Follow by Email

Friday, 28 June 2013

இலங்கையில் கடை விரிக்கும் காவித்தீவிரவாதம்


 அது திறந்தவெளி அரங்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் சிறு மைதானம் நிரம்பி வழிகிறது. காவிதரித்த புத்த பிக்குகள் அமைதியாய் வீற்றிருக்க, அதற்கு பின்னால் மக்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைபேர் பார்வையும் மேடையை நோக்கி குவிந்திருக்கிறது.

இதோ மேடைக்கு வருக்கிறார் ஒரு புத்த பிக்கு. பூசின மாதிரி உடம்பு, புன்னகை தவழும் உதடுகள்தெய்வகளை சுமந்த முகம், குரலில் கூட மென்மையை குழைத்துஅரங்கம் அதிர சொல்கிறார்.

பிச்சு, பிச்சூனி...உபாசிக...உபாசிகாவனி.....பின்வத்துணி என்கிறார் சிங்களத்தில்.

அதாவது, புத்தர் வழிநடக்கும் பிக்குகளே ( ஆண் ) பிச்சூனிகளே ( பெண் ) தவமேற்றும் உபாசர்களே ( ஆண் ) உபாசிகாவனி ( பெண் ) புண்ணிய ஆத்மாக்களே ( பொது மக்கள் ) என்று பொருள்.மேலும் தொடர்கிறார். புத்தரின் அன்பு வழி போதனை, அறவழி செயல், நன்னடத்தை, தனிமனித ஒழுக்கம் பற்றி அவர் பேச்சு களைகட்டுகிறது. குழுமி  இருந்தவர்கள் மெய்மறந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உரை முடிந்ததுகூட்டம்  கலைந்தது, திரைவிலகியது, சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இப்போது முகத்தில் இறுக்கம், குரலில் கடுமை தொனிக்க இப்படி வருகிறது வார்த்தை.

இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது.

போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும்,  இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும்.


இத்தோடு நிற்கவில்லை அந்த ஆவேசம், இந்தியா நோக்கி திரும்புகிறது. கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக ஐந்தாயிரம்  பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போகிறோம் என்றும்  அதிரடி சரவெடிகளை கொளுத்தி போடுகிறார் இராவணா சக்தி அமைப்பின்  இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்.

ராவண சக்தி இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தினால், உள்ளூர் முஸ்லிம்களை குறி வைக்கிறது பலசேனா. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசினால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புத்த புக்குகளின் நடவடிக்கை உலகிற்கு உணர்த்துகிறது.


இனவெறி துவேஷ குற்றசாட்டில் இருந்து இன்னும் இலங்கை விடுபடவில்லை.  சொந்த நாட்டு மக்களையே சூரையாடி சுடுகாட்டிற்கு அனுப்பிய குற்றம், இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்னொரு துவேஷ நெருப்பு வளருவது இலங்கைக்கு ஆபத்து. ஆனால் தமிழர்களை கொன்று தனிபெருமை தேடிக்கொண்ட ராஜபக்ஷே அதை உணர்ந்தவராக இல்லை.

அமெரிக்க அதிபர்ன்னா பெரிய கொக்கா? ஒபாமாவே... உன்னை எச்சரிக்கிறேன். திருந்து...! இல்லாவிட்டால் திருத்துவோம் என்று,  தெரு முனை பிரச்சாரத்தில் வீரம் காட்டும் உள்ளூர் பேச்சாளர்கள் மாதிரி, தன் மந்திரி பிரதானிகள் பேசுவதை கண்டும் காணாமல் மௌனமாக இருக்கிறார் ராஜபட்ஷே.

ராவண சக்தி முழுக்க முழுக்க இந்திய எதிர்ப்பு நிலையை கையில் எடுத்திருக்கிறது. ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தால், தமிழ் படங்களை தடை செய் என்று மகஜரோடு  போகிறார்கள்.

இலங்கைக்கு ஆதரவாக இல்லையா, இந்திய பொருள்களை இலங்கையில் இறக்க விடமாட்டோம் என்று கடுப்பு காட்டுகிறார் அதன் தலைவர். இந்திய பொறியாளர்களுக்கு இலங்கையில் என்ன வேலை, வெளியே அனுப்பு என்று தொழிற்சங்க தலைவர் மாதிரி ஏகத்திற்கும் எரிந்து விழுகிறார்.


இலங்கை இந்தியாவிற்கு பணிந்து போகிறது என்று ஆளும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டுகிறார். உண்மையில் கோத்தபாய ராஜபக்சேயின் ஆசிர்வாதமும், ராஜபக்ஷேவின் மனசாட்சி என்றும் வர்ணிக்கப்படுவதுதான் ராவணசக்தி.

இலங்கையை பொறுத்தவரை மதம் பிடித்தாட்டுவது ஒன்றும் புதிதல்ல. 2002 ல் நார்வேயின் முயற்சியின்  பேரில் நடைமுறைப் படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக களத்தில் குதித்தது சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என்ற இரு அமைப்புகள்.

உள்ளூர் கிளர்ச்சியாளர்களான ஜே.வி.பி யை அரசு களையெடுக்க தொடங்கிய போது, அரசுக்கு ஆதரவாக களமிறங்கியது தேசம் பிரேமி என்ற பௌத்த இயக்கம்.இன்று,   யுத்த சுவடு இன்னும் மாறவில்லை. செத்த பிணங்களின் மேல் செயலிழந்து தவிக்கிறது தமிழினம். வறுமை, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழலில் சொந்த வீடுகளையும், விவசாய நிலங்களையும் சூரையாடுவதை தட்டிக் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழினம். 

இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது   மாதிரி இனவெறி பிடித்து கிளம்பி இருக்கிறது பொதுபல சேனா மற்றும் ராவணசக்தி.

அரச குலத்தில் பிறந்தும் அதை துறந்து ஞானம் தேடி போன புத்தரின் பாதையை பின்பற்றுவதாய் நடிக்கும்  புத்த பிக்குகள், அரசியல் வெறி பிடித்து அலைகிறார்கள். இலங்கையில் பௌத்த ஆட்சிமுறையை அமுல்படுத்தும் நோக்கத்தில், ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்கடத்தல், கொலைமிரட்டல், எச்சரிக்கை என்று காவி தாண்டவம் கடைவிரித்திருக்கிறது.

இதை சுட்டிக் கட்டினால் ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. தாக்குதல் நடத்தும் புத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளை பதிவதும் இலை. பெயரளவு விசாரணை, பெருமளவு உபசரிப்பு என்ற ரீதியில் கனிவு காட்டுகிறது காவல்துறை.


இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முதல் நெருப்பை கொளுத்திப் போட்டது பொதுபலசேனா.  அது ஹலால் சான்றிதழ். முஸ்லிம் உணவுவகைகளில் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை பௌத்தர்கள் தலையில் கட்ட முயல்வது தவறு என்று தான் முதல் முழக்கம் ஆரம்பமானது. 

அது வழிமாறி,  வழிப்பட்டு ஸ்தலங்களை  தாக்குவது, வியாபார நிறுவனக்களை சூரையாடுவது என்று திசைமாறிப் போகிறது.

புத்தம் சரணம் கட்சாமி என்று சமத்துவம் பேசிய பிக்குகள் பேட்டை ரவுடிகள் மாதிரி ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்வது கேவலத்தின் உச்சக்கட்டம்.

கடைசியாக கட்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது ராவணசேனா.  இப்போது பௌத்த அமைப்புகள் ஆடிக்கொண்டிருப்பது ஆபத்தான ஆட்டம் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுத்தால் குட்டி நாடு இலங்கை, உலக நாடுகளால் தட்டி வைக்கப்படுவது நிச்சயம்.


Post a Comment