Follow by Email

Sunday, 21 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!!


தமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர் ஆதரவு அலை அடிப்பதால், அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழர் விவகாரங்களை வைத்து அரசியல் செய்யும் நிலை. 

கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே பழைய கதைகளை அவ்வப்போது எடுத்து விடுகிறார்கள்.

தற்போது இலங்கை தமிழர்களுக்காக போராடும் பலர், இவர்கள் கூறும் கதைகள் நடந்தபோது பிறந்தே இருக்க மாட்டார்கள். வேறு பலருக்கு, அப்போது தமிழகத்தில் ஈழத் தமிழர் இயக்கங்கள் தொடர்பாக நடந்த பல சம்பவங்கள் தெரிந்தே இருக்காது.

தற்போது தமிழகத்தில் இலங்கை தமிழர் தொடர்பாக நடப்பது, 2-வது இன்னிங்ஸ் அரசியல். 1-வது இன்னிங்ஸில் என்ன நடந்தது? சில சம்பவங்களை தருகிறோம். படித்துப் பாருங்கள். இப்படியெல்லாம் நடந்ததா என் உங்களுக்கு இப்போது ஆச்சரியம் ஏற்படும்.

1984-ம் ஆண்டில் இருந்து தொடங்கலாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்க தம்பதிகளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் கடத்தியது. இலங்கையில் நடந்த அந்த விவகாரம் இந்தியாவில் பெரிதாக எதிரொலித்தது. இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். கருணாநிதி எல்லோரையும், அதில் தொடர்பு பட வைத்த கடத்தல் அது.

யாழ்ப்பாணத்தில் நடந்த கடத்தல், இந்திய அரசியலில் எப்படி புயலாக வீசியது? எதற்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். கருணாநிதி எல்லாம் காட்சிக்குள் வந்தார்கள்?

அமெரிக்கர்களை கடத்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் விதித்த நிபந்தனை அப்படி! 

அலன் தம்பதியினரை விடுதலை செய்ய வேண்டுமென்றால் 20 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.  50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கொடுக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்திருந்தார்கள்.

இதில் தமிழகம் எங்கே வருகிறது? 

நிபந்தனையின் அடுத்த பகுதியை பாருங்கள்: 20 அரசியல் கைதிகளையும் 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தையும் மே 14-ம் தேதி மதியம் 12 மணிக்கு முன்னர், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அலன் தம்பதியினர் கொல்லப்படுவார்கள்” என்பதே நிபந்தனை!

இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு திகைத்துப் போனது. சர்வதேச அளவில் இந்தியா மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மிகுந்த தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டார். 

கருணாநிதி இதை வைத்து அரசியல் செய்தார். மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை எல்லாமே ராப்பகலாக தமிழகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க தலைவர்களை தேடிக் கொண்டிருந்தன.

இடையே மற்றொரு வதந்தி. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட அமெரிக்கர்கள் படகு மூலம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு, தமிழக பண்ணை வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அந்த வதந்தி!

மேலும் பிரஷர்!

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தில் இருந்து மத்திய அரசு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துக்கு வேண்டுகோள் விடும் அளவுக்கு விஷயம் போனது. இந்திராகாந்தி கொடுத்தார் என ஒரு துண்டுச் சீட்டுடன் சென்னை வந்தார் மத்திய உளவுத்துறை ஐ.பி. அதிகாரி ஒருவர்!  

கேட்கும்போதே.. ஏதோ சூப்பர் த்ரில்லர் படம் பார்ப்பது போல உள்ளது அல்லவா? இந்த விவகாரமே அப்படித்தான். முழுமையாக, ஒரு தொடராக, தினம் ஒரு பாகமாக தருகிறோம். படித்துப் பாருங்கள்.

இப்படியான தொடருக்கு வாசகர்கள் ஆதரவு இருந்தால், மேற்கொண்டு தமிழகத்தில் ஈழ விடுதலை அமைப்புகளின் செயல்பாடுகளையும், அதனால் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் தொடர்ந்து வெளியிடுவோம்.

1984ம் ஆண்டு, மே மாதம் 10-ம் தேதி. யாழ்ப்பாணம்.

அன்றைய தினத்தில் அதுவரை அங்கு நடைபெற்றிராத முக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. இரு அமெரிக்கப் பிரஜைகள் கடத்தப்பட்டார்கள். அவர்களைக் கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினர்.

ஸ்டான்லி பிரைசன் அலன் (30) மேரி எலிசபெத் அலன் (18) ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்கள். பருத்தித்துறை என்ற இடத்தில் நடைபெற்ற நீர்த் திட்டம் ஒன்றில் அலன் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இந்த நீர்த்திட்டம் அமெரிக்க நிதியுதவியுடன் நடைபெற்றுவந்த திட்டம்.

இவர்கள் இருவரும் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் உளவாளிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகம் யாழ்ப்பாணத்திலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினருக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தொடங்கியது வினை!

யாழ்ப்பாணத்தி்ல் இருந்த அமெரிக்க தம்மதிகளை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் ஏன் கடத்தியது? அவர்கள் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் உளவாளிகள் என்ற சந்தேகம் ஏற்பட்டதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

அந்த நாட்களில், ஈழ விடுதலை இயக்கங்களில் வெளிநாட்டு நடப்புகளில் ஆர்வம் கொண்டிருந்த விடுதலை இயக்கங்கள் என்று பார்த்தால், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகிய இரு இயக்கங்களையும் சொல்லலாம். வேறு ஒரு விதமாகப் பார்த்தால் இந்த இரு இயக்கங்களும் லேசான கம்யூனிச அனுதாபிகளான இயக்கங்கள்.

இதனால் இயற்கையாகவே அவர்களுக்கு அமெரிக்க நடவடிக்கைகள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. தனது உளவாளிகளை உலகமெங்கும் நியமித்து உளவுப்பார்ப்பது ஒன்றும்  பரம ரகசியமல்ல. வெளிநாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் சி.ஐ.ஏ.வின் உளவாளிகள் வெவ்வேறு பணிகளில் இருப்பது போல இருப்பார்கள். அல்லது உள்ளூரில் நியமிக்கப்பட்ட ஆட்களும் உளவாளிகளாகவோ தகவல் சொல்பவர்களாகவோ இருப்பார்கள்.

இது ஒரு வழமையான நடைமுறைதான்.

தனிப்பட்ட நபர்களாக சி.ஐ.ஏ. அனுப்பி வைக்கும் உளவாளிகள் ஆசிய நாடுகளில் 90% இரண்டு வகையான போர்வைகளில் மறைந்திருப்பார்கள்.

முதலாவது, வெளிநாட்டு மூதலீடு செய்யப்பட்ட பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குள் இருப்பார்கள். இரண்டாவது வெளிநாட்டு நிதியுதவியில் நடைபெறும் ஏதாவது ஒரு வேலை திட்டத்துக்குள் இருப்பார்கள்.

அமெரிக்கர்களான அலன் தம்பதிகள் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க நிதியுதவியுடன் நடைபெறும் ஒரு வேலைத் திட்டத்தில் பணி புரிய வந்தவர்கள் என்பதால், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கு முதலில் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

அடுத்தபடியாக அவர்களால் செய்யப்பட்ட சில தொலைத் தொடர்பு நடவடிக்கைகள் இயக்கத்துக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். இதனால் அவர்களைக் கடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதில் மற்றுமோர் விஷயம் என்னவென்றால், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா அப்போது இலங்கையில் இருக்கவில்லை – தமிழகத்தில் இருந்தார்.  ஈ.பி.ஆர்.எல்.எப்.ன் முக்கிய தலைவர்கள் பலரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள்.

கடத்துவதாக எடுக்கப்பட்ட முடிவு, யாழ்ப்பாண மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பத்மநாபா போன்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதில் இன்னமும் குழப்பமான கூற்றுக்கள் இருக்கின்றன.

தமிழகத் தலைமைக்கு அறிவித்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில்தான் அலன் தம்பதியினரின் கடத்தல் நடைபெற்றது என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.

மற்றொரு தரப்பினர் சொல்வதன்படி, கடத்துவது என்ற முடிவு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ராணுவப் பிரிவு எடுத்த முடிவு என்றும், தமிழகத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். ராணுவப் பிரிவு ஆட்களுக்கு மாத்திரம் விஷயம் கூறப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

எப்படியோ கடத்தல், துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடைபெற்றது.

முதலில் அலன் தம்பதியினர் வசித்த வீட்டுக்குச் சிலர் சென்றிருக்கிறார்கள். தாங்கள் லோக்கல் லைப்ரரி ஒன்றுக்காக நிதி திரட்டுவதாகக் கூறி நிதி கேட்டிருக்கிறார்கள்.

இப்போது கையில் பணம் இல்லை, மறுபடியும் நாளை வருங்கள்” என்று அலன் கூறினார். ஆனால் உண்மையில் அவர்கள் நிதி திரட்ட வரவில்லை. வந்தவர்கள் இயக்க உறுப்பினர்கள். அலன் தம்பதிகளின் வீட்டை நோட்டம் விட வந்தவர்கள்.

முதலில் வந்தவர்கள் போய் ஐந்து நிமிடத்தில் மேலும் சிலர் வந்திருக்கிறார்கள்.  வந்தவர்கள் மொத்தம் 11 பேர்.

இவர்கள் கடத்துவதற்காக வந்தவர்கள்.

நீங்கள் கடத்தப்படுகிறீர்கள். பேசாமல் எங்களுடன் ஒத்துழைத்தால் உங்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது, என்று அலன் தம்பதிகளிடம் கூறப்பட்டது.  வந்தவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்திருக்கிறார்கள்.  வன்முறை எதுவும் பிரயோகிக்கப்படவில்லை.

அலன் தம்பதிகளின் கண்கள் கட்டப்பட்டு, கார் ஒன்றில் ஏற்றப்பட்டு அந்த இடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு


Post a Comment