Follow by Email

Tuesday, 23 April 2013

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!! -3


யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை அடைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ராமேஸ்வரத்துக்கு அருகில் தங்கச்சிமடத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்க அனுதாபி ஒருவரின் (இவர் இந்தியர்) வீடு தமிழக காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. அலன் தம்பதியினரை அங்கே தேடினார்கள்.

அலன் தம்பதியினர் அங்கே இல்லை.

இது நடந்த 1984-ம் ஆண்டு, தமிழகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரின் பயிற்சி முகாம்களும் இருந்தன. வெவ்வேறு நகரங்களில் அரசியல் அலுவலகங்களும் இருந்தன. தவிர, தனி வீடுகளிலும் அந்த இயக்கத்தினர் தங்கியிருந்தார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் பெரிய பயிற்சி முகாம் கும்பகோணத்தில் இருந்தது. அந்த முகாமையும், மதுரை, திருச்சி, கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரின் வீடுகளையும் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டது தமிழக காவல்துறை.

அலன் தம்பதியினர் அங்கேயும் இல்லை.

ஆரம்ப கட்டத் தேடுதல்கள் தொடங்கி சுமார் 5 மணிநேரத்தில் தமிழக கியூ பிராஞ்ச் ஒரு முடிவுக்கு வந்தனர் – அலன் தம்பதியினர் தமிழகத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. அவர்கள் இலங்கையில்தான் எங்கோ மறைத்து வைத்திருக்கப்பட்டிருப்பார்கள்.

அடுத்த கட்டமாக சென்னையிலிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தீர்மானித்தது கியூ பிரான்ச்.

அதே நேரத்தில், மத்திய உளவுத்துறை ரா, கடத்தப்பட்டவர்கள் நிச்சயமாக தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, எங்கோ அடைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பியது. இதனால் தொடங்கியது, இரு உளவுத்துறைகளுக்கும் இடையே இழுபறி! 

ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்சிகள் கொடுத்த விதத்தில் மத்திய உளவுத்துறை ராவுக்கும் மாநில உளவுத் துறை கியூ பிராஞ்ச்சுக்கும் இடையே நிறைய இழுபறிகள் இருந்தன. 

ஈழத்தமிழர் விவகாரத்தில் இரண்டு உளவுத்துறைகளும் ஆளை ஆள் மட்டம்தட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதனால், மாநில உளவுத்துறை அலன் தம்பதியினர் தமிழகத்தில் இல்லை என்று கூறியதை மத்திய உளவுத்துறை நம்ப தயாராக இல்லை.

கடத்தி வரப்பட்டவர்கள் தமிழகத்தில்தான் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  அந்த விஷயம் தெரிந்தும் அதை மறைப்பதன் மூலம் மாநில உளவுத்துறை தங்களைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்புகிறது என்று நினைத்தது மத்திய உளவுத்துறை.

இதற்கிடையே வேறு ஒரு குழப்பமும் நடந்தேறியது.

சென்னையில் இருந்த மத்திய உளவுத்துறை ரா உயரதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான, மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான டெலோ இயக்க உறுப்பினர் ஒருவரை அணுகினார்.

“அலன் தம்பதிகள் கடத்தல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்” என்று விசாரித்தார்.

டெலோவின் உளவுப்பிரிவுக்கு இந்தக் கடத்தல் பற்றிச் சில விபரங்கள் தெரிந்திருந்தன.  டெலோ உறுப்பினர் அந்த விபரங்களைக் கூறியிருக்கிறார்.

“கடத்தப்பட்டவர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்கள் தமிழகத்துக்குக் கொண்டு வந்திருப்பார்களா?” என்று ரா அதிகாரி கேட்டிருக்கிறார்.

“அது தெரியாது.  ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் 3 படகுகள் இன்று அதிகாலை மிக வேகமாக இந்திய கரைக்கு வந்து சேர்ந்ததாக எங்களிடம் தகவல் இருக்கிறது. அதில் வந்தவர்களில் அலன் தம்பதியினர் இருந்தார்களா என்பது தெரியாது” என்றிருக்கிறார் டெலோ உறுப்பினர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற நாட்களில், விடுதலைப் புலிகள், பிளாட், டெலோ ஆகிய இயக்கங்களின் படகுகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போய்வந்து கொண்டிருந்த எண்ணிக்கையில் ஈ.பி.ஆர்.எல்.எப். படகுகள் வந்து போவதில்லை என்பது மத்திய உளவுப் பிரிவு அதிகாரிக்குத் தெரிந்திருந்தது.

திடீரென ஒரே நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் மூன்று படகுகள் வந்து சேர்ந்திருக்கின்றன என்று கூறப்பட்டதும், நிச்சயமாக அதில் அலன் தம்பதியினரைத்தான் கொண்டு வந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.

தான் நம்பியதை டெல்லிக்கும் அறிவித்து விட்டார் அந்த ரா உயரதிகாரி. குழப்பம் தொடங்கியது.

அடுத்த சில நிமிடங்களில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை. போனில் அழைத்தார்.

தொடரும்
- கட்டுரையாளர் : ரிஷி விறுவிறுப்பு




முந்தைய  பதிவுகள் 


கருணாநிதி, எம்.ஜி.ஆர்., இந்திராவுடன் ஈழ விடுதலை இயக்கங்கள்!!
அத்தியாயம்  இரண்டு 

இதையும் படிங்க

இந்தியாவின் தலைநகரம் ஸாரி.... தலைக்குனிவு நகரம் டெல்லி!!

திருப்பதி ஏழுமலையான் பரமசிவனே!



Post a Comment