Follow by Email

Saturday, 8 December 2012

மேத்தா கவிதைகள்



தன்னந்தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும்

உண்ணக் கனிவகைகள்
உறங்கிவிழ மர நிழல்கள்
எண்ணக் களஞ்சியத்தை
எழுதிவைத்த புத்தகங்கள்

வீசும் இளங்காற்று
விசிறிவிடத் தென்னைமரம்
ஆசைப் பறவைகளின்
அன்றாட புதுகீதம்

போதும் இவை எனக்கு
போய்விடட்டும் என்கப்பல்
ஏதும் துயரமில்லை
எள்ளளவும் துன்பமில்லை....

வாழ்க எனும் வாழ்த்து
வாராத பூமியது !
வீழ்க எனும் முழக்கம்
மேவாத சீமை அது

வஞ்ச மனமுடைய
மனிதர்களின் காற்சுவடு
நெஞ்சை மிதிக்காத
நிம்மதியின் இல்லமது

ஆர்த்து முரசொலிப்போர்
அங்குவர மாட்டார்கள்
பார்த்துக் கெடுப்பவர்கள்
பக்கம் வர மாட்டார்கள்

தன்னந் தனித் தீவில்
தடமறியாத் தொலைத்தீவில்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும்

போதும் உலகோடு
போராட்டம் செய்ததெல்லாம்...
மீதம் எதுமிலை
வேண்டியது தனிமைநிலை

தன்னத் தனித்தீவில்
தமிழ்க் கவிதை நூல்களுடன்
என்னை இறக்கிவிட்டு
என்கப்பல் போய்விடட்டும்

Post a Comment