ads

Friday 6 December 2013

நாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆட்சி முறை!!


நமது நாட்டை சமீப காலமாக சீரழித்து வரும் போலி மதச்சார்பின்மை மற்றும் குடு்மப ஆட்சி முறை குறித்து, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலும், அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னருமான எஸ்.கே.சின்கா டெக்கான் குரோனிக்கில் நாளிதழில் எழுதியுள்ளார்.

சின்கா தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: மதசார்பின்மை என்பது ஐரோப்பிய முறையாகும். அரசில் தேவாலயங்களின் ஆதிக்கம் ஏற்படக் கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்ட முறை. 

ஒரே மதம் உள்ள ஐரோப்பிய நாடுகளில், அந்த மதத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அத்தகைய மதசார்பின்மை கொள்கையை நமது தலைவர்கள், அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதலில் ஏற்றுக் கொண்டனர். 

நமது அரசியலைமைப்புச் சட்டத்தில மதசார்பின்மை என்ற வார்த்தை முதலில் கிடையாது. பின்னர் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் இது சேர்க்கப்பட்டது.

மதச்சார்பின்மை என்றால் என்ன?:

மகாத்மா காந்தியை பொறுத்தவரையில் மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே ஆகும். இத்தகைய எண்ணமே அவரை நமது மிகப் பெரிய தலைவராக எடுத்துக் காட்டியது. 

அதே சமயம் நேருவின் மதசார்பின்மை கொள்கையானது மத ஆதிக்கம் இல்லாத அரசு என்ற ஐரோப்பிய கொள்கையாக இருந்தாலும், பிரிவினை காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித மனக்குறையும் ஏற்பட்டு விடக் கூடாது; 

இந்தியாவில் தாங்களும் சமமான குடிமக்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்; தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி விடக்கூடாது என்ற அடிப்படையில் இருந்தது.

நேரு ஆட்சிக் காலத்தில் மதக் கலவரம் எதுவும் நடந்ததில்லை; எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லாத, ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்தியாவில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. 

இஸ்லாமியர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டமாக அது இருந்தது. ஓட்டுக்களைப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமல்ல; ஏனென்றால், இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும், நேருவும் அவருடைய கட்சியும் வெற்றி பெறும் சூழல் அப்போது நிலவியது.

இஸ்லாமியர் நிலை: பிரிவினைக்கு காரணமான இரு நாடுகள் கொள்கைக்கு தாங்கள் பலியாகி விட்டதை இஸ்லாமியர்கள் உணர, நேருவின் இந்த சலுகைகள் காரணமாக அமைந்தன. 

இந்த உண்மை நிலையை உணர்ந்த இஸ்லாமியர் இடையே மத வேறுபாடும் கசப்புணர்வும் குறைய ஆரம்பித்தது. இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த நடிகர்களான மெஹருனிஷாவும், யூசுப் கானும் தங்களின் பெயர்களை மீனா குமாரி எனவும் திலீப் குமார் எனவும் மாற்றி கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் தங்களை மத அடையாளத்தை, பிரிவினைக்கு முன் இருந்தததை விடவும் கூடுதலாக காட்டிக் கொள்ள தயங்குவதில்லை. 

இந்தியாவின் பெரும்பான்மை சமுதாய கலாச்சாரத்துடன் தொடர்புடைய நமது தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பாடல் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ள, அன்றைய இஸ்லாமியர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 

ஆனால் இன்று இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுமானால், மதச்சார்பின்மை என்று கூறிக் கொள்ளும் சக்திகளிடமிருந்தும், அடிப்படை மதவாத சக்திகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.

தடம் மாறிய மதச்சார்பின்மை:

நேரு போன்று இல்லாமல், இந்திரா மத நம்பிக்கையற்றவராக இருக்கவில்லை; மதச் சடங்குகளை கடைப்பிடித்தார். அவரது மதசார்பின்மை ஓட்டு வங்கியை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருந்தது. 

நேரு காலத்தில், அரசு செலவில் இப்தார் விருந்து நடத்தப்பட்டதில்லை. ஆனால் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு நடத்துகின்றனர். மற்ற எந்த மதத்தின் விழாவையும் இது போன்று அரசு சார்பில் கொண்டாடுவதில்லை. 

தேசிய பாதுகாப்பும், தேசிய நலனும் போலி மதசார்பின்மைவாதிகளால் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்ட விரோதமாக குடியேறுவது, ஓட்டு வங்கிக்காக ஊக்குவிக்கப்படுகிறது. 

காஷ்மீரிலும் ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு எதிராக மென்மையான போக்கே கடைபிடிக்கப்படுகிறது. அதேசமயம் காஷ்மீரில் வாழும் பண்டிட்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 20 ஆண்டு ஆன பின்னரும் இன்றும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.

எது மதவாதம்?: 

இஸ்லாமிய தலைவர்கள் பலரைக் கொண்டுள்ள பா.ஜ.,வை மதவாத கட்சியாக ஒதுக்கி வைத்து, தீண்டத்தகாத கட்சியாக நடத்துகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மதவாதக் கொள்கையைக் கொண்டுள்ள முஸ்லீம் லீக், மஜ்லிஸ் இ லிதிஹதுல் முஸ்லீமின், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கட்சி போன்றவற்றை, மதசார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு கவுரவிக்கிறது. 

பிரதமர் மன்மோகன் சிங்கோ அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, இஸ்லாமிய இனத்தவர்களின் வளர்ச்சிக்கே தனது ஆட்சியில் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். 

அவருக்கு இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் பற்றியோ அவர்கள் பின்தங்கி இருப்பது பற்றியோ கவலையில்லை. 2008ம் ஆண்டு டில்லியின் துவாரகா பகுதியில் ரூ.22 கோடி அரசு செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. 

அதே ஆண்டு அமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு ரூ.2.2 கோடிக்கு குத்தகைக்கு விடப்பட்ட, வெறுமையாக கிடந்த 100 ஏக்கர் வனப்பகுதி, மதவாதிகளைத் திருப்தி செய்வதற்காக திரும்பப் பெறப்பட்டது. 

போலி மதசார்பின்மை பேசுபவர்களின் போக்கை விவரிக்க இது போன்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். உண்மையான மதசார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி வழங்குவது; எவரையும் திருப்தி செய்ய முயலாதது.

குடும்ப ஆட்சி முறை:

நமது நாட்டின் மற்றொரு துயரம், பரம்பரை ஆட்சி முறையை நோக்கிச் செல்வதாகும். இது ஜனநாயக ஆணி வேரை அழி்த்து, அரசியலில் பிரபுத்துவ முறையைக் கொண்டு வர வழி வகுக்கிறது. 

ஆளும் குடும்பத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டன. 

குடும்பத்தாரால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தாரையே கொண்ட ஆட்சி முறையால், நாடு பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க இருக்கிறது. இந்த பரம்பரை ஆட்சிமுறை நோய், புற்றுநோய் போன்று மற்ற அரசியல் கட்சிகளிடையேயும் பரவி உள்ளது.

இதை விட மிகவும் மோசமானது என்னவென்றால், இந்த பிரபுத்துவ கலாச்சாரம், ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அதிகாரிகளையும் ஆட்டுவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் அடிமைப்பட்டவர்களாக அதிகாரிகள் உள்ளனர். 

சமானிய மக்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விடவும் அதிக அளவில் அதிகார ஆணவத்தால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரம்பரை ஆட்சி முறை, முகஸ்துதி மற்றும் இடைத் தரகர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. 

ஆட்சியாளர்கள் அதிகார போதை காரணமாக, அனைத்தும் தங்களின் தலைமையில் நடக்கிறது என்ற எண்ணத்துடன் துணிச்சலாக செயல்படுகின்றனர். ஆட்சியாளர்கள் தவறே செய்யமாட்டார்கள்; 

அவர்கள் செய்வதெல்லாம் சரியானவையே என்ற போக்கும் உருவாகி உள்ளது. இந்த பரம்பரை ஆட்சி அதிகாரத்தை மீறி, நியாயமாக செயல்படும் துர்காசக்தி நாக்பால் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். 

பிரபுத்துவ ஆட்சி முறையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்போ, ஒரு அமைச்சரின் தனிப்பட்ட பொறுப்பிற்கோ மதிப்பில்லை. ஒரு திட்டத்திற்கு ஒரு அமைச்சர் ஒப்புதல் கொடுத்து, எழுத்துபூர்வமாக அங்கீகரித்த பிறகு, அந்த திட்டம் தவறென கருத்ப்பட்டால், அதற்காக அமைச்சரைத் தண்டிப்பதில்லை; அதிகாரிகளே தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே.

ராகுல் நடத்திய நாடகம்:

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கிரிமினல் அரசியல்வாதிகள் தொடர்பான அவசர சட்டத்தை நியாயப்படுத்தி பத்திரிக்கையாளரிடையே பேசிக்கொண்டிருந்தபோது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் திடீரென நுழைகிறார்; தனது கட்சி சகாக்களால் கொண்டு வரப்பட்ட அவசரசட்டத்தை முட்டாள் தனமானது என விமர்சித்து, அதை கிழித்தெறிய வேண்டும் என்கிறார். முகஸ்துதி பாடும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நொடியிலேயே தங்கள் மனதை, பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கின்றனர். 

இளைய தலைவருக்கான ஜால்ரா ஓசை உச்சகட்டத்தை எட்டுகிறது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது? எந்த சூழ்நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்றெல்லாம் எவரும் கவலைப்படவில்லை. 

அந்த அவசர சட்டம், காங்கிரசின் உயர்மட்ட குழுவால் ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவராலும் ஏற்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் நன்கு அறிந்த ராகுல், அப்போது கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால், அந்த அவசர சட்டத்தை அவரும் ஆதரிப்பதாகவே கருதப்பட்டது.

அப்படி இருக்கும்போது ராகுல் தாமதமாக எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி தயக்கம் காட்டியதும், அதில் கையெழுத்திடக் கூடாதென ஜனாதிபதியை எதிர்கட்சிகள் வற்புறுத்தியதும், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால பாமர மனிதனின் இத்தகைய எண்ணங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.

நாடு விடுதலை பெறுமா?

மகாத்மா காந்தி, அடிமை மனப்போக்கிலிருந்து நாட்டை மீட்டு, கவுரவமான உயர் நிலையும் சுதந்திரமும் பெற உதவினார். 2014 லோக்சபா தேர்தலில் எத்தகைய முடிவு ஏற்படும் என்று இப்போது கூற முடியாது; இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த போலி மதச்சார்பின்மை மற்றும் பிரபுத்துவ ஜனநாயக முறையிலிருந்து நாட்டை விடுவிப்பார்கள் என நம்புவோமாக.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...