் சிப்பிகளிலும் முத்துக்கள் விளைகின்றன. 

அறிவியல் ஆய்வுப்படி முத்துக்களின் வளர்ச்சி என்பது கடலின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து, சிப்பியின் தரத்தை பொறுத்தும் அமைகிறது.

 சிப்பிக்குள் மட்டுமல்ல, சங்கிற்குள்ளும் நத்தைக்குள்ளும் கூட முத்துக்கள் விளைகின்றனவாம். இவை கரீபியன் கடலில் கிடைக்கின்றன.  இவை இளஞ்சிவப்பு வண்ணத்திலும், செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கின்றன.  

 யானை, பன்றி, பாம்பு, நாரையின் கழுத்து, திமிங்கலத்தின் தலை, மூங்கில் போன்றவற்றிலும் முத்துக்கள் கிடைக்கின்றன என்ற  இரத்தின சாஸ்திரம் குறிப்பிடுகிறது. 

ஆனால் இவை சாதாரணமாய் கிடைக்காது. தேவர்கள், முனிவர்கள் போன்றவர்களே இதை பெறும் தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது. 

சாதாரண மனிதர்கள் சிப்பியிலிருந்து விளையும் முத்தினையே பெறுகிறார்கள். 



 தற்போது  சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வளர்ப்பு சிப்பிகள் மூலம் முத்துக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன.  இது போன்ற செயற்கை முத்துக்கள் அதிக அளவில் பசிபிக் பெருங்கடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

அந்தக் காலத்திய அரசிகளிலிருந்து இந்தக் காலத்தில் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர்களின் மனைவிகள் வரை பலரும் இந்த முத்தினை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  

கிளியோபாட்ரா, இத்தாலிய மகாராணி மார்கரிட்டா, விக்டோரியா மகாராணி, போன்றோரெல்லாம் விலை உயர்ந்த முத்து நகைகளை அணிந்திருந்தனர் என்று வரலாற்று நூல்களில் குறிப்புகள் உள்ளன.  விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் 273 முத்துக்கள் இருந்தனவாம். 

 பண்டைய தமிழகத்தில் கொற்கை என்ற பாண்டியர்களின் துறைமுகம் முத்துக்குளிக்கும் துறைமுகமாகவும்,  உலகிற்கெல்லாம் முத்தினை விற்பனை செய்யும் துறைமுகமாகவும் இருந்ததாக வரலாற்று,  இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.  

கிரேக்கர், அராபியர், ரோமானியர், வெனிஸ் நாட்டு வியாபாரிகள் அனைவரும் கொற்கை துறைமுகம்  வந்து முத்துக்களை வாங்கிச் சென்றனராம்.   

 நம் இந்து மதத்தில் சந்திரனுக்குரிய ரத்தினமாக முத்து அமைந்திருக்கிறது. சந்திரனின் கதிரலைகளை ஈர்த்துக் கொடுப்பதில் முத்து பெரும் பங்காற்றுகிறது. 

 ஆண்கள் அணிந்தாலும், பெண்களுக்கே உரிய பிரத்யேகமான ரத்தினமாகவே முத்து கருதப்படுகிறது.  பெண்களுக்கு உடலியல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், கர்ப்பப்பை, கருத்தரிப்பு, மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வினை தரக்கூடியதாய்  இந்த முத்துமணி அமைகிறது என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

சந்திர கிரகத்தினால் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் முத்து மாலை அணிவது சிறந்தப் பரிகாரமாகும்.  

 மன படபடப்பு , நிம்மதியற்ற சூழ்நிலை, மன உளைச்சல் போன்ற சூழலில் அடிக்கடி மனம் பதறும் பெண்கள்  முத்துமாலையினை அணிவதினால் மனம் அமைதியடைகிறது. செயல்களில் நிதானம் உண்டாகிறது. தெளிவான சிந்தனை ஏற்படுகிறது. 

வயதான பெண்மணிகள் முத்துமாலையினை அணிவதால் அவர்கள் மனதில் நிம்மதி பிறக்கிறது. தியானம் செய்பவர்களாயின் அவர்கள் மனம் விரையில் அமைதியுற்று ஒருநிலைப்படுகிறது.  

ஆழ்கடலில் விளைகின்ற முத்துக்களுக்கு ஈர்ப்புத் தன்மை அதிகம். ரத்தினங்களில் வைரம் விலை உயர்ந்த ரத்தினமாகக் கருதப்படுகிறது. முத்து விலை மலிவானதாக இருக்கிறது. இருப்பினும் முத்துமாலை என்பது விலை மலிவாக இருந்தாலும் அதிக அளவில் நன்மைகளைச் செய்கிறது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.  

தன்னம்பிக்கையையும், மிடுக்கினையும் ,அறிவினையும், பொறுமையினையும் தரக்கூடிய ரத்தினமாய் இருப்பதால் மிக உயரிய   அரசாங்கப் பதவிகளில், நிறுவனத்தில் பொறுப்பு மிக்க அதிகாரிகளாய் இருக்கும் பெண்கள் முத்துமாலைகளையே தேர்ந்தெடுத்து அணிகின்றனர். 

வெளிநாட்டு தூதர்களின் மனைவிகள், ஜனாதிபதிகளின் மனைவிகள்,  உயரதிகாரிகளின் மனைவிகள் யாவரும் முத்துமாலைகளையே விரும்பி அணிகின்றனர்.  அவர்கள் மட்டுமன்றி  மாடல் அழகிகள், நடிகைகள் போன்றோர்களும் இந்த முத்துமாலைகளையும் , தோடுகள், வளையல்கள் போன்றவற்றையும் முத்துக்களினால் செய்து அணிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 

 பெண்களின் உடல் நலம் ,மனநலத்திற்கு மட்டுமன்றி , அழகினை மிகைப் படுத்திக் காண்பிப்பதற்கும் முத்து ஏற்றதொரு ரத்தினமாகவே திகழ்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.  

இலக்கியங்கள் கூறுவதைப் போல்,  பெண்களுக்கு முத்தினைப் போன்றதொரு சிறந்த ரத்தினம் வேறொன்றும் இருக்க முடியாதுதான். 

வாலி உன் புகழ் வாழி!

             



   பாட்டுக்களால் திரைப் பாட்டுக்களால்- பல
   பாடங்கள் சொல்லியப்  பாவலன்
   மெட்டுக்களால் மன மொட்டுக்களை -மெல்ல
   மலர்ந்திடச் செய்திட்ட மாயவன்

   கன்னித்தமிழ் அவன் கைவண்ணத்தில் -மணப்
   பெண்ணினைப் போலவே மிளிரும்
   வண்ணத்திரைப் பாட்டு வரிகளெல்லாம்- மேக
   மின்னலாய் உள்ளத்தில் ஒளிரும்
               
  ஏட்டினிலும் திரைப் பாட்டினிலும் -  அவன்
  தீட்டியச் செந்தமிழ் கோலங்கள்
  பாட்டல்லவே  வெறும் பாட்டல்லவே -அவை
  பாட்டாளி மக்களின் வேதங்கள்

  பழச்சாறெடுத்து மலைத் தேனெடுத்து- காதல்
  பாட்டென்று கலந்து கொடுத்தான்
  இளம்உள்ளங்களை  மெல்லக்கிள்ளிவிட்டு- அவர்
  இராத்திரித் தூக்கத்தைக் கெடுத்தான்

  சங்கத்தமிழ் நல் முத்தெடுத்து-  திரைச்
  சங்கதிக்குள் சொல்லிப் படித்தான்
  தங்கத்தமிழ் சொற் பூக்களினால் - பா
  மாலைகள் பலவும் தொடுத்தான்
       
  தெய்வப்பக்தியினை தேசப் பற்றுதனை - தன்
  பாட்டுக் களின்வழி விதைத்தான்
  தாய்ப்பாசத்தினை  தந்தை நேசத்தினை -நம்
  பிள்ளைகள் உணர்ந்திட வைத்தான்
           ‘   ‘  ‘
  எட்டைய புரத்துப் பாரதிபோலவே- வாலி
  ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்தான்
  பட்டையைக் கிளப்பும் பாட்டுத்தீயினால்- சாதிக்
  குப்பைகளைக் கூட்டி எரித்தான்
           
  எண்பதுவயதினை தாண்டிய போதிலும் - புதுச்
  சிந்தனை பூத்திடும் இளைஞன்
  கற்பனைஊற்றுகள் வற்றாத கலைஞன் - வாலி
  காலத்தை வென்றிட்டக் கவிஞன்

கொட்டும்மழையென கவிக் கொட்டியவாலி- விடை
பெற்றே வேறூர் சென்றும்விட்டான்
சுற்றும்பூமியிது  சுற்றும் காலம்வரை- தமிழ்
உள்ளங்களில் வாலி வாழ்ந்திருப்பான்.

எண்பதுவயது ஆனபின்னரும்- வாலி
என்றுமே வாலிபக் கவிஞன்
வார்த்தைக்குள் வசியம் வைக்கும் - புதுச்
சூத்திரம் அறிந்த முனிவன்

மதிவாணன்

Friday 8 November 2013

சனி பகவான் மகிமை

நன்மை தரும் சனி பார்வை!!

1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு.  அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.

3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார்.  அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. 

5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை  பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.

7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள்.  அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி.  அதாவது சத்தியம் தவறாதவரை.

8.  ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று. 

9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை  சனி நெருங்குவதே இல்லை. 

10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.

11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.  

தீமை தரும் சனி பார்வை 

1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம்.  உடனே பற்றிக் கொள்வார்.

2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது  பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

3.  முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும்.  எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.

4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.

5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள்.  தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார். 

6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.

7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள்.   ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.  

8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும். 

9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.

10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். 

11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார். 

12. அடுத்தவர் செறுப்பை அபகரித்து செல்பவர்களை பார்த்தால் சனிக்கு கொள்ளைப்பிரியம். உடனே அவர்களோடு சென்று விடுவார்.

13.  அறுந்த செறுப்பை தைத்துப் போடுபவர்களை பார்த்தாலும், கூடவே இருந்து தொல்லைப்படுத்துவார். 

Saturday 2 November 2013

சனி பாதிப்பில் இருந்து விடுபட சனி மந்திரம்

தசரதனுக்கு இருப்பு கொள்ளவில்லை.  அடுத்து நடக்கப்போவதை தடுப்பது எப்படி என்று மனம் தத்தளித்தது.  

அப்படி என்னதான் நடந்து விட்டது?

ஒட்டுமொத்த ஜோதிடர்களின் கருத்தை வசிட்டர் தன் வாயால் சொன்னதுதான் காரணம்.  

மன்னா.... சனிபகவான் கிருத்திகா நட்சத்திரத்தில் இருந்து, ரோகிணியை பிளந்து கொண்டு செல்லப் போகிறார்.  அதாவது இடப்பெயர்ச்சி.  

அந்த சகடபேதம் மட்டும் நடந்து விட்டால் நாட்டில் மழை பெய்யாது.  பயிர் வளராது.  பஞ்சம் தலைவிரித்தாடும்.  மக்கள் உண்ண உணவின்றி உயிர் விடும் நிலைமை வந்துவிடும்.

இச்செய்திதான் தீயில் உட்கார்ந்த மாதிரி திகைக்க வைத்தது தசரதனுக்கு.  என் கொடையின் கீழ் வாழும் கடைக்கோடி மனிதன் வரை கஷ்டம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள்.

வறுமை என்பது வார்த்தையில் இருக்குமே தவிர, வாழ்க்கையில் வராது.  அப்படி இருக்கையில் இப்படி ஒரு துயர் வரும் என்றால்?

வசிஷ்டரே.. இதை தடுக்க முடியாதா?

எப்படி முடியும் மன்னா?  சனி யாருக்கும் கட்டுப்பட்டவர் இல்லை.  ஆயுதம் ஏந்தாமலே அழிவை தரும் சக்தி அவருக்கு உண்டு.  நோக்கிய இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மூவர்களும் கூட சனி விஷயத்தில் சற்று யோசிப்பார்கள். 

காரணம், சனி காலசக்கரத்தை பிளக்கும் வல்லமை உள்ளவர்.

வசிஷ்டரின் இந்த வார்த்தைகள் தசரதனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏதாவது செய்து இந்த அநீதியை தடுத்தாக வேண்டும் என மனம் பரபரத்தது.

உடனே.. பத்துதிசையிலும் தங்குதடையின்றி செல்லும் தன் ரதத்தில் ஏறினான்.  ரதம் மின்னல் வேகத்தில் விண்ணில் ¢பறந்தது.  

நட்சத்திர மண்டலத்திற்குள் ஊடுறுவி, ரோகிணி மண்டலத்தை தசரதனின் ரதம் போய் சேர்ந்தது. 

அங்கே... கோடி சூரியன் கூடிவந்த மாதிரி ஒளி வெள்ளமாகய் சனிபகவான் காட்சியளித்தார்.  புஜபலபராக்கிரமத்தில் தசரதன் பலசாலி என்றாலும், தன்நிலை மறந்தான்.  எதிரில் இருப்பது யார் என்று கூட யோசிக்காமல், வில்லை எடுத்தான், நானை ஏற்றினான், சனியை குறிவைத்தான்.

தசரதா... ஈரேழு பதினான்கு லோகத்திலும் என்னை எதிர்க்கும் சக்தி எவருக்கும் இல்லை.  

   இருந்தும் உலக நலன் கருதி எமை எதிர்க்க துணிந்தாய்.  பிழை மறந்தோம்.  உன் துணிவை மெச்சினோம்.   என்ன வரம் வேண்டும் கேள்.

வில்லை எறிந்தான்.  தன்னை உணர்ந்தான்.  சாஷ்டாங்கமாக சனியின் காலில் விழுந்தான்.

சூர்யகுமாரா... உன்னால் சுபீட்சம் கெடக் கூடாது.  மழைவளம் பாதித்தால் மக்கள் நலன் பாதிக்கும்.  இதுதான் எனக்கு தரவேண்டிய வரம்.

அப்படியே ஆகட்டும்.  மழைவளம் சுரக்கும்.  மக்கள் இன்னல்படார் என்று வரமளித்£ர். மகிழ்ச்சியில் திளைத்த தசரதன் சனிபகவானை ஸ்தோத்திரங்களால் புகழாரம் சூட்டினான். அதுவே தசதரத ஸ்தோத்திரம் எனப்படும்.

யாருக்கெல்லாம் சனி பாதிப்பு இருக்கிறதோ, யாருக்கெல்லாம் ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனி, அல்லது சனி திசை நடப்பில் இருக்கிறதோ, அவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை   சனிக்கிழமையில் சொல்லி சனியை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.  

ஸ்ரீகணேசாய நம

அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
தசரத ரிஷி சனைச்சரோ தேவதா
த்ரிஷ்டுப் சந்த சனைச்சர
ப்ரீத்யர்தே ஜபே விநியோக தசரத உவாச

1. கோணாந்தகோ ரௌத்ரயமோத பப்ரு
க்ருஷ்ண சனி பிங்களமந்தஸௌரி
நித்யம் ஸ்ம்ரு தோ யோ ஹரதேச பீடாம்
தஸ்மை நம ஸ்ரீ ரவிநந்தனாய

2. ஸுராஸுரா கிம்புருஷோர கேந்த்ரா
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்தினேன
தஸ்மை நம ஸ்ரீ ரவிநந்தனாய

3. நரா நரேந்த்ரா பசவோ ம்ருகேந்த்ரா
வன்யாச்ச யே கீடபதங்கப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

4. தேசாச்ச துர்காணி வனானி யத்ர
ஸேனா நிவேசா புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

5. திலைர்யவைர்மாஷ குடான்னதானை
லோஹேன நீலாம்பரதானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

6. ப்ரயாககூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீ புண்ணியஜலே குஹாயாம்
யோ யோகினாம் த்யான கதோபி ஸி§க்ஷ்ம
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

7. அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்திதீயவாரே ஸ நர ஸுகீ ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோக ந புந ப்ரயாதி
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

8. ஸ்ரஷடா ஸ்வயம் பூர்வனத் ரயஸ்ய
த்ராதா ஹரீசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜு சாமமூர்த்தி
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

9. சன்யஷ்டகம் ய ப்ரயத ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை பசுபாந்தவைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக் யுக்த
ப்ராப்நோதி நிர்வாணபதம் ததந்தே

10. கோணஸ்த பிங்களளோ பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோ யம
ஸௌரி சனேச்சரோ மந்த
பிப்பலாதேன ஸம்ஸ்துத

11. ஏதாநி தச நாமாநி ப்ராதருத்தாய ய படேத்
சனைக்சரக்ருதா பீடா ந காசித் பவிஷ்யதி

இதி ஸ்ரீசனைச்சர ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

சனிபகவான் வரலாறு!!



உலகநாயகன் சூரியபகவானின் தர்மபத்தினி சமுக்ஞாவிற்கு இப்போதெல்லாம் ஒரே தர்மசங்கடம்.  

இல்லற வாழ்க்கைக்கு இடையூராக இருப்பதே சூரியனின் கடும் வெப்பம்தான்.  நெருங்கவே முடியாத நெருப்பாக இருப்பவரிடம் இருந்து கொஞ்சம் காலம் விலகி இருந்தால் என்ன?

இந்த எண்ணத்திற்கு சூரியன் சம்மதிக்க மாட்டார் என்பதும் தெரியும்.  தன் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பவர், தற்காலிக பிரிவிற்கு கூட தயாராக இருக்க மாட்டார்.  அதனால் அவருக்கே தெரியாமல் எதையாவது செய்தால்தான் உண்டு. 

இந்த சிந்தனையின் முடிவில் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டாள் சமுக்ஞா.  தன் தவசக்தியாலும், கர்பின் வலிமையாலும் தன்னைப் போலவே ஒரு பெண்ணை படைத்தாள்.  தன் நிழல் உருவாய். அவள்தான் சாயாதேவி. 

நிழல்பெண் வணங்கி நின்றாள்.  

சாயா... நான் சிறிது காலம் என் தந்தையார் வீட்டிற்கு சென்று வருகிறேன்.  அதுவரை என் உருவாய் இருக்கிற நீ, என் கணவருக்கு பிரியமான மனைவியாக இருந்து பிரியாமல் வாழ்ந்து வருவாயாக.  

என் குழந்தைகளை உன் குழந்தையாக பாவித்து அன்பு காட்டிவா என்று அறிவுரை வழங்கி விட்டு பிறந்தகம் சென்று விட்டாள். 

காலங்கள் கடந்தது.  

பத்தினி தர்மத்தில் இருந்து சற்றும் விலகாத சாயாதேவி சூரியனின் அன்புக்கு பாத்திரமானாள்.  இவர்கள் இனிய இல்லறத்திற்கு சான்றாக இருமகன்களும், இரு மகள்களும் பிறந்தார்கள். அதில் முதன்மையானவர்தான் சனிபகவான். 

நாட்கள் நகர்ந்தது.  வருஷங்கள் பலவானது.  இளைய பிள்ளைகள் வளர்ந்து வாலிபத்தை எட்டினார்கள். 

ஏனோ தெரியவில்லை.  சாயாதேவி முன்பு போல் இல்லை.  தன் பிள்ளைகளைகளுக்கு தாய்பாசத்தை காட்டியவள், மற்றதார பிள்ளைகளை மாற்றான்தாய் மனப்பான்மையோடுதான் பார்த்தாள்.   

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது யமன்.  தாயின் செயல் தவறென நினைத்தான்.  
தாயன்பு என்பது அனைவருக்கும் சமம்.  அப்படி இருக்க, சிலரை அன்புடனும், சிலரை வெறுப்புடனும் பார்ப்பது வேதனையாக இருக்கிறது என்று முடிவு செய்தான். 

இருப்பினும்...

தன் மனக்குறையை மறைத்துக் கொண்டு வாழ முடியாத யமன், ஒருநாள் தாயிடம் தர்க்கம் செய்தான். முடிவில் சாயாதேவியை காலால் எட்டியும் உதைத்து விட்டான்.     

வந்ததே கோபம் சாயாதேவிக்கு.  யமா... நீ செய்த பிழையை மன்னிக்கவே முடியாது.  தாயென்று தெரிந்தும் தவறிழைத்தாய்.  

ஓ... தெய்வமே... நான் பத்தினி என்பது உண்மையானால். நான் என் கணவருக்கு தூய்மையாக நடந்து கொண்டேன் என்பது உண்மையானால், எட்டி உதைத்த யமனின் கால் அழுகிப்போகட்டும் என்று சபித்தாள்.

பத்தினியின் சாபம் உடனே பற்றிக் கொண்டது.    யமனின் கால் அழுக தொடங்கியது.  செய்வதறியாது திகைத்த யமன் உடன் சூரியபகவானிடம் சென்று  நடந்ததை சொன்னான்.  

சூரியனின் நிலை தர்மசங்கடத்திற்கு உள்ளானது.  ஒருபுறம் பாசத்திற்கு உரிய மகன்.  இன்னொறுபுறம் அன்புக்குரிய மனைவி.  இதில் யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. 

இருப்பினும் தன் ஞான அருளால் நடத்தது என்ன என்பதை அறிந்து கொண்டார்.  சமுக்ஞா உருவில் இருப்பது வேறு பெண் என்பதையும் அறிந்து கொண்டார்.  

இதுநாள்வரை பத்தினி தர்மத்தில் இருந்து தவறாத சாயாதேவியை மன்னித்தார்.  

யமனிடம்... மகனே... சாயாதேவி உத்தமி.  அவள் இட்ட சாபத்தை விலக்கக் கூடிய சக்தி எனக்கு இல்லை.  உடன் பூலோகம் சென்று கோகர்ன மலையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் செய்.  

அவர் அருளால் சாபம் நீங்கும்.  அவரே உன் எதிர்காலத்தை தீர்மாணிக்கக் கூடிய நேரமும் வந்து விட்டது. தாமதம் செய்யாமல் உடன் செல்வாயாக, என்றதோடு நின்று விடாமல் கோகர்ன மலைக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார். 

யமனும் கோகர்ன மலையில் அமர்ந்து தவமும், தியானமும் செய்ய தொடங்கினார்.  யமனின் தவத்தை மெச்சிய சிவன் நேரில் தோன்றி வரமளித்தார். 

உன் தாயால் ஏற்பட்ட சாபம் இக்கணமே நீங்கி விடும்.  அதோடு தென்திசைக்கு உன்னையே அதிபதியாக நியமிக்கிறேன்.  அதோடு நீத்தார் உலகத்திற்கு நீயே பொறுப்பேற்று கடமையாற்றுவாய் என்று வரமளித்தார்.  

இதெல்லாம் கேள்வியுற்ற சனிக்கு கடும் கோபம் ஏற்பட்டது.  மூத்தவர் என்றால் முன்னுரிமை, இளையவன் என்றால் இளக்காராமா? அப்பாவின் செயலை எப்போதுமே மன்னிக்க முடியாது என நினைத்தார் சனி.

மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் போற்றத்தக்க அளவில், இந்திரபதவிக்கு இணையாக சையமனி பட்டனத்திற்கு தலைவனாக்க உதவிய தந்தையை வெறுத்தார்.

தானும் ஒரு அங்கீகாரத்தை பெறவேண்டும்.  தேவர்களும் மூவர்களும் போற்றத்தக்க அளவில் உயர வேண்டும் என்ற எண்ணம் சனிக்கு எழுந்தது.  தாயை வணங்கி தன் உள்ளக் கருத்தை மெல்ல எடுத்துரைத்தார்.

தாயே... மூத்த சகோதரன் ஒரு முன்மாதிரி ஆகிவிட்டார்.  நானும் அவரைப்போல் சீரும் சிறப்புடன் வாழவேண்டும்.  பெயரும் புகழும் பெற வேண்டும்.  

தெய்வப்பதவியும், உயர்நிலையும் அடைய அந்த சதாசிவனையே சரணடைய போகிறேன்.  அனுமதி தாருங்கள். 

சர்வமங்களம் உண்டாகுக.  உன் லட்சியம் வெல்லட்டும்.  மகனே.. நீ காசிக்கு சென்று லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துவா.  உன் பூஜையின் புண்ணிய பலனால் எண்ணியதை பெறுவாய். 

எவருக்கும் தலைவணங்காத உயர்பதவி பெறுவாய் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் சாயாதேவி.  காசியில் லிங்கப்பூஜை செய்ததின் பலனாய் அந்த முக்கண்ணன் ரிஷப மூர்த்தியாக காட்சியளித்தார்.  அந்த லோகநாயகனை, சர்வேஸ்வரனை, சதாசிவனை, சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்கினார் சனி.

மகனே.. உன் பக்தியை மெச்சினோம்.  நீ ஆதவனின் புதல்வனாக அவதரித்த காரணம் இன்று நிறைவேறப் போகிறது.  நீ நவக்கிரக பரிபாலனத்தில்  முக்கிய இடம் பெறுவாய். 

இன்றுமுதல் உன்னை ஆயுள்க்காரன் என்று அழைப்பார்கள்.  நீ பூஜித்த லிங்கம் உன் பெயரால் சனீஸ்வர லிங்கம் என்று உலகம் உள்ளளவும், உயிரின தோற்றம் உள்ளளவும் போற்றப்படும் என்று கூறி மறைந்தார்.

சூரியன் ஆத்மக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.  ஆத்மா என்றால் உயிர் என்று பொருள். 

உயிருக்கு பொறுப்பு வகிக்கும் சூரியனிடம் தீராத பகை கொண்ட சனி ஆயுள்காரகனாக வருவதால், அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என்கிற நிலையை சனிதான் ஏற்படுத்துகிறார்.

சனி ஆயுளை வளர்ப்பவராக இருந்தாலும், ஆயுளை முடிப்பதிலும், உயிரை கவர்ந்து சென்று,  ஊழ்வினை பலனுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்றை தருகிற பொறுப்பு அண்ணான யமனிடம் இருந்தாலும், அவரிடம் போட்டி போட்டுக் கொண்டு வாழும் காலத்திலேயே இன்ப துன்பத்தை தந்து மகிழ்வதில் சனிக்கு நிகர் சனியே. 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...