ads

Tuesday 7 May 2013

பின்வாங்கியது சீனா - பின்னணி தகவல்கள் என்ன?




இந்திய எல்லைக்குள் ஊடுருவியது சீனா. ஊடுருவல் நடந்தது 10 கிலோமீட்டர் தூரம் என்று பகீர் தகவலாக பரபரத்தது மீடியாக்கள். 

இரண்டே நாளில் மேலும் 9 கிலோமீட்டர் முன்னேறிவிட்டது சீனா, இந்திய எல்லையில் 750 கிலோமீட்டர் பரப்பளவை அது ஆக்கிரமித்து கொண்டது என்று இந்தியா முழுவதும் கிடுகிடுத்து போனது. 

ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்திய சீன ராணுவத்திற்கு இடையே நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 4வது பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு  பின்  சீனா திடீரென தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

இது எங்கள் பகுதி என்று வாதிட்ட சீனாவிற்கு எங்கே இருந்து ஞானோதயம் வந்தது?



பலவீனமான மன்மோகன்சிங் என்று பரிகாசம் செய்த எதிர்கட்சிகளின் வாயடைக்க வைத்து, குண்டு வீசாமலே குழப்பம் தீர்ந்தது எப்படி? இதுதான் சுவாரசியம். 

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதை முன்னமே உணர்ந்து கொண்டது மத்திய அரசு. உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, மிரட்டல் அறிக்கை விடுவது எல்லாம் பிரச்சனைக்கு தீர்வாகாது. 

அதுவும் சீனா போன்ற ராணுவ பலம் கொண்ட நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது இந்திய நலனுக்கு நல்லதல்ல. அதற்கு ஏற்றார் போல் காய்கள் நகர்த்தப்பட்டன. 



ராணுவ மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் சீனாவின் இந்திய தூதருக்கு ஒரு விஷயம்   தெளிவுப்படுத்தப்பட்டது. 

இந்தியா சீனாவோடு நட்புறவையே   விரும்புகிறது. ஆனால் எங்கள் இறையாண்மையை மீறும் எந்த செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

இப்போது எல்லையில் நடந்திருப்பது அப்பட்டமான அத்து மீறல் என்பது உங்களுக்கே தெரியும். இருப்பினும் பொறுமை காக்கிறோம். இது எங்கள் பலவீனம் அல்ல. உங்கள் நிலையை திருத்திக் கொள்ள அவகாசம். 



மேலும்  உங்கள் ராணுவம் பழைய  நிலைக்கே மீண்டும் திரும்ப வேண்டும் என்பது எங்கள் எதிர்ப்பார்ப்பு. திரும்பா விட்டால் இந்தியா வேறு வகையில் யோசிக்க வேண்டியிருக்கும் என்பதே அவரிடம் சொல்லப்பட்ட தகவல்.

முதலில் சொல்லப்பட்டது சரி. வேறு வகையில் யோசிக்க வேண்டிவரும் என்று சொன்ன கடைசி வரிதான் கவனிக்க தக்கது. இதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன என்பது சீனாவிற்கு தெரியும். தேவையானால் ராணுவ நடவடிக்கையும் எடுப்போம் என்பதின் உள்அர்த்தம்தான் அது. 

போர் என்ற விஷ பரிட்சையில் இந்தியா உடனடியாக இறங்கி விடும் என்றெல்லாம் சீனா பயப்படவில்லை. அதுவும்  மன்மோகன் இருக்கும் வரை அந்த பயமும் அவசியமற்றது. ஆனால் உள்நாட்டு அழுத்தம் தாளாமல் இந்தியா ஆக்கிரமிப்பு வீரர்களை துரத்த முயலலாம். அப்படி நடந்தால் சீனாவிற்கு தர்மசங்கடமாக போய் விடும்.

அதோடு இம்மாதத்தில் நிகழ உள்ள தலைவர்கள் பயணம் வேறு குறுக்கே நின்றது.

மே 9ம் தேதி சீனா வரவுள்ள ,  வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது சீனப்பயணத்தை ரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது ஒரு புறமிருக்க, வரும் மே 20ம் தேதி இந்தியா வரவுள்ள சீனப்பிரதமர் லீ கெசியாங் பயணத்தை மிகவும் பாதிக்கும் என சீனா கருதியது.

இதைவிட முக்கியம்  பொருளாதார பாதிப்பு. போர் நடந்து ஏற்படும் பாதிப்பை விட, வர்த்தக உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டால் ஏற்ப்படும் பாதிப்பே அதிகம்.

நேரடியாக ரூ. 5 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி அளவிற்கு வணிக லாபம் கிடைக்க, மறைமுகமாக இந்திய சந்தையில் சீன பொருள் விற்பனை மூலம் இருமடங்கு வருமானம் சீனாவிற்கு வருகிறது.

சீன பொருளுக்கு இந்திய சந்தையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும். அதன் காரணமாகவும் சீன படைகள் பின் வாங்கி சென்றன.

மொத்தத்தில் சந்தை லாபம் கருதியே சண்டை தவிர்க்கப்பட்டிருக்கிறது.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...